articles

img

மோடியின் ஆட்சியில் கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்.....

ஒருவரது மனநலக் கோளாறுகள் நாட்டின் சமூக,பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உடலியல்விளைவுகளால்  உருவாகிறது.  பல பொதுவான மனநலகோளாறுகள் அதன் ஆபத்து காரணிகள் சமூக ஏற்றத்தாழ்வுகளுடன் பெரிதும் தொடர்புடையவை. 2008-ஆம் ஆண்டு  உலக பொருளாதாரத்தை  ஆட்டம் கொள்ளச்செய்த சர்வதேச சந்தையின்  தளர்வு  அதைத் தொடர்ந்து  2009ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வேலையின்மை,வருவாய் இழப்பு  அதிகரித்தது.  இதன் விளைவாக அந்தந்த நாடுகளில்  வாழும் மக்களுக்கு  மன அழுத்தம்   உளவியல்  கோளாறுகள் அதிகரித்தன என்று சமூக அறிவியலார், மனநல மருத்துவர்கள் கணித்தனர்.உலக சுகாதார அமைப்பின் 2017  அறிக்கையின்படி   7.5% அதாவது  9,51,01,062   இந்தியர்கள்  மனஅழுத்தம் மற்றும் கவலை கோளாறுகள் உள்ளிட்ட மன நலகுறைபாடு உள்ளவர்களாக  உள்ளனர். இவர்களில் 1,35,69,938இந்தியர்கள் உடல் நலம் இழந்து  நோயின்  சுமையோடு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ( உலக சுகாதார மதிப்பீடுகள் 2017- பக்கம் 20)இந்த எண்ணிக்கை    2020ஆம் ஆண்டில் 20  சதவீதமாகஉயரக்கூடும் என உலக சுகாதார  அமைப்பின் அறிக்கை  கருதுகிறது. (எகனாமிக் டைம்ஸ் 10.10.2019) கவலை தரும் இந்த தகவல்  2016 ஆம் ஆண்டு நமது டிஜிட்டல் சக்திமான்  நரேந்திரமோடியால்  அதிரடியாக மக்கள் மீது திணிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு,  ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு  பிறகு  வெளியிடப்பட்ட  ஆய்வறிக்கையில் உள்ளது என்பதை இப்போது  நினைவில் கொள்ள வேண்டும்.  சமூக அறிவியலின் பகுப்பாய்வில் சமூகத்தில் தனிமனிதனது உளவியல் பாதிப்புகள் மற்றும் உளவியல் நலம் அரசின்பொருளாதார தொழில் கொள்கைகளுடன் இணைந்தும் ஒவ்வொருவர் வாழ்விலும் இவைகளே  முதன்மை காரணிகளாகவும் உள்ளன.  

பொதுத்துறை வரமும்  தனியார் துறையின் சாபமும்
சமூகத்தின் உற்பத்திக் கருவிகள் உடமைகள்  அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஓய்வூதியம்,   காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை தனிமனித  மனநலம்,    சமூக அமைதி, நல்லிணக்கம் இவை  அரசின்    கொள்கைகளோடு இணைந்தும்  தொடர்புடையதாகவும் இருக்கும்.  நேரெதிராக நாட்டின் தொழில்துறை பொருளாதாரம்  நிதித்துறையின் கருவிகள்  இவைகளின் அடிப்படை கட்டுமானங்கள் கார்ப்பரேட் மயமாக்கப்பட்டால் தொழிலாளர்களை   வேண்டும்போது பணியில்அமர்த்தி விரும்பும்போது பணியிலிருந்து  துரத்தும்  எஜமானத்துவ முறை ஒப்பந்த முறை, தினக்கூலி தொகுப்பூதியம் போன்றபல  சுரண்டல் வடிவங்களில் நாட்டின் பெருந்திரள் உழைப்பாளர் கூட்டத்தை பணிப் பாதுகாப்பு இல்லா நிம்மதியற்ற  சூழலுக்குள் கொண்டு செல்லும். குறிப்பாக இளைஞர்கள், பெண்களின்  உடல் நலம், உள நலம்   மிக நெருங்கிய குடும்ப  உறவுகளும்   சீர்குலையும். நாட்டின் உற்பத்தியும் வளர்ச்சியும்  தடைபடும்.தொழில் அமைதி கேள்விக்குறியாகும்.  சமூகப் பதற்றம் அதிகரிக்கும். குற்றங்கள் பெருகும்.  

மோடியின் ஆட்சி  இந்தியாவின் துயரம்
2014ஆம் ஆண்டு  நரேந்திர மோடி  பிரதம மந்திரியாக  பொறுப்பேற்றதற்கு பிறகு வரலாறு காணாத அளவில் இந்தியாவில்  பொருளாதார சீரழிவும் நெருக்கடியும் ஏற்பட்டது.  ரிசர்வ்வங்கியின் 17.8.2018 நாளிட்ட  அறிக்கையின்படி நாட்டின்  சிறுகுறு நடுத்தர  தொழில்துறை 30,00,000-க்கும்  அதிகமானதொழில் அலகுகளைக் கொண்ட ஒரு பரந்த வலையமைப்பைக் கொண்ட துறையாகும். இத்துறை  11,10,00,000   பேரை உற்பத்தியில் பயன்படுத்துகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்   சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கும் இத்துறையில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு நடவடிக்கைகள் உற்பத்தி மற்றும்  கட்டுமானத் துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது என அந்த அறிக்கை கூறியது.   

 கோடிக்கணக்கான இந்திய இளைஞர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை  அப்போது இழந்தனர். 2011-2012  ஆண்டில்  தேசிய வேலைவாய்ப்பின்மை 2.7 சதவீதமாக இருந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு,  ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு ஜூலை 2017-இல்  இது 6.1 ஆக உயர்ந்தது. 2011- 12 ஆண்டில் நகர்ப்புற  ஆண்கள்  மற்றும் பெண்கள் வேலையின்மை முறையே 3 சதவீதமாகவும்    5.2 சதவீதமாகவும் இருந்தது ஆனால். 2017 ஜூலையில்  இது 7.1 ஆகவும் 10.8 ஆகவும் செங்குத்தாக உயர்ந்தது.( ஆதாரம் 2017-18 ஆண்டு தொழிலாளர் திறனாய்வு - பக்கம் 193- 194) விவசாயம்   கிராமப் பொருளாதாரம்    நசிவடைந்ததால்  லட்சக்கணக்கானோர் கிராமங்களிலிருந்து  பிழைப்பு தேடி நகரங்களுக்கு குடி பெயர்ந்த கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.  திடீர் மாற்றங்களைஏற்படுத்தக்கூடிய அதிரடியான அரசின் பொருளாதார  கொள்கைகள் இதன் விளைவாக உருவாகும்   தொழில்துறை  சீர்குலைவு பெரும் எண்ணிக்கையிலான வேலையின்மை  திடீர் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது.    இதன் விளைவாக    இந்திய இளைஞர்களின் மனநிலை பாதிப்பு  விகிதமும் அதிகரித்தது. 

 அராஜகமான   கொள்கை முடிவுகள்
 2019-இல் மோடி  இரண்டாம் முறையாக பொறுப்பேற்றதற்கு பிறகு   அரசுத்துறை பொதுத்துறை நிறுவனங்களான   துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு உற்பத்தி, தொலைத்தொடர்பு, மின்சாரம், ரயில்வே  மற்றும் நாட்டின் நிதித்துறை,  அடிப்படை கட்டுமானத்தின் கூறுகளாக இருக்கும் வங்கித்துறை,காப்பீட்டு போன்ற துறைகளை தனியார் மற்றும் அன்னிய மயமாக்கும் நாசகர  நடவடிக்கைகளை   அச்சப்படும் அளவிற்கு மோடி அரசு  மேற்கொண்டது. இவைகள்  நம் இளைஞர்களுக்கு  இட ஒதுக்கீட்டில்  அடிப்படையில் வேலை வாய்ப்பை   வழங்கி வந்தவையாகும்.

உலகின் மிகப்பெரும் நாட்டிற்கான   கொள்கை முடிவுகளை நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க வேண்டும் என்ற நெறி மரபுகளை  நரேந்திர மோடி  வேண்டுமென்றே புறக்கணித்தார். வளர்ச்சி, தேசியம் என்னும்  கவர்ச்சி கோஷங்களின்  பின்புலத்தில்கௌதம் அதானி  முகேஷ் அம்பானி பெருமுதலாளிகளின்    அசுரவளர்ச்சியை  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை போல   சித்தரிக்கும்  இரக்கமற்ற   கார்ப்பரேட்  கொள்கை  முடிவுகளை மோடி அரசு மேற்கொண்டது. அதே சமயத்தில்   நாடாளுமன்றத்தில்  முழுமையாக  விவாதித்து உருவாக்கப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒவ்வொன்றையும் பிஜேபி அரசு  எதேச்சதிகாரமாக  சீர்குலைத்து வருகிறது.   பல்வேறு மொழி, இன, மதப்பிரிவுகளில் உள்ள வாழும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வழங்கவேண்டிய  நாட்டின்  இட ஒதுக்கீடுகளை  நீர்த்துப் போகச் செய்துசமூக நீதியை சூனியமாக்கும்  முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

நம் இளைஞர்களின் எதிர்காலம்
குறைந்து  வரும் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும் பிராந்திய முன்னுரிமைகள் மறுக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். குறி்ப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புகள்  வஞ்சமாக மறுக்கப்பட்டு ரயில்வே, சுரங்கம், வங்கிகள்  உள்ளிட்ட துறைகளில்     பெரும்பாலும் வடமாநில இளைஞர்களுக்கு பணிகள் வழங்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் மோடி அரசின் வேளாண் விரோதச் சட்டங்கள் அமலாக்கப்பட்டால்   வேளாண் உற்பத்தியோடு ஊரக  வேலைவாய்ப்புகளும் பறிபோகும்  நிலை உருவாகி உள்ளது.   இப்படிப்பட்ட   ஒட்டுமொத்த பொருளாதார அரசியல் சூழலில்  பணி பாதுகாப்புள்ள நிரந்தர வேலை வாய்ப்புகள்இனி  இல்லை என்ற உணர்வுகளும் நிச்சயமற்ற எதிர்கால வாழ்க்கையை பற்றிய கவலைகள்  அழுத்தும்    உளவியல் கோளாறுகளும்  ஏழை நடுத்தரகுடும்பங்களைச் சார்ந்த இந்திய இளைஞர்களிடம் உருவாகி வளர்ந்து  வருகிறது.

ஆண்டுகள் தொறும் இந்திய இளைஞர்களின்  எதிர்கால வாழ்க்கை   பாதுகாப்பற்றதாக மாறிக்கொண்டே இருக்கிறது. 34 வயதிற்கு கீழுள்ள இந்திய இளைஞர்களின்  எதிர் நோக்கப்பட்ட ( உலக வங்கியால்)   எண்ணிக்கை 49 கோடியாகும். மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார அமைப்பின் மன நல  புள்ளிவிவரங்களை ஆதாரமாக கொண்டால்  இந்திய இளைஞர்களில் சரி பாதி பேர் 2030 ஆண்டின் இறுதியில் மனநலம்  பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது கவலைதரும்  செய்தியாகும்.    சதிகளின் மூலம்   மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக கபளீகரம் செய்யும் அதே நேரத்தில்  மத்தியில் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அதன் மாண்புகளையும் சிதைத்துக் கொண்டே வருவது  ஒரே ஆட்சி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற காவியிஸ்ட்டுகளின்  சதுரங்க   நகர்வுகளாகும். கேரளா, தமிழ்நாடு, அசாம்,  புதுச்சேரி, மே.வங்கம் மாநிலங்களின் தேர்தல் களத்திலிருந்த   தனித்தனி  சிக்கல்களை பயன்படுத்திக் கொண்டு     சகலவிதமான தந்திரங்களையும்  துரோகங்களையும் வழக்கம் போல பிஜேபி அரங்கேற்றியதை சமீபத்தில் கண்டோம்.    இத்தேர்தல் முடிவுகள் வந்த பின்னரும் அம்மாநிலங்களில் விளையாடுவதற்கு பிஜேபிதயாராகவும் உள்ளது.

மோடியின் எக்கனாமிக்ஸ்
 வேளாண் விரோதச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர்  போராட்டங்கள்  பிஜேபி செல்வாக்கு செலுத்தும் மாநிலமக்களிடையே  மோடிக்கு எதிரான  மன உணர்வை  உருவாக்கியுள்ளது. என்றாலும்   நாடு முழுவதும் பிஜேபி-க்கு  எதிரான போராட்டங்களை  அந்தந்த மாநில அரசியல் சூழலுக்கேற்ப ஒருங்கிணைக்க  வேண்டியது   வரலாற்றுக் கடமை .  காப்பீடு, வங்கிகள் ,ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், எரிசக்தி பாதுகாப்பு உற்பத்தி என அனைத்துத் துறைகளையும் அரசுத்துறை பொதுத்துறைக்கு மீண்டும் முழுமையாக  மீட்டுக்  கொண்டு வருவதன் மூலம் இடஒதுக்கீடு சமூகபாதுகாப்புடன் கூடிய  நிரந்தரவேலை வாய்ப்புகளை நம் இளைஞர்களுக்கு வழங்கமுடியும். எதிர்காலத்தைப் பற்றிய அச்சமில்லா நம்பிக்கை உருவாகும்போதுதான் நமது இளைஞர்களின் உளவியல் ஆற்றல்  மேம்படும்  என்பதுடன்  நாட்டின் வளர்ச்சிக்கான மிகப்பெரும் பங்கினைஅவர்களிடமிருந்து பெறமுடியும். ஆனால் இச்சமூக அறிவியல் அதன்  பலன்களைப் பற்றி யெல்லாம் பிஜேபியினருக்கு எப்போதுமே கவலையிருந்ததில்லை.

கௌதம் அதானி முனையிலிருந்துதான் புறப்படும் மோடியின்  எக்கனாமிக்ஸ் எலக்ட்ரான்கள் முகேஷ் அம்பானியின் மறுமுனை புரோட்டான்களோடு சேரும்போது மட்டும்தான்  இந்தியாவின்  வளர்ச்சி வானிலிருந்து குதிக்கும்  என  டிஜிட்டல்  சக்திமான்மோடியும் அவரது நாக்பூர் எஜமானர்களும் நம்புகின்றனர். அதற்காகவே எல்லாவற்றையும் முடிவு செய்கின்றனர். இந்தியதொழில்  மற்றும் பொருளாதாரத் துறைகளில் சர்வ நாசத்தை ஏற்படுத்திவரும் இப்போக்கு  நாட்டை 50 ஆண்டுகள் பின்னே கொண்டு சென்றுள்ளது.     இந்தியாவையும் இந்திய தொழில்துறையையும்  பிஜேபியிடமிருந்து மீட்க மோடி அரசை அப்புறப்படுத்துவதும்  அதன்  ஆதரவு சக்திகளை இந்திய அரசியல் வானிலிருந்து முற்றாக அகற்றுவதும்  மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களின் நாட்டுப் பற்றுமிக்க போராட்டமாகவும்   முதன்மை கடமையாகவும்   மாறியுள்ளது.  இது ஒன்றே    விரக்தியின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கும் நமது இந்திய இளைஞர்களை    மீட்டெடுக்கும் ஒரே தீர்வாகவும் நம் முன்னே உள்ளது. 

கட்டுரையாளர் : சுஜித் அச்சுக்குட்டன்