articles

திருப்பூரில் பறந்த  கற்பனைக் குதிரை!  

திருப்பூரில் பறந்த  கற்பனைக் குதிரை!  

தேர்தல் களம் என்றாலே வாக்குறுதிகள் பறக்கும். ஆனால், திருப்பூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அள்ளி வீசிய வாக்குறுதிகளைப் பார்த்தால், அவரே ஒரு தனி நாட்டின் ‘ஜனாதிபதி’ ஆகிவிட்டது போன்ற ஒரு பிரமையில் பேசுவது போல் இருந்ததாகப் பொதுமக்கள் கலகலவெனச் சிரிக்கிறார்கள்.

கூட்டம் குறைவு... குசும்பு அதிகம்! கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இதே திருப்பூர் யூனியன் மில் சாலையில் கூடிய கூட்டத்தில், இந்த முறை நாலில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனாலும் சீமானின் ‘வீர வசனங்களுக்கு’ மட்டும் பஞ்சமில்லை. இரவு 9 மணிக்கு மேடைக்கு வந்தவர், தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்று எல்.இ.டி (LED) திரையில் சினிமா காண்பிப்பது போல விளக்கம் அளித்தார்.

எல்லோரும் முதலாளிகள்...  யாரும் தொழிலாளிகள் இல்லை! “என் ஆட்சியில் எல்லோரும் முதலாளிகளாக இருப்பார்கள், யாரும் யாரிடமும் கையேந்த மாட்டார்கள்” என்று சீமான் முழங்கியபோது, அங்கிருந்த தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எல்லோரும் முதலாளி என்றால் அப்புறம் யார் வேலை செய்வது என்ற அடிப்படை லாஜிக் கூட இல்லாமல் சீமான் தனது கற்பனைக் குதிரையைப் பறக்கவிட்டார். •    முதல் கையெழுத்து: முதலமைச்சராகப் பதவி யேற்பது (அது சரி, பதவி ஏற்காமலா கையெழுத்து போடுவாங்க?). •    இரண்டாவது கையெழுத்து: ஆகச்சிறந்த கல்விக்குச் சட்டம். •அதிசய வைப்பகம்: ‘தமிழ் தேசிய வைப்பகம்’ (Bank) அமைத்து மிகக் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பாராம். இது எப்படியிருக்கிறது என்றால், ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, “கேளு.. கேளு.. அண்ணன்கிட்ட தாராளமா கேளு” என்று அள்ளி விடுவாரே, அந்த காமெடிதான் பலருக்கும் நினைவுக்கு வந்தது.

சைக்கிள் பயணம்... சவாலான பேச்சு! முதலமைச்சர் முதல் அனைவரும் மிதிவண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும் என்றும், தமிழில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்றும் அடுக்கடுக்கான அதிரடிகளைக் கிளப்பினார். இரவு 10 மணி தாண்டியும் பேச்சைத் தொடர்ந்தவர், “ஏற்கெனவே என் மீது 262 வழக்குகள் உள்ளன, இது மற்றுமொரு வழக்காக இருக்கட்டும்” என்று சவால் விட்டு 10.20 மணி வரை மைக்கை விடாமல் பேசினார்.

கனவு காணுங்கள்... ஆனால் இப்படியா? மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, ‘தமிழ் தேசிய வைப்பகம்’, ‘தேசிய  இன கூட்டு முதலாளிகள்’ எனச் சீமான் பேசுவது நிஜ  உலகிற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை என்பதைக் காட்டுகிறது.