தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சப் போக்கு: சமமான போட்டித்தளம் எங்கே?
தற்போது ஐந்து மாநிலங்கள் தங்களுடைய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்க ளைச் சந்திக்கவிருக்கும் நிலையில், ஒரு விரி வான கண்ணோட்டத்தில் நிலைமைகளை அலசி ஆராய்வது அவசியமாகிறது. நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் இது பொருத்தமான தாகும். நமது வாசகர்களுக்குச் சில விஷயங்களை நினைவூட்டுவது அவசியமாகிறது. ஏனெனில், இந்துத்துவத்தால் தூண்டப்பட்ட கவர்ச்சிகரமான கோஷங்களுக்கு மத்தியில், நாம் கிட்டத்தட்ட ‘இந்து ராஷ்டிரத்தை’ அடைந்துவிட்டோம் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், 1950 ஜனவரி 26 அன்று நமது ஜன நாயகம் தொடங்கப்பட்டபோது இருந்ததைப் போலவே, இன்றும் தேர்தல் ஜனநாயகம் என்பது ஜன நாயக மதச்சார்பற்ற அமைப்பின் ஒரு முக்கியத் தூணாகத் திகழ்கிறது என்பதே உண்மையாகும்.
அரசமைப்புச் சட்டக் கட்டமைப்பும் தேர்தல்
ஆணையமும் தேர்தல்கள் குறித்த விவாதம், அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட கட்ட மைப்பின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். அக்காலத்திய பல ஐரோப்பிய நாடுக ளைப் போலன்றி, இந்தியா ஆரம்பத்திலிருந்தே வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை ஏற்றுக்கொண்டது. நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி அல்லது சட்டமன்றங்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு வயது வந்த இந்தி யரும் வாக்களித்துத் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதே அடிப்படை. இந்த அமைப்பில், தேர்தல் செயல்முறையை வழிநடத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை ஒரு அத்தி யாவசிய முன்நிபந்தனையாகும். இந்தச் சூழலில் தான், ‘அனைவருக்கும் சமமான வாய்ப்பு’ (Level Playing Field) என்பது அரசமைப்புச் சட்டத்தி லேயே வலியுறுத்தப்பட்டது.
சுகுமார் சென் தலைமையிலான முதல் தேர்தல் ஆணையம், இரண்டு முக்கியமான நடவடிக்கைகள் மூலம் இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்தியது. முதலாவதாக, வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பொறுப்பு தனிப்பட்ட வாக்காளரைச் சாராமல், தேர்தல் ஆணையத்தையே சார்ந்தது. இரண்டாவ தாக, ஒருவரின் குடியுரிமை என்பது தேர்தல் ஆணை யத்தைப் பொறுத்தவரை சரிபார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை. ஒரு வாக்காளரின் குடியு ரிமை குறித்துப் புகார் எழுந்தால் மட்டுமே, உள்துறை அமைச்சகத்தால் அது சரிபார்க்கப்பட வேண்டி யிருந்தது.
தன்னிச்சையான அதிகார மாற்றமும் குடியுரிமைச் சிக்கலும்
தற்போது இதில் தேர்தல் ஆணையம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 324, 326 மற்றும் 327 ஆகிய பிரிவுகளின்படி, விரிவான அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளபோதிலும், குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக் கப்படவில்லை. ஆனால், தற்போதைய மாற்றம் குடியுரிமையைத் தீர்மானிக்கும் பணியைத் தேர்தல் ஆணையம் தனக்கே எடுத்துக்கொண்டுள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆணையத்திற்கு இத்தகைய உரிமை இல்லை என்பதோடு, இந்த விவகாரம் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது.
2025 ஜூன் 24 அன்று பீகாருக்காக அறிவிக்கப் பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை (SIR), பட்டியலில் இடம்பெறுவதற்கான சுமையை/பொறுப்பை வாக்காளர்கள் மீதே திணித்தது. கடந்த காலங்களைப் போலன்றி, வாக்காளர்கள் தாங்களாகவே படிவங்களை நிரப்ப வேண்டியி ருந்தது. தகுதியை உறுதி செய்ய, அவர்கள் 2003-ஆம் ஆண்டில் வாக்காளராக இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களது பெற்றோரில் ஒருவர் அதே பட்டியலில் இருந்திருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டது. இது ஓர் அரசமைப்புச் சட்ட உரிமையை உறுதி செய்வ தில் கடுமையான சவாலை ஏற்படுத்தியது.
பெருமளவிலான வாக்குரிமைப் பறிப்பு
இச்செயல்முறை பீகாரில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்படுவதை உறுதி செய்தது. இது விசித்திரமான ஒரு பெருமளவிலான நீக்கல் நடவடிக்கையாக மாறியது. புதிய சேர்க்கைகள் மிகக் குறைவாக இருந்ததால், ஒட்டுமொத்த வாக்காளர் எண் ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாகக் குறைந்தது. தற்போது 12 மாநிலங்க ளுக்கான இச்செயல்முறையுடன், இந்தியக் குடிமக்க ளின் வாக்குரிமைக்கு எதிரான ஒரு பெரிய பேரழிவை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். 12 மாநி லங்களில் முதல் வரைவுப் பட்டியலில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.56 கோடி யாகும். இது மொத்த எண்ணிக்கையில் சராசரியாக 13 சதவீதமாகும்.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி யும், தமிழ்நாட்டில் 90 லட்சம் பேரும் நீக்கப் பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவ ரங்கள் மக்கள்தொகைத் தரவுகளுடன் பொருந்த வில்லை. உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பொறுப்பான ஒரு சட்டப்பூர்வ அமைப்பான மாநிலத் தேர்தல் ஆணை யம் ஆறு மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்ட கணக்கீட்டின்படி, கிராமப்புறங்களில் மட்டும் சுமார் 3 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கையில் வேறு பாடு உள்ளது. இது, இத்திருத்தம் அமல்படுத்தப் படாத அசாம் மாநிலத்துடன் ஒப்பிடும்போது நம்ப முடியாததாகத் தோன்றுகிறது. அசாமில் கிட்டத்தட்ட நீக்கங்களே இல்லை. எனவே, அனை வருக்கும் வாக்குரிமை என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த நடவடிக்கையின் பின்னணி யில் உள்ள காரணத்தை, அதிர்ச்சியூட்டும் வகையி லான பெருமளவிலான வாக்காளர்களின் வாக்குரி மைப் பறிக்கப்பட்டதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
கட்டமைப்புக் குறைபாடும் தேர்தல் ஆணையத்தின் போக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமா கப் புதியவர்களைச் சேர்ப்பது மற்றும் இறந்த வர்களை நீக்குவது போன்ற ஒரு வழக்கமான செயலாகும். ஜனநாயக நாடுகளில் வாக்காளர் எண்ணிக்கை எப்போதுமே படிப்படியாக அதி கரிக்கும் என்றே கருதப்படுகிறது. ஆனால் இத்தகைய பெரும் சரிவை மரணங்களாலோ அல்லது வெளி நாட்டிற்கான குடியேற்றத்தாலோ விளக்க முடியாது; நியாயப்படுத்தவும் முடியாது. உள்நாட்டு இடப் பெயர்வால்கூட இத்தகைய எண்ணிக்கையை அங்கீ கரிக்க முடியாது. ஏனெனில் அது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவதையே (Relocation) குறிக்கும், வாக்குரிமை இழப்பை அல்ல.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மிகவும் வெளிப் படைத்தன்மையற்றதாக இருந்துள்ளது. அது அரசியல் கட்சிகள், வல்லுநர்கள் மற்றும் சுயேச்சை யான ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், அவர்கள் எழுப்பிய கேள்விகளையும் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது. எனவே, தவிர்க்க முடியாத ஒரே விளக்கம் இதுதான் - இச் செயல்முறையில் ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு ரீதியான குறைபாடு (Design Defect) உள்ளது, அதுவே இந்தப் பேரழிவுக்கு வழிவகுத்துள்ளது. ‘சம மான போட்டித்தளம்’ என்பது அரசியல் கட்சிக ளுக்கானது மட்டுமல்ல, அது முதன்மையாகத் தனிப் பட்ட வாக்காளரின் அரசமைப்புச் சட்ட உரிமை யாகும்.
அரசியல் சதியும் மக்கள் முன்னுள்ள சவாலும்
சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய ஊடுரு வல்காரர்கள் ‘கண்டறியப்பட்டு, நீக்கப்பட்டு, நாடுகடத்தப்பட வேண்டும்’ என்று உள்துறை அமைச்சர் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். எனினும், வெளியிடப்பட்ட எந்தவொரு பட்டியலும் அத்தகைய கண்டறிதல்கள் குறித்த குறிப்பிடத்தக்க தரவுகளைக் கொண்டிருக்கவில்லை. பா.ஜ.க மட்டுமே இச்செயல்முறையை ஆர்வத்துடன் ஆத ரிப்பதால், அவர்களே இதன் மூலம் பயனடையப் போகிறார்கள் என்று கருதுவது நியாயமானது. ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க இயந்திரம் வாக்குச்சாவடி வாரியாக புதிய பெயர்களைச் சேர்க்கத் தயாராகி வருவதையும், இதற்காக வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள் (BLO) மீது கடுமையான அழுத்தம் கொடுக் கப்படுவதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
மாற்றங்களைப் பதிவேற்றுவதற்காகச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுவது வெளிப்படையாக அறிவிக்கப் படவில்லை. இருப்பினும், தரவுகள் அனைத்தும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டிருப்பதைக் காட்டு கின்றன. இவை அனைத்தும் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கான சாத்தியத்தை அதிகரிக்கின் றன. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு அதிக முக்கி யத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தல்களில், ஒரு சமமான போட்டித்தளத்தையும் சுதந்திரமான தேர்தலை யும் உறுதி செய்வதற்கான சவாலானது மிகப்பெரி யதாக இருக்கும். இந்த ஜனநாயக விரோதச் சவாலை எதிர்கொள்ள நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.