தகிடுதத்தம்]
நாங்கள் வங்கிகளை இணைக்கப் போவ தில்லை, வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கவில்லை என்ற அறிவிப்புகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் சத்தமில்லாமல் தனியார் மயமாக்கல் வேலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. டிசம்பர் 2 ஆம் தேதியன்று பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் 6 விழுக்காடு பங்குகளை விற்கிறார்கள். இதற்கான பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில்தான், இவற்றையெல்லாம் செய்ய மாட்டோம் என்று மறுபக்கத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இதுபோன்ற விற்பனை மேலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ஊடகங்களும் பெயருக்கு மட்டும் இவற்றைக் கடைசி நேரத்தில் சிறியதாகப் போட்டு முடித்துக் கொள்கின்றன. வழக்கம்போலவே, இதற்கும் சீர்திருத்தம் என்று பெயரிட்டுக் கொள்கிறார்கள். இது சீர்திருத்தம் அல்ல, தகிடுதத்தம் என்று வங்கித்துறையினர் விமர்சிக்கின்றனர்.
அதிகரிப்பு
எய்ட்ஸ் தொற்று திரிபுராவில் அதிகரித்து வருகிறது என்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வொன்றில் அம்மாநில முதல்வர் மாணிக் சாஹாவும்இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயிரத்து 417 பாதிக்கப்பட்டவர்கள் திரிபுராவில் உள்ளனர்என்று கூறியுள்ள அவர், தேசிய சராசரியை விடக் குறைவாகவே உள்ளதாகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால், இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு நடவடிக்கைகள் மூலமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மோசமாகியுள்ளது. 2015ல் 0.23 விழுக்காடாக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு, 2023ல் 1.2 விழுக்காடாக உயர்ந்ததை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களே தெரிவிக்கின்றன. அரசு நடவடிக்கைகள் போதிய அளவில் இல்லை என்பதால், தொண்டு நிறுவனங்களை இதில் ஈடுபடுத்த
வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அடிமை
குஜராத்தில் 17,50,000 ஆண்களும், 1,85,000 பெண்களும் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய ஆய்வு தெரிவிக்கிறது. இத்தனைக்கும் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமாக குஜராத் இருக்கிறது. இந்த மோசமான நிலைககு ஒன்றிய, மாநில அரசுகள்தான் முழுக்காரணம் என்கிறார் அம்மாநில சட்டமன்ற உறுப்பி னரான ஜிக்னேஷ் மேவானி. போதை மீட்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டி
ருந்த சுமார் 70 தொண்டு நிறுவ னங்களுக்கான நிதியுதவிகளை மாநில அரசு நிறுத்திவிட்டது. அதோடு, அண்மையில் மிசோரமில் பிடிபட்ட போதைப்பொருட்கள் குஜராத்தில் இருந்து சென்றதாகத் தெரிகிறது. அதையும் தாண்டி, குஜராத்தில் தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களும் பரவி வருகிறது என்று குற்றம் சாட்டுகிறார் மேவானி. அதானிக்குச் சொந்தமான துறைமுகம் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்படு கிறது என்று குற்றச்சாட்டுகளும் நிலவி வருகின்றன.
பொறுப்பு
இதுவரையில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 41 வாக்குச்சாவடி மட்ட அலுவலர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வேலைப்பளுதான் இதற்குக் காரணம் என்றும், தேர்தல் ஆணையம்தான் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு புறம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், மறுபுறத்தில் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திரிணாமுல் காங்கிரசின் நெருக்கடிகள் என்று இந்த ஊழியர்கள் பதட்டத்திலேயே இருக்கிறார்கள். அவசரகதியில் இந்த சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிகளைச் செய்ய வற்புறுத்துவதால்தான் நிலைமை மோசமாகியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி புகார் அளித்திருக்கிறது. தனது மோசடிகளை முழுமையாக அரங்கேற்ற முடியாத காரணத்தால் பாஜகவும் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.
