articles

img

மதுரையை மதவெறியின் பரிசோதனைக் கூடமாக மாற்ற விடமாட்டோம் - தொகுப்பு: ஜெ.பொன்மாறன், பா.ரணதிவே

மதுரையை மதவெறியின் பரிசோதனைக் கூடமாக மாற்ற விடமாட்டோம்  

திருப்பரங்குன்றம் அறப்போராட்டத்தில் செங்கொடி இயக்கம் விடுத்த வரலாற்று அறைகூவல்!

“இந்தியாவில் மதவெறியர்களின் வெற்றிக்கு பல இடங்கள் இருக்கலாம், ஆனால் அவர்களின் 
தோல்விக்கு மதுரை மண்ணே உதாரணமாகத் திகழும்” என்கிற முழக்கத்தோடு, திருப்பரங்குன்றத்தின் மத நல்லிணக்கத்தைச் சிதைக்க முயலும் சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில் கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு:

தியாக வரலாறும்  பாசிச எதிர்ப்புப் பாரம்பரியமும்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான கே. பாலபாரதி தனது உரையில், உண்ணாவிரதப் போராட்டம் என்பது மக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் உன்னத வடிவம் என்றார். மகாத்மா காந்தி பயன்படுத்திய இந்த அறப்போராட்ட வடிவம், இன்று மதுரையில் மீண்டும் தேவைப்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர், கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது சாதியையும் மதத்தையும் கடந்து விளிம்புநிலை மக்களைப் போராளிகளாக மாற்றும் தியாக வரலாறு கொண்டது என்றார். செங்கொடி இயக்கம் என்பது வரலாற்றில் உலக அளவில் பாசிச சக்திகளை எதிர்த்துப் போரிட்ட பாரம்பரியம் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். “பாசிச சக்திகளின் மூளை நரிகளின் மூளை போன்றது” என்று சாடிய அவர், சிபிஎம் தலைவர்கள் சொல்லாத கருத்தைச் சொன்னதாகத் திரித்துக் கூறி, மக்களைத் திசைதிருப்பும் வேலையைச் சங்பரிவார் செய்கிறது என்றார். தெருவில் நின்று பாசிசத்தை துணிச்சலாக எதிர்க்கும் ஒரே சக்தி மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதை உரக்கப் பதிவு செய்தார்.

பல்சமய பண்பாடும்  ஆதித் தமிழ் தெய்வங்களும்

மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், வைகுண்ட ஏகாதசி நாளில் நடைபெறும் இந்தப் போராட்டம் பக்தர்களின் நம்பிக்கையை மதிக்கும் அதேவேளையில் மதச்சார்பின்மையையும் காப்பதாகக் கூறினார். திருப்பரங்குன்றம் என்பது முருகன், உச்சிப்பிள்ளையார், சிக்கந்தர் தர்கா, சமணர் படுகைகள் எனப் பல்சமயக் குன்றமாக விளங்குவது மதுரையின் மரபு. “புண்ணியவான்கள் தீபம் ஏற்றலாம்” என்கிற வாசகத்தைத் தாங்கியுள்ள தூணில், மதவெறி பிடித்த பாஜகவினர் தீபம் ஏற்ற முற்படுவதே முரண்பாடு என்றார். “குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்ற பழமொழிக்கு எதிராக, குன்றுகளை முதலாளிகளுக்கு விற்க முயன்றவர்கள் பாஜகவினர். தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகன் ஆண்டி கோலத்தில் நின்றாலும், ஆர்.எஸ்.எஸ் டவுசரை ஒருபோதும் அணியமாட்டார் என்று எள்ளலுடன் குறிப்பிட்ட அவர், மக்கள் ஒற்றுமை தீபத்தை உயர்த்தி மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம் என்று முழங்கினார்

. மக்கள் சந்திப்பும் மதுராவின் எச்சரிக்கையும்

மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ் தனது உரையில், கம்யூனிஸ்டுகள் இந்தப் பிரச்சனையை மிகுந்த நிதானத்தோடும், பண்போடும் அணுகுவதாகக் குறிப்பிட்டார். டிசம்பர் 20, 21 தேதிகளில் 250-க்கும் மேற்பட்ட குழுக்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தது, இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னோட்டமாக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய வலிமையான எதிர்ப்பு என்று அவர் பதிவு செய்தார். “ஐயா நாங்க சாமி கும்பிட வந்திருக்கிறோம், அந்த ஆள் அரசியல் பண்ண வந்திருக்கிறார்” என்று எச்.ராஜாவைப் பார்த்து உழைக்கும் மக்கள் கூறியதைக் குறிப்பிட்ட அவர், பாஜகவினரின் நோக்கம் பக்தியல்ல என்பதை விளக்கினார். மதுராவின் 24 மசூதிப் பகுதிகளைக் குப்பை மேடுகளாக மாற்றி, இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் இறைச்சி விற்பனையைத் தடை செய்து, மக்களை மெல்ல மெல்ல மதவெறிக்குள் தள்ளும் ஆர்.எஸ்.எஸ்-இன் சதித்திட்டத்தை மதுரை மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சூளுரைத்தார். மேலும், முருகன், வேலன், சண்முகம் என முருகனின் பெயர்களைத் தாங்கிய கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடும் செங்கொடி இயக்கத்திற்கு முருகனைப் பற்றிப் பேச முழு உரிமை உண்டு என்று அண்ணாமலைக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

இருட்டடிப்புச் செய்யும் ஊடகங்களும் திசைதிருப்பப்படும் அரசியலும்

மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜுனன், ஊடகங்கள் வன்முறைச் செய்திகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதாகக் குற்றம் சாட்டினார். அமைதியை வலியுறுத்தி கம்யூனிஸ்டுகள் நடத்தும் இத்தகைய அறப்போராட்டங்களை இருட்டடிப்புச் செய்யும் பெரும்பாலான ஊடகங்கள், சங்பரிவார் கூட்டத்திற்கு அடங்கிக் கிடப்பதாகச் சாடினார். மக்கள் சந்திக்கக்கூடிய வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் கடவுள் நம்பிக்கையை மதவெறியாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட சங்பரிவார் துடிக்கிறது. அவர்களைத் தோளில் தூக்கிச் சுமக்கும் வேலையை அடிமை அதிமுக செய்கிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் மனிதநேயம் மிக்கவர்கள்; அந்த நல்ல உள்ளங்களை ஒன்றிணைக்கும் மகத்தான பணியைத்தான் மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ளது என்றார்.

வஞ்சிக்கப்படும் மதுரையும்  ஒன்றிய அரசின் துரோகமும்

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மதத்தைப் பேசும் ஒன்றிய அரசு மதுரையின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான மதுரை மெட்ரோ திட்டத்தை மக்கள் தொகையைக் காரணம் காட்டி நிராகரித்ததும், 2020-இல் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைத் தேர்தல் அரசியலுக்காகத் தள்ளிப்போடுவதும் பாஜக அரசின் வஞ்சகமே என்றார். 13 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள நைபர் (NIPER) கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட செங்கல்பட்டு தடுப்பூசித் தொழிற்சாலை எனத் தமிழகத்தைப் புறக்கணிப்பவர்கள், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதைப் பற்றிப் பேசுவது வெறும் அரசியல் நாடகம். தமிழக வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு மோதலை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

கார்த்திகை தீபமும் கட்டவிழ்த்து விடப்படும் பொய்களும்

பேராசிரியர் அருணன், 77 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மீண்டும் மத நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் சோகம் என்றார். கார்த்திகை தீபம் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட நிலையிலும், ஏற்றப்படவில்லை எனப் பச்சைப் பொய் பரப்பும் சங்பரிவாரத்தின் குரலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஜால்ரா போடுவது வேதனையளிப்பதாகச் சாடினார். “அவர்கள் குறிவைப்பது தெய்வத்தை அல்ல, இடத்தை” என்று குறிப்பிட்ட அவர், தீபம் ஏற்றச் சொல்லும் அந்தத் தூண் ஒரு எல்லைக்கல் போன்றது என்றும், அங்கு தீபம் ஏற்ற முடியாது என்றும் விளக்கினார். இதன் பின்னணியில் சிக்கந்தர் தர்காவை அகற்றிவிட்டு, திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிற வன்மமே ஒளிந்திருப்பதை அவர் அம்பலப்படுத்தினார்.

வரலாறும்  மத நல்லிணக்கத்தின் வேர்களும்

தொடர்ந்து பேசிய பேராசிரியர் அருணன், மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மத நல்லிணக்கத்தைச் சான்றுகளுடன் விளக்கினார். கோரிப்பாளையம் தர்காவிற்கு நிலம் வழங்கிய வீரப்ப நாயக்கர், “இதில் கை வைப்பவர்கள் கங்கை கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள்” என எழுதிய கல்வெட்டைச் சுட்டிக்காட்டினார். மேலும், 1906-ஆம் ஆண்டின் மதுரை மாவட்ட கெசட்டியர் (Gazetteer) குறிப்புகளை மேற்கோள் காட்டி, திருப்பரங்குன்றம் தர்காவிற்கு இந்துக்கள் செல்வதும், பழனி மலைக்கு முஸ்லிம்கள் காணிக்கை செலுத்துவதும், மொஹரம் அன்று இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து தீ மிதிப்பதும் மதுரையின் நீண்டகால மரபு என்றார். இந்தச் சுமூக வாழ்வைக் கெடுத்தால் மதுரையின் சுற்றுலாத்துறை மற்றும் வணிகம் பாதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

விநாயகர் சதுர்த்தியும்  திட்டமிட்ட வன்முறையும்

கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம். ராமச்சந்திரன், விநாயகர் சதுர்த்தி போன்ற வழிபாடுகளை வன்முறைக்கான கருவியாக காவி அமைப்புகள் மாற்றி வருவதைக் கண்டித்தார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகப் பாபர் மசூதி விவகாரத்தில் 356-வது பிரிவைப் பயன்படுத்தக் கோரியது இடதுசாரிகளே என்பதை நினைவூட்டிய அவர், பாஜகவினருக்குக் கடவுள் மீது பக்தி கிடையாது, மோதலை உருவாக்குவதே நோக்கம் என்றார். சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் ‘தினமலர்’ போன்ற நாளிதழ்களை ஒரு மாதம் படித்தால் ஒருவர் முழு சங்கியாக மாறிவிடுவார் என்று குறிப்பிட்ட அவர், அந்த அளவிற்கு விஷமத்தனமான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுவதை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்

சட்டப்பூர்வமான உரிமைகளும் நீதித்துறையின் கடமையும்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சட்டப்பூர்வமான ஆதாரங்களை முன்வைத்துப் பேசுகையில், 1923-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பிலேயே தர்கா, பள்ளிவாசல் மற்றும் அதற்கான பாதைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை என்பது தெளிவுபடுத்தப்பட்டு, 1931-இல் அது உறுதி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். சமீபகாலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பள்ளிகளில் ஆயுதப் பயிற்சி அளிப்பது சமூகப் பதற்றத்தை உருவாக்கும் முயற்சி என்றும், இதை மாவட்ட நிர்வாகம் தடுத்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீதிபதிகள் அரசியல் மேடைகளில் பேசுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரினார். திருப்பரங்குன்றத்தின் அமைதிச் சூழலைக் கெடுத்தால் மதுரையின் சுற்றுலாத்துறை மற்றும் வணிகம் பாதிக்கப்படும் என்பதையும், மதுரை எனும் சமாதானப் பூங்காவைக் காக்க ஒவ்வொரு குடிமக்களும் முன்வர வேண்டும் என்பதையும் இந்தப் போராட்டம் நாட்டுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. தொகுப்பு: ஜெ.பொன்மாறன், பா.ரணதிவே