articles

img

திருப்பரங்குன்றம் : சிதைக்கப்படும் மக்கள் ஒற்றுமையும், மீட்டெடுக்கப்பட வேண்டிய வரலாற்று உண்மைகளும் - சு.வெங்கடேசன் எம்.பி.,

திருப்பரங்குன்றம் : சிதைக்கப்படும் மக்கள் ஒற்றுமையும், மீட்டெடுக்கப்பட வேண்டிய வரலாற்று உண்மைகளும்

“மக்கள் ஒற்றுமையைப் பாது காப்போம்” என்ற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரையில் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத் திருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் திருக்கா ர்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகள் புதிதாகக் கிளப்பியிருக்கிற தேவை யற்ற ஒரு சர்ச்சையினால், இன்று தமிழகத்தின் கவனமும், தேசத்தின் கவனமும் மதுரையை நோக்கித் திரும்பியிருக்கிறது. நாம் எதையெல்  லாம் பேச வேண்டும்? மதுரையின் முன்னேற் றம், வேலைவாய்ப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டம் என எத்தனையோ ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து மக்களை முற்றிலும் திசைதிருப்புகிற வேலையைச் சில சக்திகள் திட்டமிட்டுச் செய்கின்றன. அதற்கு எதிராகத் தமிழ்நாடும் மதுரையும் மிக வலிமையான எதிர்வினையை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த எதிர்வினையின் ஒரு பகுதிதான் இந்த உண்ணாநிலை அறப்போராட்டம். மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பெருமிதம் திருப்பரங்குன்றத்திற்கு என்று ஒரு மிகப்பெரிய தனிச்சிறப்பு இருக்கிறது. இந்தியத் திருநாட்டில் ஒரு வழிபாட்டுத் தலம், மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியங்களால் பாடப்பட்டு, வரலாற்றுத் தடயங்கள் மாறாமல் இருக்கிறது என்றால் அது அநேகமாகத் திருப்பரங்குன்றம் மட்டுமாகத்தான் இருக்கும். சங்க இலக்கியங்களில் ‘பரங்குன்றம்’ என்பது குளிர்ந்த அழகிய குன்றாகப் பேசப்படுகிறது. தமிழின் முதல் கடவுளாகக் கருதப்படும் முரு கனை, ‘கொற்றவை சிறுவ’ என்று சங்க இலக்கி யம் அழைக்கிறது. அந்த மலைமகனை, குறிஞ்சிக் கடவுளை மூவாயிரம் ஆண்டு களாகத் தமிழ் இனம் கொண்டாடி வருகிறது. ஒரு காதல் கடவுளாக முருகனைத் தமிழ் இனம் தொடர்ந்து வழிபடுகிறது. சிலப்பதிகாரத்தில் ‘வேல்கோட்டம்’ என்ற  குறிப்பு வருகிறது. உடல்நலம் குன்றிய ஒரு வருக்கு நலம் வேண்டி, திருப்பரங்குன்றத்தில் இருந்த வேல் வடிவ இறைவனை வழிபட்டதாக அந்தப் பாடல் சொல்கிறது. அதாவது, உருவ வழிபாடு துவங்குவதற்கு முன்பே, வேலை வைத்து வழிபட்ட மரபு திருப்பரங்குன்றத்தில் இருந்தது என்பதற்கு இதுவே சாட்சி. பரிபாட லில் முருகன் வள்ளியை மணம் முடித்த இடமாகப் பாடப்படுகிறது. ஆனால், அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த கந்தபுராணம், இது முருகன் தெய்வானையை மணம் முடித்த இடம் என்கிறது. இப்படித் தொன்மங்களும் வரலாறும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலம் இது. பௌத்த, சமண, சைவ மரபுகளின் சங்கமம் தமிழகத்தில் பௌத்த மதம் தழைத் தோங்கிய காலத்தில், திருப்பரங்குன்றம் ஒரு  பௌத்தத் தலமாக மாறியது. பௌத்த பிக்கு கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்தார்கள், கல்வெட்டுகளைப் பொறித்தார்கள், பௌத்த அறத்தைப் போதித் தார்கள். அதற்குப் பிறகு சமணர்கள் காலம் வந்தது. இன்று நாம் பெருமையோடு பயன் படுத்தும் ‘பள்ளி’ என்ற சொல்லே சமணர்கள் தந்ததுதான். கூடல் என்று அறியப்பட்ட நக ரத்திற்கு ‘மதுரை’ என்று பெயர் சூட்டியவர்கள் சம ணர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள சமணக் கல்வெட்டுகளில் உள்ளன. அதன்பிறகு ஏழாம் நூற்றாண்டில் சைவம் மேலோங்கியது. பாண்டிய மன்னன் பராந்தகனுக்கு மாரன்காரி, சாத்தன் கணபதி என இரு முக்கியமான தளபதிகள் இருந்தனர். மாரன்காரி யானைமலையில் குடைவரை கோவிலை உருவாக்கினார். சாத்தன் கணபதி திருப்பரங்குன்றத்தில் சிவனுக்கான குடைவரை கோவிலை உருவாக்கினார். யானைமலை பெருமாள் கோவிலும் திருப்பரங்குன்றம் சிவன் கோவிலும் ஒரே காலத்தில், ஒரே அரசனின் இரு தளபதிகளால் கட்டப்பட்டவை. எட்டாம் நூற்றாண்டில்தான் இங்கு முதன்முதலில் சமஸ்கிருதக் கல்வெட்டுகள் வருகின்றன. அதற்கு முன்பு வரை திருப்பரங்குன்றம் முருக னோடும் தமிழோடும் மட்டுமே சம்பந்தப்பட்ட இடமாக இருந்தது. இப்படி அடுக்கடுக்கான வரலாற்றைத் தன் மார்பில் தாங்கி நிற்கும் தலம் இது. கட்டிடக்கலையும் காலத்தின் சாட்சியமும் திருப்பரங்குன்றம் கோவிலின் ஒவ்வொரு மண்டபமும் எப்போது கட்டப்பட்டது என்பதற்குத் துல்லியமான வரலாறு இருக்கிறது. இது புராணக் கதை அல்ல; எழுதப்பட்ட வரலாற்று உண்மை. வீரப்ப நாயக்கரால் கோபுரம் கட்டப் பட்டது. கருவறை மற்றும் கம்பத்தடி மண்டப த்தை திருமலை நாயக்கர் கட்டினார். ராணி மங்கம்மாள் ஆஸ்தான மண்டபத்தைக் கட்டி னார். 16 கால் மண்டபம், மயில் மண்டபம் என ஒவ்வொன்றுக்கும் தெளிவான வரலாற்றுத் தரவுகள் உள்ளன. தஞ்சாவூரோ, காஞ்சி புரமோ - சிற்பக் கலைக்குப் போட்டியாக மதுரையில் உள்ள சிற்பங்களைச் சொல்லலாம். குறிப்பாக, ராணி மங்கம்மாளின் சிற்பம் அங்கு வடிக்கப்பட்டுள்ளது. ஒரு பேரரசியாக இருந்தும், அவர் கழுத்தில் ஒரு முத்துமாலை கூட இருக்காது. “நான் பேரரசியாக இருக்கலாம், ஆனால் எனக்கு முத்துக்களின் மீது மோகம் இல்லை” என்ற அறத்தைச் சொல்லும் சிற்பம் அது. வழியில் செல்பவர்கள் தங்குவதற்கும், ஏழைகளுக்கும் வயோதிகர்களுக்கும் உணவு வழங்குவதற்கு மான ‘சத்திரம்’ என்ற அறத்தை உருவாக்கியவர் அவர். இவ்வளவு பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட மதுரையில், இன்று வரலாற்றுப் புரட்டைச் செய்ய முயல்கிறார்கள். திட்டமிடப்பட்ட ‘அயோத்தி’ மாடல் அரசியல் 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே ஆண்டில், இந்து முன்னணி இங்கும் ஒரு மதப் பிரச்சனையை உருவாக்க முயன்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முன்நின்று 15 ஆண்டுகாலம் போராடி அதைத் தடுத்தது. இன்று மீண்டும் அதே போன்ற ஒரு ‘பேட்டர்ன்’ அரங்கேற்றப்படுகிறது. 2019-க்குப் பிறகு இந்தியா முழுவதும் 30-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களில் இதே போன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முதலில் ஒரு நம்பிக்கையை உருவாக்குவது, பிறகு நீதிமன்றம் மூலம் அதற்குச் சட்ட வடிவம் கொடுப்பது, அதன் மூலம் களத்தில் இறங்கிக் கலவரம் செய்வது - இதுதான் இவர்களின் மெத்தட். உத்தரப்பிரதேசம் சம்பல், வாரணாசி, லக்னோ என எங்கும் இதே மாடல் தான். நீதிமன்றத்தில் ஒரு தனி நீதிபதி தனது தீர்ப்பில் 39 இடங்களில் ‘தீபத்தூண்’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், 1981-இல் தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகத்தின்படி, மூலஸ்தானத்திற்கு நேர் மேலே உள்ள இடமே  உண்மையான தீபத்தூண். அந்த நூலைப் பதிப்பித்தவர் மரியாதைக்குரிய தொல்லிய லாளர் நாகசாமி. அவருக்குத் தான் மோடி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அவர் பதிப்பித்த புத்தகத்திலேயே தீபத்தூண் எது, எந்தப் பசுவின் நெய்யை ஊற்றித் தீபம் ஏற்ற வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாக உள்ளன. “தனிப்பசுவின் நெய்யுருக்கித் தூண்டா விளக்கெரியும் சுப்பையா சன்னிதியில்” என்று தமிழ்ச் சமூகம் எழுதி வைத்திருக்கிறது. ஆனால் இன்று, அரசு வெளியிட்ட தரவு களைப் புறந்தள்ளிவிட்டு, ஒரு புதிய சர்ச்சையை நீதிமன்றம் மூலம் முன்னெடுப்பது ஆபத்தானது. அதிமுகவின் சரணாகதி அரசியல் தமிழக அரசியலில் அதிமுக இன்று கொண்டுள்ள நிலைப்பாடு வேதனையானது. திருப்பரங்குன்றம் கோவிலைப் பற்றிய முதல் புத்தகத்தை வெளியிட்டது எம்.ஜி.ஆர்  அரசு. 1994-இல் ஜெயலலிதா ஆட்சியில்தான், “உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம்  ஏற்றப்படும்” என்று இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுக, அந்தத் தலைவர்களின் கொள்கைகளை மறந்துவிட்டு பாஜகவின் நிழலாக மாறியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் எம்.ஜி.ஆரின் விசுவாசி அல்ல, மோடி - அமித்ஷாவின் விசுவாசி என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த கருமுத்து கண்ணன் அவர்கள், மதுரையின் 340 கோவில்களுக்குத் தன் சொந்தச் செலவில் குடமுழுக்கு நடத்தி யவர். மீனாட்சி அம்மன் கோவிலின் பொற்றா மரை குளத்தைப் புனரமைத்தவர். அவரே உச்சிப் பிள்ளையார் கோவிலில்தான் தீபம்  ஏற்ற வேண்டும் என்று சாட்சியம் அளித்துள் ளார். இவர்களை விடப் பெரிய ஆன்மீகவாதி களா இன்று கூச்சல் போடும் வலதுசாரிகள்? மதுரையின் பெருமையை உணராதவர்களிடம் இன்று அதிமுக சரணடைந்திருப்பது அந்த இயக்கத்திற்கே நேர்ந்த சரிவு. மதுரையின் ஆன்மா:  அன்பும் தோழமையும் மதுரை என்பது ரம்ஜானுக்குப் பிரியாணி வாங்கித் தந்து, கிறிஸ்துமஸ்க்கு கேக் சாப்பிட்டு, பொங்கலைச் சர்ச்சில் கொண்டாடும் மக்களின் பூமி. இங்கு மதநல்லிணக்கம் என்பது ரத்தத்தில் ஊறியது. சேக்கிப்பட்டி ஜல்லிக்கட்டில் தர்கா மாடுதான் முதல் மாடாக அவிழ்த்து விடப்படுகிறது. திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு விழாவில் இந்துக்கள் தேரை இழுக்கிறார்கள். சித்திரைத் திருவிழாவில் இஸ்லாமியர்கள் ஜிகர்தண்டா வழங்குகிறார்கள். கீழமாசி வீதியில் பால்குடம் தூக்கி வருபவர்களின் கால்களில் சந்தனம் தடவும் மைந்தர்கள் இஸ்லாமியர்கள். இந்த நட்பையும், தோழமையையும் ஒதுக்கி வெறுப்பை உருவாக்குவதுதான் நவீன பாசிசம். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனை வந்தபோது பாஜக சார்பாகப் பேசியவர்கள் யார்? வெறுப்புப் பேச்சுகளுக்காகத் தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்ட அனு ராக் தாக்கூரும், தேஜஸ்வி சூர்யாவும் தான்.  இவர்களுக்குத் திருப்பரங்குன்றம் ஒரு ஆன்மீக விஷயம் அல்ல; இது ஒரு தேர்தல் அரசியல் கருவி. மதுரையின் எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம் என எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள், மதவெறியை மட்டும் அறுவடை செய்ய நினைக் கிறார்கள். எளிய உழைப்பாளி மக்களை இரத்தம் குடிக்கும் மனிதர்களாக மாற்றுவது தான் பாசிசத்தின் நோக்கம். எரிமலைகளாக எழுவோம் மதுரை என்பது சாதாரண நிலம் அல்ல; இது நீதியைக் கேட்டுத் தலைநகரையே எரித்த கண்ணகியின் மதுரை. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று இறை வனிடமே வாதாடிய நக்கீரனின் மதுரை. இங்கே  உங்கள் மதவெறி அரசியல் எடுபடாது. பன்னி ரண்டு ஆண்டுகள் பிரதமராக இருக்கும் அதி காரத்தை வைத்துக்கொண்டு, மதுரை மண்ணில் விளையாட நினைக்காதீர்கள். ஆட்சியில் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பது அறியாமை. இது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு மான போரல்ல; இது மதவெறியர்களுக்கும் சமயச்சார்பற்ற மனிதர்களுக்கும் இடையி லான போர். இது ரத்தம் குடிக்கத் துடிக்கும் கூட்டத்திற்கும், அன்புமயமான மதுரை மக்களுக்கும் இடையிலான போர். நேரடியாகச் சொன்னால், மோடி - அமித் ஷா கூட்டத்திற்கும் மதுரை மண்ணின் மைந்தர்களுக்கும் இடையி லான போர். இந்தப் போரில் மதுரை மக்கள் ஒரு போதும் தோற்க மாட்டார்கள். மத நல்லிணக்கத் தைக் காக்கக் கம்யூனிஸ்டுகள் கடைசி மூச்சு வரை களத்தில் நிற்போம்! டிசம்பர் 30 மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் ஆற்றிய  உரையின் பகுதிகள்