சமூக மாற்றத்திற்கான இளைஞர்களின் சங்கமம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது தமிழ்நாடு மாநில மாநாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் பேரணி, பொதுக்கூட்டம், கருத்தரங்கம் என சிறப்பம்சங்களோடு நடைபெறுகிறது. மாநாட்டை நோக்கிய சுடர் பயணங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளில் இருந்து முக்கிய கோரிக்கைகளோடு பல்வேறு சுடர் பயணங்கள் மாநாட்டில் சங்கமிக்கின்றன. சென்னை உழைப்பாளர் சிலையிலிருந்து வேலை உரிமை சுடரும் பாலின சமத்துவ சுடரும், கடலூர் குமார் ஆனந்தன் நினைவிடத்திலிருந்து போதைக்கு எதிரான சுடரும், வள்ளலார் நினை விடத்திலிருந்து சமத்துவ சுடரும், வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து வர்க்க போராட்ட சுடரும், கள்ளக்குறிச்சியில் இருந்து அரசூர் சேட்டு நினைவாக கொடி பயணமும், காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட நினைவுச் சுடரும், கீழடியில் இருந்து பண்பாட்டு சுடரும், தூத்துக்குடி கவின் வீட்டிலிருந்து சாதி ஆணவ கொலைக்கு எதிரான சுடரும், திருப்பூர் பழனிச்சாமி நினைவிடத்திலிருந்து தியாகிகள் நினைவு சுடரும், கிருஷ்ணகிரி ஆதித்யவர்த்தன ஸ்ரீ நினைவிடத்திலிருந்து நினைவுச் சுடரும் மாநாட்டை வந்தடைகின்றன. தியாகம் என்ற சொல்லின் இலக்கணம் 1980 இல் துவங்கப்பட்ட வாலிபர் சங்கம், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை களைந் திட, அனைவருக்கும் சமமான கல்வி, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றை வென்றெடுக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது. சாதி, மதம், இனவாதத்திற்கு எதிராகவும், நவதாராளமய பொருளாதார கொள்கைக ளுக்கும், ஏகாதிபத்திய தாக்குதல்களுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறோம். தமிழ்நாட்டின் ரத்த சாட்சிகளாக சீராணம்பாளையம் பழனிச்சாமி, குட்டி ஜெயப்பிரகாஷ் , அருமனை பாபு, செல்லையன், மண்டபம் முத்து, அரசூர் சேட்டு, அரக நாடு சுதாகரன், விருதுநகர் சந்துரு, கிருஷ்ணகிரி ஆதித்யவர்த்தன ஸ்ரீ ராஜு, விக்ரமசிங்கபுரம் குமார், சேலம் சீனிவாசன், திருப்பூர் பன்னீர்செல்வம், பட்டிதேவன்பட்டி பாண்டி, கடலூர் குமார், ஆனந்தன், கோவில்பட்டி அமல்ராஜ், கண்ட மங்கலம் சுரேஷ், இடுவாய் ரத்தினசாமி, நெல்லை அசோக், மயிலாடுதுறை வைரமுத்து உள்ளிட்ட வாலிபர் சங்கத்தின் மகத்தான இளைஞர்கள் சமூக மாற்றத் திற்கான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்துள்ளனர். வேலையின்மைக்கு எதிரான போராட்டம் 1990களில் நவதாராளமய கொள்கை அமலாக்கத்திற்குப் பின், கல்வி வணிகமய மாகியும், அரசுகள் வேலைவாய்ப்பு கடமை யிலிருந்து வெளியேறியதாலும் வேலை யின்மை உச்சத்தை எட்டியுள்ளது. இதை பொது சமூகத்தில் விவாதப் பொருளாக்கி பேச வைத்த இயக்கம் வாலிபர் சங்கம். “எங்கே எனது வேலை”, “எனது வேலை எனது உரிமை”உள்ளிட்ட முழக்கங்களோடு பல ஆயிரம் கிலோமீட்டர் நடைப் பயணங்க ளையும் சைக்கிள் பயணங்களையும் நடத்தியுள்ளோம். மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டம் பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார அமைப்புகளின் ஒற்றைக் கலாச்சாரத் திட்டத்திற்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் மதச் சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறோம். சிறுபான்மை மக்கள் மீதான தாக்கு தலை எதிர்க்கிறோம். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராக போராடுகிறோம். தொழிலாளர் உரிமைகளைத் திருத்தும் போது களமாடுகிறோம். குலக்கல்வி முறையை அமல்படுத்தும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிக ளின் போராட்டத்தில் நின்றோம். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை முறியடித்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கினோம். அரிட்டாபட்டி மலையையும் அழகர் மலையையும் வேதாந்தா குழுமத்திற்கு தாரை வார்க்க விடாமல் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்வித்து மக்களையும் மண்ணையும் பாதுகாத்தோம். போதைக்கு எதிரான பெரும் போராட்டம் திட்டமிட்டு இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி மதவாத அரசியலுக்குப் பயன்படுத்தும் நோக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி போதையில் இருந்து மாணவர்களையும் இளைஞர்களையும் மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் சமூக நலத்துறை தகவல் அதிர்ச்சி அளிக்கிறது - எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்ப தாம் வகுப்பு செல்லும் மாணவர்களில் 50 சதவீ தத்திற்கு மேலானவர்கள் போதைப் பொருளுக்கு ஆட்பட்டுள்ளனர். 10 வயது முதல் 75 வயது வரை 860 வகையான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. இதற்கு எதிராக, இளைஞர்களைப் பாதுகாக்கும் பெரும் இயக்கத்தை வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. சேவையின் அடையாளம் 1986இல் தமிழ்நாட்டில் முதன்முதலாக ரத்ததான கழக சேவையைத் துவக்கிய பெருமை வாலிபர் சங்கத்தைச் சேரும். அன்று முதல் இன்று வரை ஆண்டுக்கு 20,000 யூனிட்டுகளுக்கு மேல் ரத்தத்தைத் தானமாக வழங்கியுள்ளோம். உழைப்புத் தானம், உடல் உறுப்புத் தானம், இலவச மருத்துவ முகாம்கள் என எண்ணற்ற சேவைகளை செய்கிறோம். 2004 சுனாமி துவங்கி ஒக்கி, தானே, ரீட்டா, மிக்ஜாம், பெங்கல் புயல்கள், வரலாறு காணாத கனமழை, வெள்ளப்பெருக்கு என அனைத்திலும் மக்களை மீட்டெடுத் தோம். கொரோனா பேரிடரில் அரசே ஊரடங்கு அறிவித்த சூழலிலும் நாடு முழுவ தும் லட்சக்கணக்கான இளைஞர்கள் களத்தில் நின்று மக்களை மீட்டோம். நாளைய சமூகம் நமக்கானது “இழப்பதற்கு எதுவும் இல்லை, அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கி றது” என்ற வரிகளுக்கு இணங்க, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மகத்தான கொள்கையோடு பயணிக்கும் வாலிபர் சங்கத்தின் 18வது மாநாட்டில் தமிழ்நாட்டின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் ஆழமான விவாதங்களும், அனல் பறக்கும் பேச்சுக்களும், மிகச் சிறந்த கலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களே, சமூக மாற்றத்திற்கான இந்த மாநாட்டில் பங்கேற்க வாரீர்!