‘தூய’ அவதாரங்கள்!
அரசியலில் தூய்மையைக் கொண்டுவரப் போவதாக முழக்கமிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டிபட்டி வேட்பாளர் லெப்ட் பாண்டியின் வேட்புமனு விவரங்கள் மலைக்க வைக்கின்றன. ஒன்பது குற்ற வழக்குகள், 18 சட்டப் பிரிவுகள் என இவரது ‘பயோடேட்டா’ பலமாக உள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது முதல், பெண்களுக்கு எதிராக ஆபாசப் படங்கள் அனுப்பியது, தகாத வார்த்தைகளால் மிரட்டியது என சகல துறைகளிலும் இவர் விஸ்வரூபம் எடுத்துள்ளார். சொந்தக் கட்சித் தொண்டர்களை விட மனைவியின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து அவருக்கு மாற்று வேட்பாளர் வாய்ப்பு வழங்கியுள்ளார். இவர்கள்தான் விஜய் சொல்லும் அந்த ‘தூய சக்திகளோ’?
பொய்ப் பிம்பங்களின் ‘டைரக்டர்’ மோடி!
‘துரந்தர்’ போன்ற திரைப்படங்களை பொய் என்பவர்கள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தான் என, கேரளப் பிரச்சாரத்தில் மதப்பிரிவினையைத் தூண்டும் நோக்கில், பிரதமர் மோடி பேசியுள்ளார். உண்மையில் ஆஸ்கர் வரை சென்ற ‘வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ போன்ற நிஜமான ஆவணப்படங்களை இந்தியாவில் தடை செய்துவிட்டு, கற்பனைப் படங்களுக்கு வக்காலத்து வாங்குவதுதான் வேடிக்கை. காசாவில் கொல்லப்பட்ட குழந்தையின் பெயரைக் கொண்ட அந்த ஆவணப்படத்தைத் தடை செய்தது, தனது ‘தந்தை மண்’ இஸ்ரேலுக்குச் செய்யும் சேவையா? எதற்கெடுத்தாலும் ‘பொய்’ என்று கூச்சலிடும் முன், தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டியது ஒரு பிரதமரின் கடமையல்லவா?
ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு டீ பார்ட்டி!
பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தேநீர் அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள பிரம்மாண்ட காமிராக்கள், லைட்டிங் செட்டப் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளைப் பார்த்தால் இது ஏதோ ஹாலிவுட் படப்பிடிப்பு போலத் தோன்றுகிறது. ஏழைத் தொழிலாளர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது கூட ஒரு விளம்பர ‘ஸ்டண்ட்’ ஆகத்தான் இருக்க வேண்டுமா? நிஜமான மனிதர்களை விட நிழல் பிம்பங்களை உருவாக்குவதில்தான் நமது பிரதமர் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
தினமலரின் ‘ஜேம்ஸ்பாண்ட்’ கண்டுபிடிப்பு!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவில் மகன் இன்பநிதி பெயரிலுள்ள சொத்துக்களைக் குறிப்பிடவில்லை என தினமலர் ஒரு ‘பெரிய’ கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. தேர்தல் சட்டப்படி, சுயமாகச் சம்பாதிக்கும் மற்றும் வேட்பாளரைச் சார்ந்து இருக்காத பிள்ளைகளின் சொத்து விவரங்களைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது அந்தப் பத்திரிகையின் ‘ஜேம்ஸ்பாண்ட்’களுக்குத் தெரியவில்லை. 2021-இல் இருந்த விவரம் இப்போது இல்லை எனப் புலனாய்வு செய்தவர்கள், சட்டப் புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்திருக்கலாம். அரைவேக்காட்டுத்தனமான செய்திகளை வெளியிட்டுத் தங்களை மகா புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்கிறார்கள்!
சுயேச்சை ஆட்சியும் ‘வழிகாட்டி’ மோடியும்!
“பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக நடைபெறும்” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திருவாய் மலர்ந்துள்ளார். எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி சுயேச்சையாக அமையும் என்று மேடைக்கு மேடை முழங்கியதெல்லாம் வெறும் தேர்தல் நாடகமா? தில்லியில் இருந்து வரும் ‘வழிகாட்டுதல்’ படிதான் தமிழக ஆட்சி நடக்கும் என்றால், பிறகு எதற்கு மாநிலத் தன்னாட்சி பற்றிப் பேச வேண்டும்? அதிமுகவின் ‘சுயேச்சை’ முழக்கம் இப்போது கமலாலயத்தின் காலடியில் விழுந்து கிடப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது!
