திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சனையில் கலவரத்துக்கு வித்திடும் நீதிபதி
நாடாளுமன்றத்தில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்
புதுதில்லி, டிச. 5 - மதுரை திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான பிரச்சனையில் ஒரு நீதிபதி கலவரத்திற்கு வித்திடுவதாகவும், மதக் கல வரத்தை தூண்டும் விதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் டிசம்பர் 4 வியாழனன்று, நிதி அமைச்சர் அறிமுகப்படுத்திய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான வரி விதிப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், தேசியப் பாதுகாப்பு என்பது தலைநகரிலேயே கேள்விக்குறியாக உள்ளது என்று கூறினார். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் கலவரத்திற்கு வித்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையை தனது ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அமலாக்க பயன்படுத்தியுள்ளதாகவும், இது மாநில காவல்துறைக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் அபாயகரமான நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தீர்ப்பை அமலாக்குவதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை வழங்க முற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த நீதிபதியின் நடவடிக்கையால் மதக் கலவரம் உருவாகும் என்றும், இவர் மீது ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இவர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமாகத்தான் தேசப் பாதுகாப்பின் மாண்பை உயர்த்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். வரி விதிப்பு வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் பான் மசாலா மற்றும் போதைப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுமா என்பதை நிதி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரினார். இந்த வருவாய் ஒன்றிய அரசுக்கு மட்டுமே சென்று மாநில அரசுகளுக்கு போவதில்லை என்றும், சுகாதாரம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை மாநில அரசுகளும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், இந்த செஸ் வரியில் ஐம்பது சதவிகித வருவாயை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வருவாயைப் பயன்படுத்தும் திட்டங்களை மாநில அரசுகளே உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுகாதாரத் திட்டங்களில் குறைபாடுகள் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் காப்பீட்டுக் குழுக்கள் சிகிச்சைக்கான அனுமதியை மறுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி இன்று எதற்கு பயன்படுகிறது என கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து எவ்வளவு தொகை கேட்டாலும் ஒரு பயனாளிக்கு ரூ.1லட்சம் முதல் ரூ.3 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இன்று நோய் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் பல குடும்பங்கள் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார். தொற்றுநோய் பரவக்கூடிய காலங்களிலும் மக்கள் சிரமப்படுவதாகவும், மருந்து விலையைக் கட்டுப்பாட்டில் வைக்க அரசால் முடியவில்லை என்றும், கூடுதலான விலை வைத்து விற்கும் பொருட்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தீவிரவாதத்தை ஒழிக்க நம்பிக்கை அளிக்க வேண்டும் தேசப் பாதுகாப்பு தலைநகரிலேயே கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் கூறினார். புல்வாமா தாக்குதலின் போது ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித்த பின்னரும் தில்லியில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தீவிரவாதத்திற்கு ஏன் மக்கள் இரையாகிறார்கள் என்றும், புறக்கணிப்புக்கு ஆளாகும் மக்களே தீவிரவாதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்றும் அவர் கூறினார். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுப்பதன் மூலமாகத்தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார். போதைப் பொருள் கடத்தல் ஆறு மடங்கு அதிகரிப்பு மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதாகவும், மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளின் கடத்தல் 2019-க்கும் 2024-க்கும் இடையில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் கடத்தல் மீது விதிக்கப்படும் அபராதங்கள் சுகாதாரத்திற்காகவும் பாதுகாப்புக்கான நிதியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வரி விதிப்புக் கொள்கையில் மாற்றம் தேவை அரசின் ஒட்டுமொத்த வரி விதிப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும், ஏழைகளுக்கான வரி விதிப்பைக் குறைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைத் தவிர்த்து அவர்கள் மீது வரி விதிப்பதன் மூலம் வருவாயை ஏற்படுத்த வேண்டும் என்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கோரினார். இவை குறித்து நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
