அறிவியலை முடக்க முயலும் சூழலில் ஓர் அற்புத நூல் ‘இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100’
ஞ்ஞானிகள் பற்றிப் பேசும் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. இந்தியாவிலிருந்து உலக அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித்த வர்கள் பற்றிய எழுத்தாக்கங்களும் அவ்வப்போது வருகின்றன. தமிழில் முதல் முறையாக “இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100” என்ற, கல்வியாளர் ஆயிஷா இரா. நடராசன் எழுதிய 425 பக்கங்களை கொண்ட நூல் 2025ஆம் ஆண்டு விடைபெறும் நாளா கிய இன்று மாலை வெளியாகிறது. இந்த 100 விஞ்ஞானி களில் 29 பேர் பெண்கள், 43 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது. பாரதி புத்தகாலயத்தின் ‘புக் டே’ இணைய இதழில் வெளியான ஏழாண்டுகளாகப் பல்வேறு தரவுகளை திரட்டி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்திய அரசின் மேனாள் அறிவியல் ஆலோசகர் பேரா சிரியர் முனைவர் கே.விஜயராகவன், அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் இருவரும் சிறப்பான அணிந்துரைகள் வழங்கியிருக்கிறார்கள். மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கு இந்நூல் உயர் கல்வியில் அறிவி யலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டும்.
பெரியவர்களுக்கு கல்விப் பருவத்தில் அறிவியல் படிக்காத ஏக்கத்தை ஏற்படுத்தும். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை விளக்கியிருப்பதோடு, ஆராய்ச்சியில் ஈடுபட அவர்களைத் தூண்டியது எது என்பது குறித்து அவர்க ளோடு உரையாடி எழுதியிருப்பது சுவை சேர்க்கிறது. உதாரணமாக, மும்பை நகரின் இளம் விஞ்ஞானி கரண் ஜானி இயற்பியல் பட்டப் படிப்பின்போது புகழ் பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புகழ்பெற்ற ‘தி பிரீஃப் `ஹிஸ்டரி ஆப் டைம்’ புத்தகத்தை வாசித்தது அவரோடு தொடர்புகொள்ள வைத்ததைத் தெரி விக்கிறார். அது அவரை அமெரிக்காவின் பென்சில்வே னியா பல்கலைக்கழகத்திற்கு இட்டுச்சென்றது. அங்கு முதுகலை படித்து பின்னர் ஜார்ஜியா தொழில் நுட்ப நிறுவனத்தில் முனைவர் ஆய்வை மேற் கொண்டார். சூப்பர் கணினிகளை பயன்படுத்திக் கருந்துளைகள் ஒன்றிணைவதால் வருகிற ஈர்ப்பலை களை மாதிரிப்படுத்தி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சமன் பாட்டுப் புதிரைத் தீர்த்தார். நாக்பூரின் அதீதி பந்த் ‘தி ஓப்பன் சி’ என்ற புத்த கத்தை பள்ளி நாட்களில் படித்தது தன் வாழ்க்கை யையே புரட்டிப் போட்டதைத் தெரிவிக்கிறார். அறிவிய லில் ஈடுபட முனையும் பெண்களுக்கு ஒரு முன்னுதார ணமாக, புனேயில் வேதியியல் பட்டப்படிப்பு முடித்து ஹவாய் பல்கலைக்கழகத்தில் கடல்சார் உயிரினங் கள் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1990 முதல் புனே வேதியியல் அறிவியல் ஆய்வகத்தில் 15 ஆண்டு கள் பணியாற்றியவர், வேதியியல் ஆராய்ச்சியில் அமெரிக்கப் பல்கலையின் முனைவர் பட்டம் பெற்றார்.
அண்டார்டிகா ஆய்வுப் பயணங்களில் பங்கேற்று கடல் சூழல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இத்த கைய பணிகளோடு, டாக்டர் தபோல்கர் உருவாக்கிய அமைப்பாகிய மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதி ரான அறிவியல் பார்வை பரப்புரைக்கான மகா ராஷ்டிரா சமிதி செயலாளராகவும் பங்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் அறிமுகமாகும் பல விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகள் நமது உடற்கூறுகளின் அற்புத ரகசியங்களில் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கணக்கீட்டு நரம்பியல் என்ற புதிய துறை சார்ந்த வரான சீனிவாச சக்கரவர்த்தி நரம்பியல் கணினியை யும் கணித மாதிரிகளையும் வைத்து மூளையின் செயல்பாடுகளைக் கண்டறிந்தார். உயிரியலின் ஓர் இன்றியமையாத அம்சமாகிய இடம் சார் அளவீட்டின் மூலம், மூளையின் புரிதல் திறனை ஆராய்ந்து விளக்கி யிருக்கிறார். மூளை சிகிச்சையில்… நாய்கள் மோப்ப சக்தியால் வழிகளை எளிதில் அறிகின்றன. பூனைகள் எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும் திரும்புகின்றன. ஓரிடத்திலிருந்து வேறி டத்திற்கு செல்கிறபோது மனித மூளை எவ்வாறு வழி களைக் கண்டுபிடிக்கிறது, நினைவில் கொள்கிறதென ஆராய்ந்தார். தமிழ் நாட்டில் பி.டெக் பயின்று, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சென்னையின் ஐஐடி நிறுவனத்தில் நரம்பியல், கணக்கீட்டு இருதயவியல் ஆய்வகங்களில் பணியாற்றி வருகிறார்.
அவருடைய கண்டுபிடிப்புகள் மூளை நோய் சிகிச்சையில் பெரிதும் பயன்படுகிறது. மனித உடல் கடிகாரமாகச் செயல்படுவதை ஆராய்ந்தவர் நிஷா கண்ணன். பிறப்பிலிருந்தே உடலில் ஒரு விசித்திரமான காலக் கடிகாரம் ஓடத் தொடங்குகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, பூமியின் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கு ள்ளும் இத்தகைய கடிகாரம் செயல்படுகிறதென அறுதியிட்டுக் கூறுகிறார். மரபணு சார்ந்த அணுகு முறையில் கிடைத்த சான்றுகள் இதற்கு உதவி யுள்ளன. மருத்துவ அறிவியலாளர் பிரக்யா யாதவ் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் நடத்தும் தேசிய வைரசியல் ஆய்வுக் கூடத்தில் இவர் தற்போது பணியாற்றுகிறார். இவரது பங்களிப்பு ரத்தக்கசிவு காய்ச்சல், நிபா வைரஸ், எபோலா போன்ற நோய்த் தொற்றுத் தடுப்புக்கும், மேலாண்மைக்குமான தேசிய கண்காணிப்புக் கொள்கையை மேம்படுத்த வழிவகுத்தது. கோவிட் –19 நோய்த் தடுப்பில் இவரின் பங்களிப்பு மகத்தா னது. இவர் தலைமையிலான குழுதான் கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. 45 நாட்கள் இதே நோயால் இவர் பாதிக்கப்பட்டார். தன் குடும்பத்தில் 3 பேரை கொரோனாவுக்கு பறிகொடுத்தார். இருந்த போதிலும் தொடர்ந்து கடுமையாக உழைத்துத் தடுப்பூசி உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார்.
கோவிட் பிடியிலிருந்து தப்பித்த கோடிக்கணக்கான மக்களின் நன்றி இவருக்கு வழங்கப்படும் மிகச் சிறந்த விருது. புவியிலேயே சூரிய விளைவு! தற்போது பன்னாட்டு விஞ்ஞானிகள் இணைந்து சூரியனில் நிகழும் வேதி வினை அணுப்பிணைவு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் வெற்றி பசுமை ஆற்றலை (கிரீன் எனர்ஜி) உருவாக்கிட இட்டுச் செல்லும். பூமியிலேயே சூரியனின் ஒரு செயல்முறை அடிப்படையில் ஆற்றல் உற்பத்தியை சாத்தியமாக்கு வதே பிளாஸ்மா சயின்ஸ் எனப்படும் அயனிமம் அறிவியலின் நோக்கம். அணு மின்சாரத்துக்கு வழி வகுத்த அணுப்பிளவைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்கப்பட்டது. இந்த அணுப்பிணைவு உயிர்க ளுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பின்றி தூய்மை யான ஆற்றலை உருவாக்கும் முயற்சியாகும். இன்று இத்துறையில் உலக அளவில் அறியப்பட்டவராக இந்தியாவின் செஜல் ஷா இருப்பது பெருமைக் குரியது. இவ்வாறு நம் அறிவியலாளர்களின் பங்களிப்பில் பெருமை கொள்கிற வேளையில், ஒன்றிய பாஜக அரசு அறிவியல் வளர்ச்சியை முடக்குகிற, அறிவியல் ஆராய்ச்சிகளையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் அழிக்க முற்படுவதைக் காண்கிறோம்.
இவ்வாறு முடக்குவது எதிர்கால வளர்ச்சியையே சூன்யமாக்கி விடும் என்ற அறிவியலாளர்கள், சமூக அக்கறையா ளர்களின் எச்சரிக்கை கவனத்திற்குரியது. ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வந்த விஞ்ஞான பிரச்சார் அமைப்பு மூடப்பட்டுவிட்டது. குடிமக்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்க்க வேண்டும் என்கிறது நாட்டின் அரசியல் சட்டம். அதை நிறை வேற்றி வந்த அமைப்பைத்தான் மோடி அரசு ஒழித்திருக்கிறது. மூடப்பட்ட கலாம் அமைப்பு தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (TIFAC) என்பது அப்துல் கலாம் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட அறிவியல் நிறுவனம். வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங் களை மதிப்பீடு செய்து நாட்டிற்குப் பயன்படுத்துவ தற்கான திட்டங்களை உருவாக்கும் நிறுவனம். பாது காப்பு, தொழில் வளர்ச்சி எனப் பல துறைகளில் இந்த கவுன்சில் பங்களித்து வந்தது. அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர வைத்த மோடி அரசு, அவர் உருவாக்கிய TIFAC அறிவியல் நிறுவனத்தை மூடிவிட்டது. அதைப் போன்றதே, 1914இல் உருவாக்கப்பட்டு நாட்டின் விடுதலைக்குப் பின் பதிவு செய்யப்பட்ட இந்திய அறிவியல் மாநாடு அமைப்பு (இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் அசோசியேசன்).
அந்த அமைப் பின் மாநாடு பிரதமர் பண்டித நேரு தலைமையில் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு அதன் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது இப்போதைய பிரதமரும் அமைச்சர்களும் அறிவியலுக்குப் புறம்பான கருத்து களைப் பேசினார்கள். அபத்தங்களிலிருந்து அறிவியலைக் காக்க இந்தியாவில் வேத காலத்திலேயே விமானம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது, விநாயகர் உருவம் அக்காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததன் வெளிப் பாடுதான் என்றெல்லாமல் கூசாமல் கூறினார்கள். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உள்பட உலக அளவில் பலரும் இந்த அபத்தங்களைக் கண்டித் தார்கள். இனி மாநாடுகளில் யார் பேசினாலும், அவர்க ளுடைய முன்வைப்பு அறிவியல் பூர்வமாக இருப்பதை உறுதிப்படுத்தியே அனுமதிப்பதென்று முடிவெடுக் கப்பட்டது. ஆனால் அறிவியல்பூர்வமாகக் கருத்து களை முன்வைப்போருக்கு அனுமதி மறுப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த அமைப் பின் செயல்பாட்டை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களிடம் புகுத்துவதற்காக மோடி அரசு கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை –2020. அதனடிப்ப டையில் பாடங்கள் தயாரிக்கப்பட்டு நாட்டின் பல பல் கலைக்கழகங்களில் ஏற்கெனவே அமலாக்கி வரு கிறார்கள்.
மேற்படி கொள்கையின் அடிப்படையில் சேதுபந்த வித்துவான் யோஜனா என்ற திட்டத்தில், குருகுல முறையில் சமஸ்கிருத கல்வி நிலையங்க ளில் 5 ஆண்டுகள் படித்தால் ஐஐடி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மாணவரா கலாம். அதற்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கும். இந்த குருகுல பள்ளியில் வேதம், வாஸ்து, சோதிடம் ஆகிய பாடத் திட்டங்களைப் போதிக்கிறார்கள். திருப்பதியில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழ கத்தில் தர்ம சாஸ்திரம், வேதம் உள்ளிட்டவை பாட மாக்கப்பட்டுள்ளன. அதன் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் ஆகியோரோடு கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்றைய `ஹீரோக்களை விட அனுமன்தான் நிஜ ஹீரோ’ என்று பேசினார்.
உலகெங்கும் அறிவியல் வேகமாக முன் னேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாக மநுநீதியையும் சனாதனத்தையும் நியாயப்படுத்தி கல்விக்கூடங்க ளில் கற்பிக்கிறார்கள். இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை மட்டுமல்ல, சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் இப்படிப்பட்ட அணுகுமுறை கடுமை யாகச் சீர்குலைக்கும். அதனைத் தடுத்து நிறுத்துவ தற்கு அறிவியல் தளத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியேயும் பரந்துபட்ட முயற்சிகளும் கருத்துப் பரப்புரைகளும் தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு பங்களிப்பை செலுத்துவதா கத்தான் இந்தியாவிலிருந்து அறிவியல் களத்திற்கு அரும்பணியாற்றிய 100 விஞ்ஞானிகளைப் பற்றிய இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. எளிய நடையில் அரிய தகவல்களோடு ஆசிரியர் ஆயிஷா இரா.நடராசன் உருவாக்கித் தந்துள்ள இந்நூலை மக்க ளிடம் எடுத்துச் செல்வோம். அறிவியல்பூர்வமான இந்தியாவை வளர்த்தெடுப்பதில் பங்காற்றுவோம்.
