articles

img

அமெரிக்கப் போர் இயந்திரத்தின் தற்காலிகத் தளர்வு: ஒரு பகுப்பாய்வு - ச. வீரமணி

அமெரிக்கப் போர் இயந்திரத்தின் தற்காலிகத் தளர்வு: ஒரு பகுப்பாய்வு

2026 பிப்ரவரி 28 அன்று ஈரான் உயர்  தலைவர் அயதுல்லா அலி காமேனியை இலக்கு வைத்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிய ஆக்கிரமிப்புப் போரின் இறுதி விளைவு என்னவாக இருக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.

ஈரானின் இராணுவ மற்றும் சிவில் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்குப் பிறகு,  மார்ச் 21 அன்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது வழக்கமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளம் வழியாக மற்றுமொரு மிரட்டலை விடுத்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்வ தற்கான தடைகளை ஈரான் நீக்காவிட்டால், முன்னெப் போதும் இல்லாத அழிவைச் சந்திக்க நேரிடும் என்றும்,  ஈரானின் ஒட்டுமொத்த மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தகர்ப்போம் என்றும் அவர் எச்சரித்திருந்தார். ஆனால், இந்த மிரட்டலுக்கு அஞ்சாத ஈரான்,  அமெரிக்கா அத்தகைய நடவடிக்கையில் இறங்கினால் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த  எரிசக்தி கட்டமைப்புகளையும் தரைமட்டமாக்குவோம் என்று பதிலடி கொடுத்தது. இதன் விளைவாக, மார்ச் 23 அன்று டொனால்டு டிரம்ப் பணிந்துபோகும் தொனி யில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவ தால், அடுத்த ஐந்து நாட்களுக்கு ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை ஒத்திவைக்குமாறு ‘போர்த் துறைக்கு’ (Department of War) உத்தர விட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இராணுவ ரீதியாகப் பார்த்தால், இது ஒரு வெற்றியல்ல; மாறாக இது ஒரு ‘தற்காலிக இடைநிறுத்தம்’ (Pause) மட்டுமே. தவறான கணக்கீடுகளும்  மொசாத்தின் தோல்வியும் இந்தக் கூட்டு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது, இஸ்ரேலும் அமெரிக்காவும் இது சில மணிநேரங்களில் அல்லது சில நாட்களில் முடிந்துவிடும் என்று மார்தட்டின. ஈரானுக்குள் நிலவிய ஆளும் அரசுக்கு எதிரான அதிருப்தியைப் பயன் படுத்தி, ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியைத் தூண்டலாம் என்று இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் (Mossad) தவறாகக் கணக்கிட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் எதற்காக உழைத்தேனோ, அந்த இலக்கை அடைய அமெரிக்கப் படைகள் இப்போது  களமிறங்கியுள்ளன என்று நேதன்யாகு பெருமிதம் கொண்டார்.

ஆனால், ஈரானிய மக்களின் தேசபக்தி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இவர்களின் கணக்கீடுகளைத் தலைகீழாக மாற்றியது. மறுபுறம், அமெரிக்காவிற்குள்ளேயே ஜனாதிபதி  டிரம்ப்பின் இந்தத் தன்னிச்சையான போர்ப்போக்கிற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க நாடாளு மன்றத்தின் அனுமதியின்றி, தெளிவான இலக்குகளின்றித் தொடங்கப்பட்ட இந்தப் போர், அமெரிக்க அரசியலமைப்புக்கு விரோதமானது என்று ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்லாது, குடியரசுக் கட்சியினரின் ஒரு பிரிவினரும் விமர்சித்த னர். குறிப்பாக, தெற்கு ஈரானில் 165 பள்ளி மாணவிகள் அமெரிக்காவின் ‘டோமாஹாக்’ (Tomahawk) ஏவு கணையால் கொல்லப்பட்ட கொடூரம் அம்பலமானது, அமெரிக்காவின் போலி மனித உரிமை முகமூடியைக் கிழித்தெறிந்தது. இது அமெரிக்காவின் ஏகாதிபத்திய முகம் எவ்வளவு விகாரமானது என்பதையே உலகுக்குக் காட்டியது.

ஈரானின் பதிலடியும்  உலகப் பொருளாதாரச் சரிவும் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் இலக்கு வைத்துப் படுகொலை செய்யப்பட்ட போதி லும், டெஹ்ரானில் அரசு வீழ்ந்துவிடவில்லை. ஈரானின் பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் திறம்படச் செயல்பட்டன. அமெரிக்க-இஸ்ரேலிய படைகளின் விலையுயர்ந்த அதிநவீன ஆயுதங்களை, ஈரானின் மலிவான ட்ரோன்களும் ஏவுகணைகளும் எதிர்கொண்டது ஒரு யுத்த தந்திர வெற்றியாக அமைந்தது. தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடு களை, குறைந்த செலவிலான ஆயுதங்கள் மூலம் ஈரான் திணறடித்தது நவீனப் போர் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகும்.

ஈரான் தனது பதிலடியை இஸ்ரேலிய குடிமக்கள் பகுதிகள் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் வரை நீட்டித்தது. எல்லா வற்றிற்கும் மேலாக, உலக எரிசக்தி போக்குவரத்தின் மையமான ‘ஹோர்முஸ் ஜலசந்தியை’ ஈரான் மூடியது உலகப் பொருளாதாரத்தின் மீது விழுந்த பேரிடி யாகும். உலகின் 20 சதவீத எரிசக்தி விநியோகம் முடங்கியதால், கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டதுடன், உலகப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

இது வெறும் பிராந்தியப் போர் அல்ல, மாறாக உலகையே அதலபாதாளத் திற்குத் தள்ளும் பொருளாதாரப் போர் என்பதை வல்லரசுகள் உணரத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா வின் பொருளாதாரத் தடைகள் ஈரானைத் தனிமைப் படுத்தத் தவறியது மட்டுமல்ல; மாறாக அமெரிக்கா வையே ஒரு சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. டிரம்ப்பின் முரண்பாடுகளும் இந்தியாவின் நிலையும் கடந்த ஏழு நாட்களில் டிரம்ப்பின் சமூக ஊடகப் பதிவுகளைப் பார்த்தாலே, அவர் எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார் என்பது புரியும்.  சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் எழுந்த கடும் எதிர்ப்பால், அவர் ஒரு தப்பிக்கும் வழியைத் தேடிக் கொண்டிருந்தார். அமெரிக்காவின் முன்னாள் நட்பு  நாடுகள் கூட இந்தப் போரில் இணைய மறுத்து விட்டன.

டிரம்ப் ‘ஒத்திவைப்பு’ பற்றிப் பேசிய சில  நிமிடங்களிலேயே, ஈரான் அதை அடியோடு மறுத்தது. எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும், ஆக்கிரமிப்பு மீண்டும் நிகழாது என்ப தற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஈரான் அறிவித்தது. ஈரானின் இந்த விட்டுக்கொடுக்காத மனநிலை, அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் யூத இனவெறிக் கூட்டாளியும் நிகழ்த்திய இந்த அழிவுப்  பாதையில், தன்னை ‘விஸ்வகுரு’ என்று அழைத்துக் கொள்ளும் நரேந்திர மோடியின் பங்கு மிகவும் பரிதாபகரமானது.

மார்ச் 23 அன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, இந்தியாவின் இராஜதந்திரத் தோல்விக்குச் சான்றாகும். இந்தப் பேரழிவுக்கான மூல காரணத்தை ஒப்புக்கொள்ளாமல், அதனால் இந்தியா சந்திக்கும் சிரமங்களை மட்டுமே அவர் பட்டியலிட்டார். நேதன்யாகுவை ‘அபாயகரமாகக்’ கட்டித் தழுவியதும், இஸ்ரேலைத் தந்தைநாடு என்றும் இந்தியாவைத் தாய்நாடு என்றும் வர்ணித்த தும், டிரம்ப்பின் அத்துமீறல்களைக் கண்டிக்காமல் மவுனம் காத்ததும் இந்தியாவின் கொள்கை ரீதியான இராஜதந்திரத்தைப் படுகுழியில் தள்ளியுள்ளன. லெனினின் ‘ஏகாதிபத்தியம்’ குறித்த கோட்பாடு களை மோடி அரசு புரிந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

சீனாவின் பொருளாதார வலிமையால் உருவாகி வரும் ‘பன்முனை உலக’ச் சூழலை எதிர்கொள்ள முடியாத  அமெரிக்காவின் விரக்தியே இந்தத் தீவிர வலதுசாரித் தாக்குதல்களுக்குக் காரணம். அமெரிக்கா தனது மேலாதிக்கத்தைத் தக்கவைக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், உண்மையில் அதன் வீழ்ச்சியையே துரிதப்படுத்துகின்றன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது, வரலாற்றில் நாம் கட்டிக்காத்த அணிசேராக் கொள்கையைத் துடைத்தெறிந்துவிட்டு, ஏகாதிபத்தியத்தின் பின்னால் ஓடுவது இந்தியாவின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது.

இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியா தனது அனைத்து இராஜதந்திர வாய்ப்புகளையும் ஏகாதிபத்தியக் கூடை யில் (Imperialist basket) வைப்பது தற்கொலைக்குச் சமமானது. இந்தப் பாடத்தை உணராமல் இந்தி யாவால் உலக அரங்கில் தப்பிப் பிழைக்க முடியாது.  அமைதியை மீட்டெடுக்கவும், இராணுவ அத்துமீறல் களை நிறுத்தவும் நாம் உலகளாவிய அளவில் உழைக்கும் வர்க்கத்தோடு ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்ச் 29, 2026  தமிழில்: ச. வீரமணி