articles

img

ஹைதராபாத் மண்ணில் மாதர் சங்க மாநாடு பெண் விடுதலைக்கான சமரசமற்ற சமர்!

ஹைதராபாத் மண்ணில் மாதர் சங்க  மாநாடு பெண் விடுதலைக்கான சமரசமற்ற சமர்! 

ஹைதராபாத் தெலுங்கானா மண்ணின் வீரம்  செறிந்த வரலாற்றில் மற்று மொரு அத்தியாயம் ஹைதரா பாத் நகரில் எழுதப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் அரியணையில் அமர்ந்து கொண்டு அரசிய லமைப்புச் சட்டத்தை நசுக்கத் துடிக்கின்ற ஆதிக்க சக்திகளுக்கு எதிரான ஒரு பெரும் யுத்தப் பிரகடனமாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) 14-வது தேசிய மாநாடு ஹைதராபாத் மாநகரில் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஜனவரி 25 அன்று தொடங்கி யது. இது வெறும் பிரதிநிதிகளின் சந்திப்பல்ல; இந்தியாவின் உயிர்ப்பைக் காக்கப் புறப்பட்ட பெண் சிங்கங்களின் அணிவகுப்பு. அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு பெண்ணின் கண்ணீரையும் போராட்ட நெருப்பாக மாற்றத் துடிக்கும் ஒரு வரலாற்றுச் சங்கமம்.

சிவப்புக் கடலாக மாறிய தெருக்களும் எழுச்சிமிகு பேரணியும்  துவக்க மாநாட்டைத் தொடர்ந்து, ஜனவரி 25 அன்று பகல் இரண்டு மணியளவில் மாநாட்டுத் திடலில் இருந்து தொடங்கிய பேரணி, ஒரு மாபெரும் எரிமலையின் குழம்பு போலச் சீறிப் பாய்ந்தது. ஹைதராபாத் நகரின் வீதிகள் இதற்கு முன் இத்தகையதொரு பெண்ணுரிமைப் போராளிகளின் பிரம்மாண்ட அணிவகுப்பைக்  கண்டிருக்குமா என்பது ஐயமே. 26 மாநிலங்கள், 850 பிரதிநிதிகள், பல்லாயிரக்கணக்கான பெண்கள்; பல்வேறு மொழிகள், வெவ்வேறான கலாச்சாரங்கள் - ஆனால் அனைவரது இதயத்திலும் துடித்தது ஒரே ஒரு வேட்கைதான்: ‘ பெண் விடுதலை’.  சமரசமற்ற போராளிகளான பல்லாயிரக் கணக்கான பெண்கள் கைகோர்த்து அணிவகுத்த அந்தப் பேரணி, ஹைதராபாத் நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. ஆர்டிசி (RTC) மைதானத்தை நோக்கி அந்த பேரணி நகர்ந்தபோது, வழிநெடுகிலும் இருந்த மக்கள் ஆச்சரியத்துடனும் நம்பிக்கையுடனும் அந்த எழுச்சியைப் பார்த்தனர்.

முழக்கங்கள் ஒவ்வொன்றும் வெறும் சொற்களல்ல; அவை சுரண்டலுக்கு எதிரான சாட்டையடிகள். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு கடும் கண்டனங்கள். இந்தப் பேரணி, தில்லி அரியணையில் அமர்ந்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு நேரடி எச்சரிக்கையாகவே அமைந்தது.  கொடியேற்றமும் தியாகிகளுக்கு வீரவணக்கமும்  சரோஜினி பாலானந்தன் நகரில் (RTC ஆடிட்டோரியம்) அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி அவர்கள் அமைப்பின் செங்கொடியை ஏற்றி வைத்தபோது, விண்ணதிர எழுந்த முழக்கங்கள் மாநாட்டின் நோக்கத்தை உலகிற்குப் பறைசாற்றின. அந்தக் கொடி காற்றில் படபடத்தபோது, அதில் பல தலைமுறைப் பெண்களின் தியாகமும் போராட்டமும் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிந்தது.  தொடர்ந்து, மூத்த தலைவர் பிருந்தா காரத் தலைமையில் தியாகிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் வீராங் கனை மல்லு ஸ்வராஜ்யம் போன்றவர்களின் நினைவுகள் அந்த அரங்கில் நிறைந்திருந்தன.

2023-க்குப் பிறகு மறைந்த தலைவர்கள், போராட்டத் தியாகிகள் மற்றும் வன்முறையால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. வரவேற்புக் குழுவின் தலைவர் சாந்தி சின்ஹா தனது உணர்ச்சிகரமான வரவேற்புரையில் இந்த மாநாட்டின் வரலாற்றுத் தேவையையும், தெலுங்கானா மண்ணின் போராட்டப் பின்னணியையும் விவரித்தார்.  ஜனநாயக சக்திகளின் சங்கமம் மாநாட்டின் துவக்க அமர்வுக்கு அகில இந்தியத் தலைவர் பி.கே. ஸ்ரீமதி தலைமை தாங்கினார். அவரது தலைமையுரை, இந்தியப் பெண்களின் இன்றைய அவல நிலையையும், அதற்கு எதிராக ஜனநாயக மாதர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களையும் மிக விரிவாகப் பட்டியலிட்டது. புகழ்பெற்ற திரைப்படக் கலைஞரும் எழுத்தாளருமான எம். ரோகிணி மாநாட்டை முறைப்படி தொடங்கி வைத்தார்.  இந்தத் துவக்க நிகழ்வு, ஜனநாயக சக்தி களின் ஒரு பெரும் சங்கமமாக அமைந்தது. ஜனநாயக மாதர் சங்கத்துடன் கைகோர்த்துப் பணியாற்றும் பல்வேறு சகோதரி அமைப்பு களின் தலைவர்கள் பங்கேற்று ஒருமைப் பாட்டைத் தெரிவித்தனர். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW), அகில இந்திய மகிளா சம்ஸ்கிருதிக் சங்காதன் (AIMSS), அகில இந்திய  அமைதி மற்றும் ஒற்றுமை அமைப்பு (AIPSO) ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் மேடையில் தோன்றி, இன்றைய பாசிசச் சூழலில் பெண்கள் அமைப்புகள் அனைத்தும் தங்களின் சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து, பொது எதிரியான மதவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினர். இது வெறும் ஒரு சங்கத்தின் மாநாடாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியப் பெண் வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.

 சாதனையாளர்களுக்கு பாராட்டு இதே மேடையில், போராட்டத்தின் அடை யாளங்களாகத் திகழும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக, தமிழ்நாடு, பீகார், புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த நான்கு பெண் போராளிகளும், தெலுங்கானாவின் முதல் பெண் தேசிய கூடைப்பந்து வீராங்கனை மிஹா அவர்களும் கௌரவிக்கப்பட்டபோது அரங்கம் கரவொலி யால் நிறைந்தது.  ரோகிணியின் தீப்பொறி உரை திரைக்கலைஞர் ரோகிணி தமது துவக்கவுரையை ஆற்றிய போது, அரங்கில் இருந்த ஒவ்வொரு பெண்ணும் தங்களின் சொந்தக் குரலைக் கேட்பது போன்ற உணர்வைப் பெற்றனர். “இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சிறு உரிமையும், நமக்கு முன்னால் வாழ்ந்த பெண்கள் வீதியில் நின்று நடத்திய ரத்தச் சரித்திரம் மிக்கப் போராட்டங்களின் பலன். அநீதி இழைக்கப்படும் இடங்களில் மௌனமாக இருப்பது என்பது அநீதி இழைப்பவருக்குத் துணை போவதற்குச் சமம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக முன்னே நடந்தவர்களின் போராட்டப் பாதையில்தான் இந்த மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போராட்டம் இன்னும் வீரியமாகத் தொடர வேண்டும்” என்று அவர் ஆற்றிய உரை, ஒவ்வொரு பிரதிநிதியையும் ஒரு புதிய உத்வேகத்துடன் போராட்டக் களத்திற்குத் தயார்ப்படுத்தியது.  அரசியலமைப்பைக் காக்கும் போர்  மாநாட்டின் மைய உரையாக அமைந்த பிருந்தா காரத் அவர்களின் உரை, தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களின் முகமூடியைக் கிழித்தெறிவதாக இருந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை அவர் மிக ஆவேசமாக விவரித்தார். “மத்தியில் ஆளும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. அவர்கள் மனுஸ்மிருதியைத் தான் இந்தியாவின் சட்டமாக மாற்றத் துடிக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் நமக்கு  வழங்கிய சமத்துவ உரிமையின் மீது இன்று அதிகார வர்க்கம் புல்டோசரை ஓட்டுகிறது. இது வெறும் காகிதத்தின் மீதான தாக்குதல் அல்ல; நாட்டின் சரிபாதி மக்களான பெண்களின் கௌரவத்தின் மீதான தாக்குதல். மதத்தின் பெயரால் பெண்களைப் பிரித்து, வெறுப்பு அரசி யலை அறுவடை செய்ய நினைக்கும் சக்திகளை, அதே பெண்கள் தான் வீழ்த்துவார்கள்” என்று அவர் எச்சரித்தார். மேலும், “சமூகத்தில் மதவெறி பரப்பப்படு வதன் முதல் பலி பெண்கள்தான்.

அக்லக் போன்றவர்களின் கொலைகளால் சிந்தப்படும் கண்ணீர், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த பெண்ணின் கண்ணீர் மட்டுமல்ல, அது இந்த நாட்டில் நீதியைத் தேடும் ஒவ்வொரு பெண்ணின் கண்ணீர்” என்று அவர் குறிப்பிட்ட போது அரங்கமே உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தது. பொதுக்கூட்ட மேடையில் சங்கமித்த ஆளுமைகள் பின்னர் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியைத் தொடர்ந்து மாலை 5 மணிக்குத் தொடங்கிய மாபெரும் பொதுக்கூட்டம் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே, துணைத் தலைவர் சுபாஷினி அலி, அகில இந்தியப் பொருளாளர் எஸ்.

புண்ணியவதி, தெலுங்கானா மாநிலத் தலைவர் அருண ஜோதி  உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தலைவர்கள் பேசுகையில், பொருளாதாரச் சுரண்டலை மிக ஆழமாக மையப்படுத்தினர். நுண்நிதி (Micro-finance) நிறுவனங்கள் என்ற பெயரில் பெண்களைக் கடன் வலையில் சிக்க வைத்து, அவர்களின் உயிரைக் குடிக்கும்  கார்ப்பரேட் கொள்ளையை மரியம் தாவ்லே அம்பலப்படுத்தினார். வறுமையின் காரணமாகப் பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை மோடி ஆட்சியில் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி  பேசுகையில், “பாஜக ஆளும் மாநிலங் களில் பெண்கள் வறுமையிலும் பாதுகாப்பி ன்மையிலும் தவிக்கும் போது, இடதுசாரிகள் ஆளும் கேரளா அரசு தீவிர வறுமையை ஒழித்து, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநில மாகத் திகழ்கிறது. இதுதான் பெண்களுக்கான உண்மையான ஆட்சி. கேரளா காட்டும் வழியே இந்தியாவிற்கான ஒளி” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம் சுபாஷினி அலி பேசுகையில், இந்தியப் பெண்களின் போராட்டத்தை உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைத்துப் பேசினார். “பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் கொல்லப்படும் ஒவ்வொரு குழந்தையும், பெண்ணும் நமது உறவுகள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் மோடி அரசு, இந்தியப் பெண்களின் நலன்களைக் காக்கப் போவதில்லை. அதானிக்கும் அம்பானிக்கும் நாட்டையே விற்கும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பெண்களின் கடமை” என்று அவர் விடுத்த அழைப்பு, மாநாட்டின் சர்வதேசப் பார்வையை உறுதிப்படுத்தியது. புதியதோர் உலகம் நோக்கியப்பயணம் ஜனவரி 25 அன்று துவங்கி 28 வரை நடை பெறும்  இந்த மாநாடு வெறும் உரைகளுடன் முடிந்துவிடப் போவதில்லை.

26 மாநிலங்களில் இருந்து திரண்டிருந்த 850-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பும்போது வெறும் செய்திகளுடன் செல்லவில்லை; தங்களின் நெஞ்சங்களில் போராட்ட நெருப்பை ஏந்திச் செல்கிறார்கள். ஒடுக்குமுறை, சாதிய வன்கொடுமை, மதவாத வெறுப்பு, பொருளாதாரச் சுரண்டல் எனப் பலமுனைகளில் இருந்து தாக்கப்படும் இந்தியப் பெண்ணினத்திற்கு, ஹைதராபாத் மாநாடு ஒரு கலங்கரை விளக்கமாகக் கூடியுள்ளது. “எங்களை ஒடுக்க நினைப்ப வர்களுக்கு நாங்கள் சொல்வது ஒன்றுதான்: நாங்கள் அடங்கமாட்டோம், நாங்கள் பின்வாங்க மாட்டோம்; சமத்துவமான, ஜனநாயகமான, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கும் வரை எங்களது இந்தப் பயணம் ஓயாது!” என்ற முழக்கத்துடன் மாநாட்டு பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.