articles

img

கவின்களின் கொலைகளும் தடுப்புச் சட்டத்தின் அவசியமும் - கே.ஜி.பாஸ்கரன்

கவின்களின் கொலைகளும் தடுப்புச் சட்டத்தின் அவசியமும்

கடந்த ஜூலை 27ஆம் தேதி நெல்லையில் நடந்த கொடூரக் கொலைச் சம்பவம் ஆணவக் கொலைகள் குறித்த விவாதத்தை நம் சமூகத்தில் தீவிரமாக்கி உள்ளது. இனியும் தாமதிக்கா மல் ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்னுக்கு வந்துள்ளது.  பொது சமூகத்தில் இருந்து விலகி நிற்கும் சாதிய அமைப்புகள் இந்த சட்டத்திற்கு எதிராக பேசி வரு கின்றன. கலாச்சாரம், கெளரவம் என்ற பிற்போக்குப் பார்வையில் உழன்று கிடக்கும் சமூகத்தில் மாற்றுக் கருத்துக்கள் போராடித்தான் வெற்றி பெற்றுள்ளன. ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்

பத்து ஆண்டுகளுக்கு முன்பே சட்ட முன்வடிவை தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் கட்சி

2003இல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநாடு முந்திரிக்காடு பகுதியைச் சார்ந்த கண்ணகி, முருகேசன் படுகொலை நடைபெற்றது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி குரல் எழுப்பி போராடி வந்ததோடு நில்லாமல், சட்டமன்றத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சட்ட முன்வடிவையும் தாக்கல் செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன் 29.9.2015 அன்று “கெளரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” எனும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் அனைத்து இளம் வயது ஆண், பெண் இரு பாலருக்கும் தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையும், திருமண பந்தத்தில் தம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வித உரிமைகளைத் தடுக்கும் துன்புறுத்தல்கள் குற்றமாக கருதப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அன்றைய அதிமுக அரசு இதை விவாதிக்கக் கூட தயாராக இல்லை. முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் “மாநிலத்தில் கவுரவக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை” என்று கூறினார். ஆனால் இதே தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்திற்கு கொடுத்த அறிக்கையில் 2013 முதல் 2019 வரை தமிழகத்தில் 23 ஆணவக் கொலைகள் நடைபெற்ற தாக ஒப்புக்கொண்டது.

சட்டத்தின் தேவையைச் சொல்லும் இந்திய சட்ட ஆணையம்

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்ட நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் வழிகாட்டி உள்ளன. 2012இல் இந்திய சட்ட ஆணையம் “திருமண சுதந்திரத்தில் தலையிடுதல் தடுப்புச் சட்டம்” என்ற மசோதாவை முன்மொழிந்தது. ஆனாலும் இது கணக்கில் எடுக்கப்படவில்லை. உசிலம்பட்டி விமலாதேவி கொலை வழக்கில் சாதி மறுப்பு தம்பதிகளுக்கு பாதுகாப்பு மையங்கள் உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் வழி காட்டிய பின்னரும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. 2018இல் உச்சநீதிமன்றம் ஆணவக் கொலை களை தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கிய போதும் அரசுகள் அதனை நிறைவேற்ற வில்லை.

ராஜஸ்தான் முன்மாதிரியும் தமிழகத்தின் தேவையும்

ராஜஸ்தான் மாநிலத்தில் 2019இல் “ராஜஸ்தான் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம்” நிறைவேற்றப் பட்டது. இச்சட்டம் ஆணவக் கொலைக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கிறது. பாதுகாப்பு மையங்கள் அமைப்பு, சிறப்பு நீதி மன்றங்கள் உருவாக்கம், விரைவான விசாரணை ஆகியவை இதில் உள்ளன. இந்த சட்டத்திற்கு பின்னர் ராஜஸ்தானில் ஆணவக் கொலைகள் கணிச மாகக் குறைந்துள்ளன.

மடமைக்குப் பலியாகும்  மனித உயிர்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரம் ஆணவக் கொலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 400க்கும் அதிக கொலைகள் நடந்ததாக தகவல்கள் உள்ளன. இக்கொலைகள் பல்வேறு குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்படுவதால் தரவுகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆறு வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்திருப்பதாக சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் குறிப்பிடுகிறார். தர்மபுரி, உடுமலைப்பேட்டை, விருதுநகர், சிவ கங்கை போன்ற மாவட்டங்களில் சமீப ஆண்டுகளில் கொடூர ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. பெண் வீட்டைச் சார்ந்தவர்களே இந்த குற்றச் செயல் களில் அதிகம் ஈடுபடுகின்றனர். பெண்கள் மீதான உடல்ரீதியான, மனரீதியான தாக்குதலுடன் கல்வி  நிறுத்தம், கட்டாயத் திருமணம், சமூகப் புறக்கணிப்பு ஆகியவையும் நடக்கின்றன. பல சம்பவங்கள் தற்கொலை என மூடி மறைக்கப்படும் நிலையும் உள்ளது.

உலகளாவிய பிரச்சனையும்  சட்ட அவசியமும்

பாகிஸ்தானில் வருடத்திற்கு 1000க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடக்கின்றன. ஈரானில் பெண்களின் உரிமைக் கோரிக்கைகள் கொடூர தண்டனைகளில் முடிகின்றன. ஜோர்டான், பிரேசில் போன்ற நாடுகள் ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் இத்தகைய சட்டம் அவசியம்.

இந்துத்துவா கருத்தியலுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டம்

ஆணவக் கொலைகள் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் பட்டியல் சமூகத்திற்கும் இடையில் மட்டுமல்லாமல், ஒரே சமூகத்திற்குள்ளேயும் நடக்கின்றன. சாதியை கெட்டிப்படுத்தல், சாதியத் தூய்மை, பிற சாதி எதிர்ப்பு போன்ற அம்சங்களில் இது  வேரூன்றி இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சி இத்தகு போக்குகளை அதிகரிக்கச் செய்துள்ளன. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் வறுமை, ஏற்றத்தாழ்வு, வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதை மடைமாற்றம் செய்யும் விதமாக மத, சாதி அடையாளங்களை வலுப்படுத்தி பிளவுவாத அரசியலுக்கு இந்துத்துவா சக்திகள் பயன்படுத்து கின்றன. இந்து தேசிய கலாச்சாரத்தை முன்நிறுத்தும் இந்துத்துவா கருத்தியல் சாதி கட்டமைப்பை, பெண் அடிமைத்தனத்தை மீட்டுருவாக்கம் செய்கிறது. அனைவரும் கலந்து வாழும் நவீன சமூகத்தில் சுய விருப்ப தேர்வு விரிவடைவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இத்தகு சுய விருப்ப தேர்வுக்கு எதிரான கலாச்சார அடையாள அரசியலை எதிர்த்து முன்னெ டுக்கும் நடவடிக்கையில் முக்கியமானது ஆணவக் கொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டம். அதற்கான சிறப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 10 நெல்லை பொதுக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ளது. கட்சி மாநில அளவில் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்ட உதவியையும் வழங்கி வருகிறது.

சிறப்புச் சட்டத்தின் அம்சங்கள்

முன்மொழியப்பட்ட சட்டத்தில் ஆணவக் கொலை க்கு கடுமையான தண்டனைகள், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உடனடி பாதுகாப்பு, சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விரைவான விசாரணை, குற்றவாளிகளுக்கு மறு வாழ்வு திட்டங்கள் ஆகியவை இடம்பெற வேண்டும். கல்வி சீர்திருத்தம், சமூக விழிப்புணர்வு திட்டங்கள், ஊடக பொறுப்புணர்வு ஆகியவையும் அவசியம். நெல்லை பொதுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து சமூகத் தேரை முன்னோக்கி நகர்த்த நாமும் நமது கரங்களால் வடம் பிடிப்போம்.