தேவை நம்பகத் தன்மை
வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்ய ஏற்கெனவே வெளியிடப்பட்ட 11 ஆவணங்களு டன் 12 ஆவது ஆவணமாக ஆதாரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆதாரை ஏற்பதற்கு தேவையான உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்றும் மீண்டும் உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது.
ஏனெனில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7.24 கோடி வாக்காளர்களில் 99.6 சதவீதம் பேர் ஆவணங்களைச் சமர்ப்பித்து விட்டனர். எனவே ஆதாரையும் சேர்க்க வேண்டும் என்ற மனு தாரரின் கோரிக்கை எந்த நடைமுறை பலனை யும் அளிக்காது என்று தேர்தல் ஆணையத்தின் முந்தைய பிடிவாதமான கருத்தையே கூறினார். அதனால் தான் உச்சநீதிமன்றம் மீண்டும் அழுத்த மாகக் கூறியுள்ளது. ஆணையம் என்ன செய்கி றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே நம்பகத் தன்மையை இழந்திருப்பது இப்போதைய தேர்தல் ஆணையமும் அதன் தலைமைத் தேர்தல் ஆணையரும்தான். இதுவரை 18 வயது இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாக்காளர் சேர்ப்பு இயக்கம் நடந்து வந்திருக்கிறது.
ஆனால் தற்போது தான் பீகார் மாநிலத் தேர்தலை ஒட்டி சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குகிற வேலையில் ஈடுபட்டு பிரச்சனைக் குள்ளாகி இருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் பணி வாக்குரிமையை உறுதி செய்து தேர்தலை நம்பகமான முறையில் நடத்துவதுதான். ஆனால் இன்றோ, அது ஆட்சி யாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்துத்துவா முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுகிறது.
தேர்தல் ஆணையம் வாக்குரிமைக்கு முக்கி யத்துவம் அளிப்பதற்குப் பதிலாக குடியுரிமை யைத் தீர்மானிக்கும் வேலையில் இறங்கியி ருக்கிறது. இது அரசியல் சட்டப்படியான பணியாக அல்லாமல் ஆர்எஸ்எஸ்-சின் கொள்கை அமல் பணியாக அமைந்து சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. குடியுரிமையைத் தீர்மா னிப்பது நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பணி. அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண் டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஏன்? யாரால்? தேர்தல் ஆணையம் சுயேச்சைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் இது அரசியல் சட்ட அமைப்பு.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறுவது போல, “நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய பிழையில்லாத வாக்காளர் பட்டியல் அவசியம். அது நாட்டின் தேர்தல்கள் மற்றும் நேர்மைக்கு அடித்தளமாக அமைகிறது. வாக்காளர் பட்டியல் சரியாக இல்லாவிட்டால் தேர்தல்களை நம்பகமானதாக கருத முடியாது”. எனவே நம்பகத் தன்மையுடன் நடக்க வேண்டும்.