articles

img

பாஜகவை தோற்கடிப்பதுதான் எங்களது முன்னுரிமை கடமை... ஸ்டேட்ஸ்மென் இதழுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேட்டி....

கேள்வி:  மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் மிகப்பெரியசவால் உள்ளது. கேரளாவில் நீங்கள் ஆட்சியில் இருப்பதால் மக்களிடம் அதிருப்தி உள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க.ஆகிய இரண்டு கட்சிகளும் உங்களுக்கு எதிராக களத்தில் உள்ளன?

பதில்: கேரளாவைப் பொறுத்தவரை ஆட்சியில் இருந்த காரணத்தால் ஏற்படுகிற அதிருப்தி இடது ஜனநாயக அரசாங்கத்துக்கு எதிராக மக்களிடம்  இல்லை. சமீபத்தில்  நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில்  இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது.மக்களிடம் அதிருப்தி இருந்திருந்தால் அது சாத்தியமாகி இருக்காது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை அமலாக்கியுள்ளது. எதிர்கட்சிகளிடம் குறிப்பாக ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் கேரளாவுக்கான தொலை நோக்கு திட்டங்கள் இல்லை. எனவே களம் இடது ஜனநாயக அணிக்கு சாதகமாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக ஆளும் கூட்டணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை எனும் கேரளத்தின் போக்கை இந்த முறை நாங்கள் மாற்றும் முக்கிய தருணத்தில் உள்ளோம்.மேற்கு வங்கத்தை பொறுத்தவரை ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கும் இடையே இருமுனை போட்டி என்று கூறப்பட்ட நிலையில் இப்பொழுது மும்முனைப் போட்டி என்பது தெளிவாகி உள்ளது. திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்களின் அதிருப்தி மிக கடுமையாக உள்ளது. இந்த அதிருப்தி வாக்குகள் முழுவதும் பா.ஜ.க.வுக்கு சென்றதை நாடாளுமன்ற தேர்தல்கள் வெளிப்படுத்தின. அப்போது இடது முன்னணியும் காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டன. ஒரு பொருத்தமான அரசியல் மாற்று அன்று மக்கள் முன்னே இருந்திருக்கவில்லை. எனவே அந்த தேர்தல்கள் பா.ஜ.க- திரிணாமுல் இடையேஇருமுனைப் போட்டியாக அமைந்தது.

இப்பொழுது இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் மட்டுமல்ல; இந்திய மதச்சார்பற்ற முன்னணி உட்பட பல சக்திகள் ஓரணியில் திரண்டுள்ளனர். இது திரிணாமுல் - பாஜக இரண்டுக்குமே மிகப்பெரிய சவால்விடும் சக்தியாக உருவாகியுள்ளது. இடது ஜனநாயகமதச்சார்பற்ற முன்னணியின் மிகப்பெரிய முன்னுரிமை பா.ஜ.க.வை தோற்கடிப்பதும் அது அரசாங்கத்தை அமைப்பிலிருந்து தடுப்பதும் ஆகும்.இந்த நோக்கங்கள் நிறைவேற திரிணாமுல் காங்கிரசை தோற்கடிப்பது அவசியமாகிறது. ஏனெனில் திரிணாமுல் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள்தான் பா.ஜ.க.வுக்கு செல்கின்றன. இந்த அதிருப்தி வாக்குகளின் கணிசமான பகுதியை இடது ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி ஈர்க்கும். இதன் மூலம் பாஜக தோற்கடிக்கப்படுவதும் திரிணா
முல் வலுவிழந்து தனிமைப் படுவதும் சாத்தியமாகும்.

                                    ******************

தீர்மான சக்தி  தனி நபர்களா?  பிரச்சனைகளா?

கேள்வி :  பாஜகவின் பெரிய தலைவர்கள் ஏன் தமது பிரச்சாரங்களில் திரிணாமுல் காங்கிரசை மட்டும் விமர்சிக்கின்றனர்?

பதில்:வங்க தேர்தல் களத்தை இருமுனைப் போட்டியாக மட்டுமே சித்தரிக்க அவர்கள் முயல்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க. இரண்டுமே மும்முனைப் போட்டி என்பதைப் பார்த்து அச்சம்கொள்கின்றனர். எனினும்  இடது ஜனநாயகமதச்சார்பற்ற முன்னணி மாற்று உருவாகியிருப்பது இருமுனைப் போட்டி எனும் சூழலை மறுதலிக்கிறது.

                                    ******************

கேள்வி : இன்றைய சூழலில் மம்தா பானர்ஜி மற்றும் நரேந்திர மோடி போன்ற தனிநபர்களை சுற்றி அரசியல்இயங்கும் பொழுது இடதுசாரி ஜனநாயகமதச்சார்பற்ற சக்திகளின் கனவுகளை விற்பது உங்களுக்கு சாத்தியமாகுமா?

பதில்: தனி நபர்கள்தான் அரசியலை தீர்மானிக்கிறார்கள் என்ற கருத்தாக்கம் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது ஆகும். தான்செல்வாக்குள்ள தனிநபர் என்ற காரணத்தால்மோடி தேர்தல்களை வெல்வது இல்லை.பா.ஜ.க மற்றும் ஆர். எஸ். எஸ் ஆகியஅமைப்புகள் மிக ஆழமாக மதத்தின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்கியுள்ளன. இந்த பிளவுகள் அடிப்படையில்தான் மோடி தேர்தல்களில் வெல்கிறார். வாழ்வாதார பிரச்சனைகள்தான் மக்களை இயக்குகின்றன. நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த இடது முன்னணி மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. இவைதான் மம்தா பானர்ஜி தேர்தலில் வெல்வதற்கு காரணமாக இருந்தன. பின்னர் பா.ஜ.க.வின் அச்சுறுத்தல்களை சந்திப்பது என்ற போர்வையில் சிறுபான்மை மக்களை திரிணாமுல் காங்கிரஸ் தன் பக்கம் நிறுத்தி வைத்தது.எனவே சமூக பிரச்சனைகள் உட்பட வாழ்வாதார பிரச்சனைகள்தான் அரசியலை தீர்மானிக்கின்றன.நாங்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்வைக்கிறோம். வேலையின்மை/ வேலையிழப்பு/அதிகரிக்கும் பசி/பட்டினி/விலைவாசி உயர்வு இவைதான் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கின்றன. இவைதான் நாங்கள் முன்வைக்கும் பிரச்சனைகள். இவைதான் மக்கள் மீது தாக்கத்தைஉருவாக்கும். வாழ்வாதாரப் பிரச்சனைகள்அடிப்படையில்தான் மக்கள் இயங்குவர்.சில தனி நபர்கள் இந்த பிரச்சனைகளுடன் சேர்ந்து பயணிக்கலாம். ஆனால் அடிப்படையில் தீர்மானிக்கும் சக்தி வாழ்வாதார பிரச்சனைகள்தான்!தனிநபர்கள் அல்ல! 

                                    ******************

மோடியின்  வாக்குறுதிகளுக்கு அர்த்தம் உள்ளதா?

கேள்வி:  “தங்க வங்கத்தை” உருவாக்குவோம் எனவும் “உண்மையான அரசியல் மாற்றத்தை தருவோம்” எனவும் சாதாரண மக்களுக்கு “ஊழலற்ற வளர்ச்சி அளிப்போம்” எனவும் மோடி வாக்குறுதி தந்து இருக்கிறாரே?

பதில்:  மோடி வாக்குறுதிகளுக்கு ஏதாவதுஅர்த்தம் உள்ளதா? “நல்ல காலம் வரும்” என்றார்! என்ன ஆயிற்று? “மேக் இன் இந்தியா” என வாக்குறுதி தந்தார். ஆனால் தொழில் வளர்ச்சி கீழ்நோக்கி வீழ்ந்து கொண்டுள்ளது. “ஊழல் இல்லாத இந்தியா” என மோடி வாக்குறுதி அளித்தார். அவருடைய கூட்டுக் களவாணி முதலாளிகள் எப்படி சொத்துக்களை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள். மோடிக்கு மிகவும் நெருக்கமான ஒரு கூட்டுக்கொள்ளை முதலாளி கொரோனா காலத்திலும் சொத்துக்களை அபரிமிதமாக சேர்த்தார் எனும் செய்தி இன்று வெளிவந்துள்ளது.

இந்த தேர்தல் பத்திரங்கள் என்பது என்ன?அரசியல் ஊழலை சட்டப்பூர்வமாக்குவதுதான் தேர்தல் பத்திரங்கள்! பி.எம். கேர்ஸ் நிதி என்பது என்ன? ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி வெளிப்படைத்தன்மை இல்லாமல் பூடகமாக உள்ளது. இதனை தணிக்கை செய்யவும் இயலாது. இத்தகைய நிதி என்பது முறைகேடு இல்லாமல் வேறு என்ன?ஊழலை அகற்றுவேன் என்ற வாக்குறுதியும் நல்ல காலம் வரும் என்ற வாக்குறுதியும் என்ன ஆயிற்று? மோடியின் வாக்குறுதிகளை எவரும் நம்ப தயாராக இல்லை. “தங்க வங்கம்” என்பது வங்கதேசத்தின் முழக்கம். வங்கதேசம் தன்னை “தங்க வங்கம்”  என அழைத்துகொள்கிறது. “அனைவரின் வளர்ச்சி”-“அனைவரின் நம்பிக்கை” எனும் மோடியின் முழக்கம் எங்கே போனது? மோடியின் முழக்கங்கள் அனைத்தும் வெத்துவேட்டு என்பதை மக்கள் ஏற்கெனவே புரிந்துவைத்துள்ளனர். 

                                    ******************

கேள்வி: பா.ஜ.க.வின் உத்தி வெற்றி பெற்றது என்பதை நாடாளுமன்ற தேர்தல்கள் காட்டுகின்றனவே?

பதில்: பாஜகவின் உத்தி வென்றதாக கூற முடியாது. திரிணாமுல் ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வலுவான அதிருப்தியும் ஒரு மாற்று இல்லாத சூழலும்தான் பா.ஜ.க.வுக்கு பலன் தந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டன. எனவே அந்த தேர்தல் திரிணாமுல்/பா.ஜ.க. இடையே இருமுனைப் போட்டியாக உணரப்பட்டது. அதுதான் அன்றைய கள உண்மை நிலவரம்.

                                    ******************

“தேர்தல் எதேச்சதிகாரம்” என்பது என்ன?

கேள்வி: “தேர்தல் எதேச்சதிகாரத்தை” உருவாக்குவதாக பா.ஜ.க. மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இத்தகைய குற்றச்சாட்டு ஆட்சியில் இருக்கும் பொழுது பலர் மீது சுமத்தப்பட்டுள்ளதே!

பதில்: அதிகாரத்தில் இருக்கும்போது அரசியல் கட்சிகள் தம்மை வலுவாக ஆக்கிக்கொள்வது என்பதல்ல பிரச்சனை! அந்த அதிகாரத்தை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் பிரச்சனை! மோடியும் பா.ஜ.க.வும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? அரசாங்கத்தில் தாங்கள் இருக்கிறோம் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி நமது அரசியல் சட்டத்தை முழுமையாக சிதைக்க முயல்கின்றனர். அரசியல் சட்டம் உருவாக்கிய பல சுயேச்சையான அமைப்புகளை தமது ஏவலாள்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.மோடி இன்றைக்கு நாடாளுமன்றம்/நீதிமன்றம்/தேர்தல் ஆணையம்/மத்திய புலனாய்வு அமைப்பு/ அமலாக்கத்துறை ஆகிய சுயேச்சையான அமைப்புகளை என்ன செய்து கொண்டிருக்கிறார்?

சமூக ஊடகங்களையும்/விமர்சன ரீதியாக படைப்புகளை முன்வைக்கும் ஓ.டி.டி.எனப்படும் ஊடகங்களையும் கட்டுப்படுத்துவது என்ற பெயரால் எத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?உபா (UAPA)  எனப்படும் ஆள்தூக்கி சட்டம்அபரிமிதமாக பயன்படுத்தப்படுகிறது. சென்றஆண்டு மட்டும் 76% கூடுதலாக பாய்ந்துள்ளது.அரசாங்கத்தின் கருத்துக்கு மாற்றுக் கருத்து முன்வைக்கும் ஒவ்வொன்றும் தேசவிரோதம் என வகைப்படுத்தப்படுகிறது. வரைமுறை இல்லாமல் தேசத் துரோக சட்டம்பாய்கிறது. தங்களது அதிகாரத்தை மூர்க்கத்தனமாக தவறாக பயன்படுத்துகின்றனர். எனவேதான் அவர்கள் எதேச்சதிகாரவாதிகள் என அழைக்கப்படுவதற்கு முற்றிலும் தகுதியானவர்கள். தேர்தல்கள் அனைத்தும் என்பது ஜனநாயகம் என்பதற்கு மாறாக பணநாயகம் என்ற அளவுக்கு தவறாக மாற்றப்படுகிறது.

இன்று நாட்டில் பொதுவாக சுற்றில் உள்ள கூற்று என்ன தெரியுமா?

“தேர்தல்களில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்! ஆனால் ஆட்சி அமைப்பதுபாஜ க மட்டுமே!”

கோவா/கர்நாடகம்/மத்தியப் பிரதேசம் அருணாச்சல் பிரதேசம்/ஏனைய வடகிழக்கு மாநிலங்கள் என அனைத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. விலைக்கு வாங்கியுள்ளது. நேற்று ஒரு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு தாவிய பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக ஆகியுள்ளனர் அல்லது வேறு ஏதாவது பதவி மற்றும் நன்மைகளை பெற்றுள்ளனர்.

                                    ******************

இதுதான் தேர்தல் எதேச்சதிகாரம்

கேள்வி : சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள வேளாண் சட்டங்களும் ஊரடங்கின் பின்விளைவுகளும் எந்த அளவுக்கு இந்த சட்டமன்ற தேர்தல்களில் பிரதிபலிப்பை உருவாக்கும்?

பதில்: நிச்சயமாக பிரதிபலிப்பு இருக்கும்.அரசாங்கம் அமைக்க விரும்புகின்ற கட்சிகளிடம் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை நிராகரிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த சட்டங்களுக்கு மாறாக மாநிலசட்டமன்றங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்களை இயற்ற வேண்டும் எனும்கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இத்தகைய விவசாய ஆதரவு சட்டங்களை நாங்கள் எடுத்த முன்முயற்சி காரணமாக கேரள சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.

ஊரடங்கின் பொழுது மக்கள் அனுபவித்த துன்பங்களும் அதிகரித்து வரும் வேலையின்மையும் விலைவாசி உயர்வும் எல்லாமே இந்தத் தேர்தல்களில் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்களா எனும் கேள்வி ஒவ்வொரு கட்சி முன்பும் எழுப்பப்படுகிறது. எனவே இந்தப் பிரச்சனைகள் நிச்சயமாக தேர்தல்களில் வலுவான பிரதிபலிப்பை உருவாக்கும்.

                                    ******************

தமிழகம் நிராகரித்த புதிய கல்விக் கொள்கை!

கேள்வி: கூட்டாட்சி அமைப்பு மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன எனும்குற்றச்சாட்டை மாநிலங்கள் முன்வைக்கின்றன. இது தேர்தல் விவாதப் பொருளாக ஆகுமா?

பதில்: கேரளாவில் இது மிகப்பெரிய தேர்தல் விவாதப் பொருள். சட்டப்படி தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகை கூடகேரளா உட்பட மாநிலங்களுக்கு மறுக்கப்படுகின்றன. மாநில அரசாங்க உரிமைகள்ஆக்கிரமிக்கப்படுகின்றன. வேளாண் சட்டங்கள் என்பதும் மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால் இந்த உரிமைகளை மத்திய அரசாங்கம் பறித்துக்கொள்ள முயல்கிறது.தன்னிச்சையாக புதிய கல்விக் கொள்கைஅமலாக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் ஏனைய தென்னிந்திய மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை நிராகரித்துள்ளனர். ஏனெனில் புதிய கல்விக் கொள்கை மூலம்இந்தி திணிப்பதற்கு முயற்சி செய்யப்படுகிறது. எனவே கூட்டாட்சி பிரச்சனை என்பது நிச்சய
மாக தேர்தல் விவாதப் பொருளாக இருக்கிறது.

                                    ******************

இன்றைய அரசியலின் எதார்த்தம்!

கேள்வி: மேற்கு வங்கத்தில் நீங்கள்காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். ஆனால் கேரளாவில் காங்கிரசுடன் மோதுகிறீர்கள். பி.சி.சாக்கோ வெளியேறியதன் மூலம் காங்கிரசின் நம்பகத்தன்மை சிதைந்துள்ளது!

பதில்: காங்கிரஸ் தனக்குள் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் அரசியல் உடன்பாடுகாண்பதும் கேரளாவில் அதே காங்கிரசுடன் மோதுவதும் ஆகிய இதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்த சூழல். இதனை நாம் அனைவரும் உள்வாங்கிக் கொள்வது அவசியம். 2004 நாடாளுமன்ற தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் 61 இடங்களில் வென்றனர். இவற்றில் 57 இடங்களில் காங்கிரசை தோற்கடித்துதான் வெற்றி பெற்றோம். ஆனால் தேர்தலுக்கு பிறகு மன்மோகன் சிங் அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு தந்தோம். முக்கிய நோக்கம் பாஜக ஆட்சி அமையக்கூடாது என்பது!

இப்பொழுதும் உடனடி நோக்கம் என்பதுபாஜகவை தோற்கடிப்பதுதான்! அதனை ஏற்றுக்கொண்டு எங்களுடன் வருவதற்கு யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்! கேரளாவில் இதனை காங்கிரஸ் ஏன் செய்யவில்லை என்ற கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும், நாங்கள் அல்ல!

                                    ******************

கேள்வி: கேரளாவில் உங்கள் கட்சியில் சில பிரபலமானவர்கள் உட்பட 5 அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. என்ன காரணம்?

பதில்: இந்திய மக்கள் தொகையின் இளமைத் தன்மையை நாங்கள் பிரதிபலிக்கிறோம். இந்திய மக்களில் 70% பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.  கேரளாவின் வேட்பாளர்கள் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சராசரி வயதுதான் மிகவும் குறைவானது!

தமிழில்: அ.அன்வர் உசேன்