மெக்காலே கல்வி: அடிமைத்தனமா? இந்திய நவீனத்துவத்தின் திறவுகோலா?
கடந்த பத்து நாட்களில் நமது பிரதமர் இரண்டு முறை “மெக்காலே தந்த கல்வித் திட்டத்தைப்” பற்றி பேசியிருக்கிறார். முதலில் தில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஏற்பாடு செய்த ராம்நாத் கோயங்கா நினைவேந்தல் உரை. மற்றொன்று அயோத்தி ராமர் கோவில் கட்டு மானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிப்பிடும் வகையில் அதன் கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றிய பின் பிரதமர் நிகழ்த்திய ‘எழுச்சி’ உரை. இரண்டுமே பாரதிய ஜனதா கட்சியினதும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தி னதும் கருத்தியல் அடிப்படைகளை விளக்கும் உரைகள்.
இரு உரைகளிலும் பிரதமர் மெக்காலே பிரபுவைப் பற்றி குறிப்பிட்டு, அவர் அறிமுகம் செய்த கல்வித் திட்டத்தால் இந்திய மக்கள் அடிமைப்பட்டு கிடப்பதா கவும், அத்தகைய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்படுத்தும் நாட்கள் வந்துவிட்டதாகவும் பேசியி ருக்கிறார்.
இதைப் பேசிய பிரதமர் உடனடியாக 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா சாதிக்க வேண்டிய சாதனை களைப் பற்றி பேசுகிறார். உலக அளவில், தொழில் நுட்ப அளவில், அறிவியல் களங்களில் இந்தியா அடையவேண்டிய முன்னேற்றங்கள், சர்வதேச அளவில் அது பெறவேண்டிய அங்கீகாரம், உலகளா விய அறிவியல் வேட்கையில் நம் மாணவர்கள் சாதிக்க வேண்டிய சாதனைகள் - இவற்றைப் பற்றி எல்லாம் உரையாற்றுகிறார். ஆனால் அந்த இடத்திற்கு வருவ தற்கான சூழ்நிலையை இன்றைய இந்திய சமூகம் எப்படிப் பெற்றது என்பதை மறந்துவிட்டு பிரதமர் இவ்வாறு பேசுகிறாரா என்கிற ஐயம் எனக்குள் எழுந்தது!
இத்தகைய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற் றம் எப்படி இந்தியாவுக்கு வசப்படும் என்று பார்க்கும் போது, இதற்கு அடிப்படையான காரணம் இந்தியா வில் உள்ள இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்த்த ஆங்கில அறிவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தின் முன்னேற் றம் பற்றி பேசுகிறவர்கள் அதற்கு அடிப்படையான காரணம் இன்றைய இந்திய இளைஞர்களுக்கு கம்ப் யூட்டர் மென்பொருள் தயாரிப்பதிலும் தகவல் தொ ழில்நுட்பத் துறையிலும் இருக்கும் ஆழ்ந்த அறிவும்புலமையும்தான் என்பதை ஒப்புக்கொள்வார்கள். அத் தகைய ஒரு நிலையை இன்று இந்திய இளைஞர்க ளுக்கு எது தந்தது என்றால் மெக்காலே அறிமுகப் படுத்திய ஆங்கில வழிக் கல்வி.
இவர்கள் சொல்லும் பழம்பெருமை தான் என்ன?
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மெக்காலே யையும் அவர் தந்த கல்வியையும், அவர் அறிமுகப் படுத்திய ஆங்கிலத்தையும் வசைபாடும் பிரதமரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், அதனால் இந்திய சமூகம் தன் பழம்பெருமைகளை இழந்துவிட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். இவர்கள் சொல்லும் அந்த பழம்பெருமை என்ன? மெக்காலே அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வியால் இந்திய சமூகம் இழந்தது என்ன?
மெக்காலே இந்தியாவிற்குள் வரும்போது இந்தி யாவின் சமூகச் சூழலை பாரதியார் மிக அருமையா கப் பாடுவார்: “ஆற்றினில் பெண்களை எறிவதும், ரதத்து உருளையில் பாலரை உயிருடன் மாய்த்த தும், பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்ததும், எனப் பல தீமைகள்” என்று நம் சமூகத்தின் தீமைக ளை வரிசைப்படுத்துவார்.
சாதிப் பிரிவுகள் சொல்லி நித்தமும் சண்டைகள் நடத்தியவர்கள் யார்? கல்விகற்கும் உரிமைக்கு உரிய வராய் ஒரு சாதியினரே இருந்தனரே, அது எப்படி? பெரும்பான்மையான மக்களுக்குக் கல்விகற்கும் உரிமை தரப்பட்டிருந்ததா? பெண்கல்வியின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் நாம் தெரிந்து கொண் டால்தான் மெக்காலேயின் கல்வித் திட்டம் இந்த சமூகத்திற்குத் தந்த மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
கிழக்கு இந்திய கம்பெனி ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய்களை இந்தியாவில் கல்வி நிலையங்களுக்கு மானியமாக வழங்கியதாகக் கணக்கு எழுதி வைத்திருந்தது. இந்த கணக்கை ஆராய்ந்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அதன் பயன் பாட்டின் உண்மை நிலையை அறிவதற்காக அனுப்பிய குழுவின் தலைவராகத்தான் மெக்காலே இந்தியாவிற்கு வந்தார். அவர் வரும்போது இந்தியா முழுவதும் கல்விச் சாலைகள் என்று அடையாளப்பட்டிருந்த அமைப்புக ளைப் பார்த்து அவர் மனம் வருந்தியது. அங்கே தரப் பட்டது வாழ்க்கைக் கல்வி அல்ல என்பதை உணர்ந்து கொண்டார். ஒருபுறம் வேத பாடசாலைகள் - அங்கே சமஸ்கிருதத்தில் வேதபாடங்கள் கற்றுத் தரப்பட்டன. அந்த மாணவர்கள் அனைவரும் சமூகத் தின் ஒரு சாதியினரைச் சார்ந்தவர்களாகவே இருந்தார் கள். மற்றொருபுறம் அரபி பாடசாலைகள் - மதர சாக்கள், அங்கே அரபி மொழியில் இஸ்லாமிய மார்க்கக் கல்வி மட்டுமே வழங்கப்பட்டது.
இதைப் பார்த்தவுடன் இந்தக் கல்வியால் சாமா னிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது என்ற முடி வுக்கு வந்த மெக்காலே, வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொடுக்கக்கூடிய ஒரு கல்வி முறையை இந்தி யாவில் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரையைக் கவர்னர் ஜெனரலுக்குச்செய்து அவரின் ஒப்புத லைப் பெற்று அந்த “வாழ்க்கைக் கல்வி” முறையை அறிமுகப்படுத்தியது தான் மெக்காலே இந்த நாட்டிற்குச் செய்த மிகப்பெரிய சேவை.
“கிழக்கு இந்திய கம்பெனிக்குத் தேவைப் படும் குமஸ்தாக்களையும் கணக்கர்களையும் உரு வாக்குவதற்காகவே தயாரிக்கப்பட்ட கல்வி முறை. அது இந்தியாவின் ஆன்மாவை அழித்துவிட்டது” என்றெல்லாம் குற்றம்சாட்டுகிறவர்கள் அந்த பண் பாட்டு அடையாளங்கள் என்ன என்பதை வரிசைப் படுத்தவேண்டும்.
பால்ய விவாகத்திலிருந்து விதவைகள் மறுமணம் மறுக்கப்பட்டது வரை, கணவர் இறந்தவுடன் அவர்க ளுடன் உடன்கட்டை ஏறவேண்டும் என்கிற நிர்பந்த மும், பெண்களுக்குக் கல்வியே தேவையில்லை என்கிற சூழ்நிலையும், ஆதிக்க சாதியினர் மட்டுமே கல்விகற்க முடியும் என்ற சமூக சூழலும்தான் அவர்கள் சொல்லும் பண்பாட்டு அடையாளங்கள்.
மெக்காலேயின் கல்வித் திட்டம் வந்த பிறகுதான் சாமானிய மக்கள், அடித்தட்டு மக்கள், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்கள் கல்விகற்கக்கூடிய வாய்ப்பை முதன்முறை யாகப் பெற்றார்கள். மெக்காலேயின் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் வழியாகக் கல்வியைப் பெற்றுக்கொண்டவர்கள்தான் பல குடும்பங்களில் முதன்முதலாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உருவானார்கள். அப்படி உருவானவர்கள்தான் தொழிற்சாலைகளில் வேலைபார்த்தார்கள், அர சாங்க அலுவலகங்களில் வேலைபார்த்தார்கள், ஆசிரி யர்களாகப் பணியாற்றினார்கள். அதன் தொடர்ச்சி யாக இன்று உலக அளவில் உலகம் போற்றும் விஞ்ஞா னிகளாக, ஆராய்ச்சியாளர்களாக இந்தியர்கள் மாறியி ருக்கிறார்கள்.
நமது பிரதமர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாட்டின் இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணமா கக் காங்கிரசையும், நேரு அவர்களையும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. பாஜகவின் மதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல் வட இந்தியாவில் வேர்பிடித்ததைப்போல தெற்கே செல்லுபடியாக வில்லை என்பதற்குத் தென் மாநிலங்களில் பரவலாகி யிருந்த கல்வியும் ஆங்கிலத்தில் படிக்கும் ஆர்வமும் என்பது பாஜகவின் கருத்து.
ஜனநாயகம், சமூக நீதி, சோஷலிசம், மதச்சார் பின்மை போன்ற நமது அரசியல் நிர்ணய சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் ஐரோப்பிய சிந்தனைகள் என்று ஆர்எஸ்எஸ் நிறுவனத்தின் பிதாமகர் கோல் வால்கர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய முக்கிய தலைவர்களும், சுதந்திர இந்தியாவைக் கட்டி எழுப்பிய பல முக்கிய அறிஞர்களும் இங்கிலாந்தில் படித்தவர்களாக இருந்ததால் அவர்களை மெக்காலே யின் கால்வருடிகள் என்று ஏளனம் செய்தவர்கள்தாம் நமது பிரதமரின் முன்னோர்கள்.
மெக்காலே உருவாக்கிய அடிமை நிலையிலி ருந்து விடுதலை பெறவேண்டும் என்று நமது பிரதமர் சொல்வது, பாஜகவின் இந்துத்துவக் கருத்தி யலை ஒட்டுமொத்த இந்தியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நாம் புரிந்துகொள்கிறோம்
. மெக்காலேயின் உண்மை நோக்கம்
மெக்காலேகல்வியின் நோக்கமே இந்தியர்களை மொழிபெயர்ப்பாளர்களாக உருவாக்கிச் சிந்தனை ரீதியான அடிமைகளாக அவர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும் என்பதுதான் இந்துத்துவ கருத்தியலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதமாகும். அதற்கு ஆதரவாக அவர்கள் காட்டும் மெக்காலேயின் மேற்கோள்: “நாம் ஆண்டு கொண்டிருக்கும் பல கோடி மக்களு க்கும் நமக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருக்கலாகும் ஒரு வகுப்பினரை உருவாக்குவதே இப்போது நம்மால் செய்யக்கூடிய சிறந்த செய லாகும். அவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருப்பார்கள், ஆனால் சுவைகளால் அவர்கள் ஆங்கிலேயர்கள் ஆக இருக்கவேண்டும்.
” ஆனால் அவர்கள் காட்டும் இந்த மேற்கோள் முழுமையானதல்ல. பாதி உண்மையை மட்டும் பேசி முழு உண்மைகளை மறைக்கும் அவர்கள் வர லாற்றைச் சிதைக்க நினைக்கிறார்கள். அந்த மேற் கோளில் மீதிப்பாதியையும் நாம் அறியவேண்டும்.
அவர்கள் சொல்லாமல் மறைத்தது இதுதான்: “இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டுப் பெயரிடு முறைகளிலிருந்து அறிவியல் சொற்களைக் கடன்பெற்று நாம் இம் மக்களுக்கு வழங்கும்போது அது அவர்களின் மொழிகளின் ஊடாக வளமான அறி வைக் கொண்டுசேர்க்கும். படிப்படியாக மாபெரும் மக்கள் திரளுக்கு அறிவைக் கொண்டுசெலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும்.” அதாவது இந்திய மக்களின் தாய்மொழிகளை ஆங்கிலத்தைக் கொண்டு அறிவியல் மொழியா கவும் மேலைநாட்டு அறிவு செறிந்த மொழியாகவும் மாற்றி அமைக்கவேண்டும் என்பதே மெக்காலேயின் விருப்பமாக இருந்துள்ளது.
ஆங்கில அரசாங்கத்தால் கல்விக்காக ஒதுக்கப் பட்டுள்ள பணத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் கல்வி அளிப்பதும், ஆங்கிலத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர் ப்பதும் கடினமான செயலாக இருந்த காரணத்தால், ஆங்கிலேயர்களுக்கு இந்திய மொழிகளைப் புரிந்து கொள்ளவும், ஆளும் தங்களின் நோக்கங்களை மக்க ளிடம் அவர்களது மொழியிலேயே கொண்டுசெல்ல வும் தகுதியான ஆட்கள் தேவைப்பட்டனர். இதனால் இந்தியாவில் உள்ள ஒரு சிலருக்கு முதலில் ஆங்கி லத்தைக் கற்றுக்கொடுத்து, அவர்கள் மூலம் ஆங்கி லத்தில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்வதும், அவற்றை இந்தியர் அனைவரிடமும் கொண்டுசெல் வதும் மெக்காலேயின் செயல் திட்டமாக இருந்தது. “
மெக்காலேதான் இந்திய மொழிகளை அழித்தார், அவர்தான் இந்தியர்களை அடிமைகளாக உருவாக்க முனைந்தார்” என்ற இந்துத்துவவாதிகளின் வாதத்தில் சற்றும் உண்மை இல்லை.
இரு தரப்பின் எதிர்ப்பையும் பெற்றவர்
மெக்காலே இந்தியாவிற்கு வந்த நாட்கள் இந்திய சமூகம் அறிவியலிலும் தொழில்நுட்பங்களிலும் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு காலகட்டம். பிரிட்டி ஷார் வழங்கிய நிதி உதவியின் மூலம் நடத்தப்பட்ட வேத பாடசாலைகளையும் மதரசாக்களையும் பார்த்து விட்டு மெக்காலே கவர்னர் ஜெனரலுக்கு எழுது கிறார்:
“இங்கிலாந்தில் உள்ள ஒரு லாடக்காரன் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் மருத்துவ முறைகளும், சிறுமியருக்கும் நகைப்பை உண்டாக்கும் விபரீத மான வான சாஸ்திரங்களும், 30 அடி உயரமுள்ள அரசர்கள் 60,000 வருஷம் ஆண்ட ‘வரலாறுக ளை’க் கொண்ட சரித்திரமும், பாற்கடலும் நெய்க்கட லும் கொண்ட பூகோள சாஸ்திரமும் இங்கு கற்பிக்கப் படுகின்றன. ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் எத்தனை தரம் குளிக்கவேண்டும், ஒரு ஆட்டைக் கொன்ற பாவத்திற்குப் பரிகாரமாக எந்த வேதத்தை எத்தனை பாராயணம் செய்யவேண்டும் என்றும் இந்திய மக்கள் தெரிந்துகொள்வதற்காக நாம் சர்க்கார் வரிப்பணத்தில் கலாசாலைகள் நடத்துவது மாணவர்க ளின் இளமையை வீணாக்கும் நடவடிக்கையாகும். இப்படிப் பலவாறான முரண்பாடுகளுடன் இந்தியா வில் நிலவிவந்த சமஸ்கிருதக் கல்வி முறை என்பது திட்டமிட்டு இந்தியாவை இருளில் வைக்கச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட முறையாகும்.”
மெக்காலே வருவதற்கு முன்னர் சமஸ்கிரு தத்திலும் அரபியிலும் பல்லாயிரக்கணக்கான புத்த கங்கள் அச்சிடப்பட்டன. அதை மாணவர்கள் யாரும் வாங்காததால் அப்புத்தகங்கள் அரசின் கிட்டங்கிக ளில் கரையான் அரித்துக் கிடந்தன. ஆனால் ஆங்கி லப் பாட புத்தகங்கள் சில ஆயிரங்களே அச்சிடப்பட்டி ருந்தாலும் அவை அனைத்தையும் மாணவர்கள் விரும்பி வாங்கிச்சென்றதால் உடனடியாக விற்றுத் தீர்ந்தன.
இதை ஆங்கிலேய அரசுக்குச் சுட்டிக்காட்டிய மெக்காலே, அரபியும் சமஸ்கிருதமும் பெரும்பா லான இந்தியர்களுக்கு அந்நிய மொழிகள்தாம் என்றும், அவைகளைப் படிப்பதைவிட ஆங்கிலம் கற்றால் எதிர்காலத்தில் இந்தியா ஒரு அறிவுசார்ந்த vநாடாக நிச்சயம் உருவாகும் என்றும் கவர்னர் ஜென ரலிடம் வலியுறுத்தினார்.
மெக்காலேயின் நிலைப்பாட்டில் இருந்த நியா யங்களை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஜெனரல், மெக்கா லேயை உடனடியாக அரசின் கல்விக் கவுன்சிலு க்குத் தலைவராக நியமித்து, அரசின் கல்வி மானி யம் முழுவதும் அரசின் பாடத்திட்டங்களைப் பயிற்று விக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்றும், சமஸ்கிருத வேத பாடசாலைகளுக்கும் மத ரசாக்களுக்கும் வழங்கப்பட்டுவந்த மானியங்க ளையும் உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டார்.
மெக்காலேயின் இந்த நடவடிக்கைகளை அப்போ திருந்த மதவாதிகள் எதிர்த்தார்கள். ஆங்கிலேயர்க ளும் எதிர்த்தார்கள். இந்தியர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதால்அவர்கள் உலக அறிவு பெற்றவர்களாக மாறி ஒருகட்டத்தில் நம்மையே எதிர்ப்பார்கள் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மெக்காலேக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மெக்காலே சிறப்பான பாடத்திட்டத்தைத் தயாரித்து, கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டுசேர்ப்பதில் உறுதியாக இருந்தார். சில கல்வி நிலையங்களில் நடந்த கிறித்தவ மதப் பிரச்சாரங்களைக் கடுமை யாகக் கண்டித்து அக்கல்வி நிறுவனங்களுக்கு அரசு மானியத்தை நிறுத்தினார். இந்திய நீதிமன்றங்க ளில் நடைமுறையில் இருந்த மனுதர்மம் மற்றும் ஷரியத் சட்டங்களுக்கு மாற்றாக இந்திய குற்றவியல் சட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார்.
மெக்காலே அன்று வைத்த புள்ளிகள் இன்று அழகான கோலமாக விரிந்துள்ளது. நமது பிரதம ருக்கு இதையெல்லாம் நினைவூட்டும் கடமை நமக்கு உண்டல்லவா?
