பெண் வெறுப்புப் பேச்சு! முஸ்லிம் லீக் புள்ளி கைது! காயம்குளம் ‘யுடிஎப்’ கூடாரத்தில் நடுக்கம்
கேரளாவின் காயம்குளம் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) வேட்பாளர் யு. பிரதிபாவை ஆபாசமாக விமர்சித்த யு.டி.எப் நிர்வாகி இர்ஷாத் சக்கலசேரி கைதாகி, ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். அருவருக்கத்தக்க விமர்சனம்! முஸ்லிம் லீக் தொகுதித் தலைவராக இருந்த இர்ஷாத், யு.டி.எப் வேட்பாளர் எம். லிஜுவின் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, “பிரதிபாவால் தொகுதிக்கு எதுவும் செய்ய முடியவில்லை; அவர் தனது உடல் அழகை வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்” எனப் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நாவடக்கம் இன்றிப் பேசினார். அரசியல் ரீதியாகப் பதிலளிக்கத் துப்பில்லாதவர்கள், ஒரு பெண்ணின் தனிப்பட்ட மாண்பைக் குலைக்க முயன்றது கேரள அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னடைவில் யு.டி.எப்! யு. பிரதிபா அளித்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இர்ஷாத் கைது செய்யப்பட்டார். முதல்வர் பினராயி விஜயன் முதல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பி.கே. ஸ்ரீமதி வரை பலரும் இந்தக் கீழ்த்தரமான பேச்சிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் அமைப்புகள் வீதியில் இறங்கிப் போராடியதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி இர்ஷாத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, “வருத்தம்” தெரிவித்துத் தப்பிக்கப் பார்க்கிறது முஸ்லிம் லீக் மற்றும் யு.டி.எப் தலைமை.
