articles

img

ஜிஎஸ்டி உண்மையில் குறைக்கப்பட்டுள்ளதா - அறிவுக்கடல்

ஜிஎஸ்டி உண்மையில் குறைக்கப்பட்டுள்ளதா

மக்கள் நலனுக்காக ஜிஎஸ்டியை ஏராளமாகக் குறைத்துள்ளதாகவும், அதன் பலனை நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் மோடி அரசும், சங்கிகளும் அலறுகிறார்கள். அது தங்கள் தீபாவளிப் பரிசு என்றும் புளகாங்கிதம் கொள்கிறார்கள். ஏதோ நிறுவனங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காகவே பொருட்களையும், சேவைகளையும் விற்பதைப்போல இவர்கள் கூவுவதே சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. உண்மையில், குறைந்த ஜிஎஸ்டி விகிதங்களுக்கு வரி உள்ளீடு கழிவு (ITC) கிடையாது என்பது இந்தியாவில் இருக்கிற நிலை.  ஒரு பொருளின் தயாரிப்பில் பல மூலப்பொருட்கள், பல நிலைகள் இருக்கும்போது பலமுறை வரிவிதிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்காக, ஏற்கெனவே மூலப்பொருட்கள்மீது செலுத்தப்பட்ட வரி, முந்தைய நிலைகளில் செலுத்தப்பட்ட வரி ஆகியவற்றை, இறுதி உற்பத்திப்பொருளின் வரியில் கழித்துக்கொள்வதுதான்  ஐடிசி - ITC(Input Tax Credit).  உலகின் 193 நாடுகளில் 175 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது. இவற்றில் மிகப்பெரும்பாலான நாடுகளில் எவ்வளவு குறைவான ஜிஎஸ்டி விகிதமாக இருந்தாலும் ஐடிசி கழிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், பல நாடுகளில் 0 சதவீத ஜிஎஸ்டி-யில்கூட, ஐடிசி தொகையைத் திரும்பப் பெறும் வசதி உள்ளது.  விலை உயர்வு அபாயம் ஆனால், இந்தியாவில் 5 சதவீத ஜிஎஸ்டிக்கே, ஐடிசி பெறும் வசதி இல்லை. இப்போது பல பொருட்கள், சேவைகளுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதமாகவும், 0 சதவீதமாகவும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டதாக படாடோபமாக அறிவிக்கப்பட்டாலும், அவற்றின் மூலப்பொருட்களுக்குச் செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப் பெற முடியாது என்பதால் விலை உயர்வு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 0 சதவீத ஜிஎஸ்டி என்பதன் பின்னால் உதாரணமாக, காப்பீட்டுத்துறை. இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு ஜிஎஸ்டி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டிட வாடகை, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வாங்குகிற பொருட்கள் என்று பலவற்றுக்கும் அந்த நிறுவனங்கள் இன்றும் ஜிஎஸ்டி செலுத்துகின்றன. பிரிமியத்துக்கு ஜிஎஸ்டி 0 சதவீதம் என்பதால் அந்த நிறுவனங்களுக்கு இப்போது ஐடிசி கிடையாது. இப்போது அந்த நிறுவனங்களின் வரவு- செலவில் இந்த வரிகள் கூடுதல் செலவாகும். இந்தச் செலவால் அந்த நிறுவனங்களின் லாபம் குறையும்போது, தானாகவே பிரிமியம் உயரும். இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு பொதுவான உதாரணத்தை எடுத்துகொள்வோம். உதாரணமாக  12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்து க்கொள்வோம்.  அதன் உற்பத்தி விலை ரூ.100 என்று வைத்துக்கொள்வோம். அதற்கு 3 மூலப்பொருட்கள் தேவை என்றும், ஒன்று 18 சதவீதம், இரண்டு 12 சதவீதம் வரி விகிதத்தில் இருப்பதாகவும் கொள்வோம். 18 சதவீதம் வரி உள்ள மூலப்பொருள் ரூ.20க்கும், 12 சதவீதம் வரியுள்ள மூலப்பொருட்கள் தலா ரூ.30க்கும் சேர்க்கப்படுவதாகவும், உற்பத்திச் செலவு ரூ.20 என்றும் கொள்வோம்: 18 சதவீத வரி உள்ளடக்கிய ரூ.20இல் வரி ரூ.3.05 12 சதவீத வரி உள்ளடக்கிய ரூ.60இல் வரி ரூ.6.43 ஆகவே, மூலப்பொருட்களில் செலுத்தப்பட்ட மொத்த ஜிஎஸ்டி ரூ.9.48 உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ரூ.100, வரி 12 சதவீதம் என்றால் வரி ரூ.12 அந்த ரூ.12இல் ரூ.9.48 ஐடிசி ஆகக் கழிக்கப்பட்டு, மீதமுள்ள ரூ.2.52 பொருளின் விலையில் சேர்க்கப்பட்டு, அந்தப் பொருள் ரூ.102.52க்கு விற்கப்படும். இப்போது மாற்றியமைக்கப்பட்ட விகிதங்களில் 12 சதவீத வரியுள்ள மூலப்பொருட்களின் வரி அப்படியே தொடர்வதாகவும், 18 சதவீத மூலப்பொருளின் விலையும் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்துக்கொள்வோம். ஆகவே, மொத்த மூலப்பொருட்கள் ரூ.80இலும் 12 சதவீத வரி செலுத்தப்பட்டுள்ளது. 12 சதவீத வரி உள்ளடக்கிய ரூ.80இல் வரி ரூ.8.57. உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் வரி 5 சதவீதமாகிவிட்டதால் இப்போது ஐடிசி கிடையாது. எனவே, உற்பத்திப்பொருளின் விலை ரூ.100, ஜிஎஸ்டி ரூ.5 மொத்தம் ரூ.105 ஆக, விலை குறைவதற்கு பதிலாக உயரும். அரசைப் பொறுத்தவரை பழைய வரியாக ரூ.12 வசூலிக்கப்பட்டிருக்கும். (மூலப் பொருட்களில் ரூ.9.48, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் ஐடிசி போக வரி ரூ.2.52) ஆனால் இப்போது வரிக் குறைப்புக்குப்பின் புதிய வரியாக ரூ.13.57 வசூலிக்கப்பட்டிருக்கும். (மூலப் பொருட்களின் வரி ரூ.8.57, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் வரி ரூ.5, ஐடிசி கிடையாது.) எனவே, தனது வரி வருவாயில் ஏற்படப்போகும் இழப்பாக ஒன்றிய அரசு சொல்கிற தரவு முழுமையான உண்மை அல்ல. உண்மையில் வரிக் குறைப்பு என்ற பெயரில் வரி விகிதங்களை மட்டும் மாற்றியமைத்துவிட்டு, வரி வருவாய் குறையாமல் அரசு பார்த்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாளர்களும் நிறுவனங்களும் மக்களை ஏமாற்றுவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, மொத்த நாட்டையும் ‘மோடி’ மஸ்தான் வித்தையாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறது இந்த அரசு!