articles

img

ஒரு நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பை சீரழிக்கும் சூத்திரம்-நிலோத்பல் பாசு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

சமீபத்திய தேர்தல் சூழல்களில் ஆளும் பாஜகவின் வாய்ப்புகள் குறைந்து வரும் பின்னணியில், ஒரு நாடு, ஒரே தேர்தல் (ONOE) பற்றிய உரத்த சத்தம் மற்றொரு ‘ஜும்லா’ வாக தோன்றுகிறது. இது பாஜக தலைமையிலான ஆட்சியின் ஒரே நாடு, ஒரே வரி; ஒரே தேசிய மொழி போன்ற அதே மாதிரியான முழக்கங்களை எதிரொ லிக்கிறது. இருப்பினும், இதை வெறும் வீணான சொற்போராக தள்ளிவிட முடியாது; உண்மையில், இது தற்போது இந்திய மக்களை வாட்டி வதைக்கும் வாழ்வாதாரம் மற்றும் உயிர்வாழ்வின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பும் ஒரு அவசர முயற்சியாகும். இது ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக உருவான ஜன நாயக மற்றும் மதச்சார்பற்ற குடியரசு மீதான ஆழமான விரோதத்திலிருந்து எழுகிறது. மேலும், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து, தெற்கிலும் வடக்கிலும் பல மொழி வழி மாநிலங்கள் உரு வாக்கப்பட்டதை எதிர்த்து, மாநிலங்களை மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும் செயல்முறை மீதான குரோதத்தையும் இது பிரதிபலிக்கிறது. 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்க ளுக்கு சம தளத்தில், சுதந்திரமான மற்றும் நியாய மான தேர்தல்களை நடத்துவது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் அடிக்கல்லாகும். ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்து இந்த செயல்முறையை குழி தோண்டிப் புதைக்கிறது; ஏனெனில் இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசிய லமைப்பு ரீதியாக நிறுவப்பட்ட அதிகாரப் பரவ லாக்கத்தை புறக்கணிக்கிறது. ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற யோசனை, மைய அரசிடம் அதிகாரங்கள் குவி வதை ஆதரிக்கிறது; இது கூட்டாட்சி முறையையும் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அதி காரப் பரவலாக்கத்தையும் அச்சுறுத்துகிறது. 

பரிந்துரைகளின் முக்கியத்துவம்

உயர்மட்டக் குழுவின் அணுகுமுறை அதன் பணிக்கான குறிப்பு விதிமுறைகளின் முதல் புள்ளியி லிருந்தே தெளிவாகியது “இந்திய அரசியலமைப்பு மற்றும் பிற சட்டப்பூர்வ விதிகளின் கீழ் உள்ள தற்போ தைய கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சா யத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்து வதற்கான பரிந்துரைகளை ஆய்வு செய்து வழங்கு தல். அந்த நோக்கத்திற்காக, அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் நோக்கத்திற்காக திருத்தங்கள் தேவைப்படும் வேறு எந்த சட்டம் அல்லது விதிகளுக்கும் குறிப்பிட்ட திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைப்பது” - இதுதான் உயர்மட்டக் குழுவின் பணி.

எனவே, உயர்மட்டக் குழுவுக்கு, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் தேவையா என்பதை விவாதிக்கும் பணி வழங்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மாறாக, இது ஒரு முடிந்த காரியமாக முன்வைக்கப்பட்டது; மேலும் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்ப தற்கான விவரங்களை உருவாக்குவதே குழுவின் பணி. 

குழுவிற்கு தலைமை தாங்க முன்னாள் ஜனாதி பதியை நியமித்தது, டாக்டர் அம்பேத்கர் அடிக்கடி பேசிய “அரசியலமைப்பு நெறிமுறை”க்கு எதிரா னது. கூடுதலாக, இரண்டு அமைச்சரவை உறுப்பி னர்கள் மற்றும் அழைக்கப்பட்ட “சிந்தனைக் குழுக்க ளின்” சில உறுப்பினர்களை சேர்த்ததும் நோக்கப் பூர்வமானதே.

19 ஆயிரம் பக்க அறிக்கை

அறிக்கை 19,000 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இருப்பினும், அதில் செயல்பாட்டுப் பகுதி  சுமார் 200 பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள உள்ள டக்கத்தில் 1932 வாக்குரிமைக் குழு அறிக்கை, பல்வேறு சட்ட ஆணைய அறிக்கைகள், நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கைகள் மற்றும் அனைத்து மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்டங்கள் போன்ற பிற்சேர்க்கைகள் அடங்கும்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்க ளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான நேரம் மற்றும் நடைமுறைகளை நிர்ணயிப்பதற்கான தற்போ தைய அரசியலமைப்பு விதிகள் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிறுவிய 73வது மற்றும் 74வது அரசியலமைப்புத் திருத்தங்களின் நிறை வேற்றத்திற்கு வழிவகுத்த நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்தும் எந்தக் குறிப்பும் இல்லை.

இக்குழுப் பரிந்துரையின் உள்ளடக்கம் மற்றும் இறுதிப் பரிந்துரைகளில் அரசாங்கம் மற்றும் பாஜக வின் அரசியல் நோக்கங்கள் தெளிவாகப் பிரதி பலிக்கின்றன.

இது ‘ஜும்லா’ அல்ல

ஒரு அறிக்கையை ‘ஜும்லா’ (அதாவது, தேர்தல் கால மோசடி வாக்குறுதி) என்று அழைக்க, அது அத்தகையதாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாடு, ஒரே தேர்தல் சொற்றொடருக்கு அதுவும் இல்லை. உயர்மட்டக் குழு தானே தனது பரிந்துரைகளுக்கு குறைந்தபட்சம் பதினைந்து அரசியலமைப்புத் திருத்தங்கள் தேவைப்படும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளதால் இது தெளிவாகிறது. மேலும், தற்போதுள்ள சட்டங்களிலும் பல மாற்றங்கள் தேவைப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தற்போதைய அமைப்பு, பாஜக தனது ஆதரவு கட்சிகளை ஒன்றிணைத்தாலும், இந்த திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதை உணர்ந்த பாஜக தலைமை, எதிர்க்கட்சிகளை சம்மதிக்க வைத்தால் இதைச் செய்ய முடியும் என்று கூறி வருகிறது. இருப்பினும், எந்த முக்கிய அரசியல் கட்சியும் இந்த கருத்தையோ அல்லது முன்மொழிவுகளையோ ஆதரிக்கவில்லை என்பதை உயர்மட்டக்குழுவின் சொந்த பதிவுகளே காட்டுகின்றன. உயர்மட்டக்குழு வில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, அப்போதைய காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர். இருப்பி னும், ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணியின் அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றுவதற்காக இக்குழு முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முறையில் செயல்பட்டதைக் கண்டு, அவர் குழுவிலிருந்து விலகி, ஒருநாடு, ஒரே  தேர்தல் திட்டத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தினார்

உயர்மட்டக்குழு கூறுவது போல, ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் மூலம் ரூ. 5,000 கோடி சேமிக்கப்படும் என்பதே ஒரு நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கான நியாயப்படுத்தல். இருப்பினும், இந்த உரிமைகோரலை நிரூபிக்க குழு எந்த உண்மை யான ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. 

ஒரே நேரத்தில் தேர்தல்களை உறுதி செய்வ தற்காக, மக்களவையின் பதவிக் காலத்துடன் ஒத்தி சைக்க மாநில சட்டமன்றங்களின் காலத்தை குறைக்க உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. இது ஐந்தாண்டு கால பிரதிநிதித்துவ தேர்தல்களுக்கான அடிப்படை அரசியலமைப்புத் தேவையை மீறுகிறது. மேலும், தங்கள் தேர்தல் அறிக்கைகளை செயல்படுத்த அரசிய லமைப்பு ரீதியாக ஐந்தாண்டு காலம் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய உரிமையும் மறுக்கப்படும்.

கொள்கைகளின் தொடர்ச்சி குறித்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விட அழைக்கப்பட்ட நிபுணர்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நவதாராளவாத சூழலில் இருந்து உருவான மற்றொரு அம்சமாகும். இது தேர்தல் செயல் முறையை மக்களின் உணரப்பட்ட தேவைகள் மற்றும் தேவைகளில் இருந்து முற்றிலும் தனிமைப் படுத்தி, பொருளாதாரக் கொள்கை பற்றிய நவதாராள வாத கருத்தியல் முன்மொழிவுகளுக்கு உட்படுத்தும். இது அடிப்படையில் ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கையாகும்.

அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாநில மறுசீரமைப்புச் சட்டம்

மக்களவைத் தேர்தலில் 370 இடங்களையும், கூட்ட ணியுடன் சேர்த்து 400 இடங்களையும் கைப்பற்ற  வேண்டும் என்ற பாஜகவின் அழைப்பு தன்னிச்சையா னது அல்ல. நரேந்திர மோடியும் இந்த முழக்கத்தை எழுப்பினார். விரிவான அரசியலமைப்புத் திருத் தத்தை மேற்கொள்வதற்கான வழி இதுதான் என்று பாஜகவினர் பூனையை மூட்டையிலிருந்து வெளியே விட்டனர். இந்த முழக்கம் வாக்காளர்களின் பல்வேறு பிரிவினரிடையே, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்க ளிடையே, அச்சத்தை அதிகரித்தது; மேலும் “அரசியல மைப்பைக் காப்பாற்று, இந்தியாவைக் காப்பாற்று” என்ற எதிர்க்கட்சியின் அழைப்புடன் ஒத்திசைந்தது.

அரசியலமைப்பில் எதுவும் புனிதமானது அல்ல என்றும்; அரசியலமைப்பின் அடிப்படைக் கட்ட மைப்பை தொடக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் வாதத்திற்கு மாறாக, நாடாளுமன்றத்திற்கு (நிர்வாகத்திற்கு) எந்த ஷரத்தையும், பிரிவையும் திருத்தும் அதிகாரம் உண்டு என்றும் ஜக்தீப் தன்கர் இடைவிடாமல் வாதிட்டபோது, இது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல என்பது தெளிவானது.  அரசியல மைப்பை நாட்டின் ‘ஒரே புனித நூல்’ என்று மோடி நாடகப்பூர்வமாக புகழ்ந்து பேசியிருந்தாலும் கூட, அவர்களது சூழ்ச்சி அப்பட்டமாக அம்பலமானது.

ஆர்எஸ்எஸ்சும், ஒரு நாடு  ஒரே தேர்தல் முழக்கமும்

‘ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர்’ என்ற ஆர்எஸ் எஸ்சின் மைய யோசனை, மத்திய அரசிடம் அனைத்து அதிகாரங்களையும் குவிப்பதை நோக்கி கவனம் செலுத்துவது ஆகும்; இது, இயல்பாகவே ஜனாதிபதி ஆட்சி முறைக்கான முன்னெடுப்பில் முடிவடைகிறது. அரசியல் நிர்ணய  சபையின் நடவ டிக்கைகளிலிருந்து, ஜனாதிபதி முறை என்ற யோசனை தெளிவாக நிராகரிக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் அமைச்சரவை முறையையே தேர்வு செய்தனர்.

ஆனால், ஒரு நாடு, ஒரே தேர்தல் முன்மொழிவு, ஆர்எஸ்எஸ்சின் சிந்தனை முறையில் உள்ள அடிப்படை அம்சங்களை நடைமுறைப்படுத்தும் வழியை வகுக்கிறது. 

எனவே, சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரி யத்தில் வேரூன்றிய அரசியலமைப்புக் காரணங்க ளுக்காக மட்டுமல்லாமல், ஓர் ஒற்றையான, ஜன நாயகமற்ற, மதச்சார்புள்ள இந்துத்துவ ராஷ்டிராவை நோக்கி நகர்வதற்கான சூழ்ச்சிகரமான முயற்சியாக இருப்பதாலும் ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அக்.13  தமிழில் : ராகினி