புதுதில்லி:
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாரதியஜனதா கட்சியின் கூலிப்படைக் கும்பல்கள்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் உட்பட எண்ணற்ற அலுவலகங்களை திட்டமிட்டு அடித்து நொறுக்கியும், தீக்கிரையாக்கியும் மிககொடூரமான வன்முறை - வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். இது பாஜகவால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மிக மோசமான, கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய, மாநிலம் முழுவதும்ஒரு பயங்கரத்தை உருவாக்குகிற கொடியவன்முறையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
இத்தகைய கண்டனக் கணைகளுடன், திரிபுராவில் நடந்துள்ள வெறியாட்டங்கள் குறித்து விரிவான முறையில் ஆதாரங்களுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு சீத்தாராம் யெச்சூரி புகார்க் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மற்றும் இடதுமுன்னணியின் மீது செப்டம்பர் 8 அன்று நடத்தப்பட்டுள்ள மிகவும் கோழைத்தனமான, அட்டூழியமான வன்முறை வெறியாட்டத்தைப் பற்றி தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மிகவும் திட்டமிட்ட முறையில், பாஜகநபர்கள் கொண்ட கும்பல்களால் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் உட்பட எண்ணற்ற அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஏராளமான அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன; தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. எமதுகட்சியின் உதய்பூர் சப்டிவிஷனல் அலுவலகம், கோமதி மாவட்டக்குழு அலுவலகம்,ஷேப்பாகிஜலா மாவட்டக்குழு அலுவலகம், விஷால்கர் சப்டிவிஷனல் கமிட்டி அலுவலகம், சந்தர்பஜார் சப்டிவிஷனல் கமிட்டி அலுவலகம், மேற்கு திரிபுராமாவட்டக்குழு அலுவலகம் மற்றும் சதார்சப்டிவிஷனல் கமிட்டி அலுவலகம் ஆகியவை முற்றிலுமாகச் சூறையாடப்பட்டு, சிதைத்து, எரிக்கப்பட்டுள்ளன. இதில் மிகமிகக் கடும் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது அகர்தலாவில் உள்ள எமதுகட்சியின் மாநிலக்குழு அலுவலகமாகும். வன்முறைக் கும்பல்கள் இந்த அலுவலகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில்புகுந்து அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அலுவலகப் பயன்பாட்டில் உள்ள இரண்டு கார்களை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அலுவலகத்தில் அமைந்துள்ள, திரிபுரா மக்களின் மகத்தான தலைவர் தசரத் தேவ் அவர்களதுசிலையை உடைத்து நொறுக்கியுள்ளனர். இதுமட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பல்வேறு தலைவர்கள், ஊழியர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன; தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
எமது கட்சியின் ஊடக அலுவலகங்களும் கூட இந்த வெறியாட்டத்திலிருந்து தப்பவில்லை. கட்சியின் நாளிதழான தேசர்கதாவின் அலுவலகங்கள் அடித்துநொறுக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கைகட்டி வேடிக்கைபார்த்துள்ளனர். கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு முன்பு வழக்கமாக சிஆர்பிஎப் வீரர்கள் சிலர் பாதுகாப்புக்கு இருப்பார்கள். பாஜக கும்பல்கள் தாக்குதலை துவக்குவதற்கு சரியாக ஒரு மணிநேரத்திற்கு முன்பாக இந்த வீரர்கள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளனர். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுக்காதது,இந்த வன்முறை மாநில அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பதை உணர்த்துகிறது. திரிபுரா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் ஆளும் பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் அந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வியிலேயே முடிகின்றன. இந்த நிலையில்தான் பெரும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை தடுத்து நிறுத்திடஎவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாகதாங்கள் தலையிட வேண்டுமென வலுவான முறையில் வலியுறுத்துகிறோம். திரிபுராவில் மாநில அரசாங்கமானது சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க வேண்டுமென்ற தனது அரசியல் அமைப்புச்சட்டப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு அப்பட்டமாகத் தவறியுள்ளது என்பதைத்தான் இத்தகைய தாக்குதல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அமைதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள அரசியல் சட்டப்பூர்வ உரிமைகளை மாநில அரசாங்கம் சிதைத்து அழித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இத்தாக்குதல்கள் அம்பலப்படுத்துகின்றன.
வன்முறையைத் தடுக்கவும், தாக்குதல்களில் ஈடுபட்ட கயவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் காவல்துறை முற்றாகத் தவறியுள்ளது; இந்தநிலையில் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளை அமலாக்கிட ஒன்றிய அரசு தலையிட வேண்டியது அவசியமாகும். எனவே தங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். (மேலும் விபரம் உள்ளே)