வெனிசுலாவை ஏலம் விடும் துரோகம்: ஓர் அமெரிக்க கைக்கூலியின் பேரம்
ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது அதன் எல்லைக்கோடுகளில் மட்டுமல்ல, அதன் இயற்கை வளங்களின் மீதான உரிமை யிலும் இருக்கிறது. ஆனால், வெனிசுலாவில் ஆட்சி யைப் பிடிக்கத் துடிக்கும் தீவிர வலதுசாரித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado), அந்த இறையாண்மையையே அமெரிக்க டாலர்களுக்கு விலை பேசி முடித்துவிட்டார். வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவராகக் காட்டிக் கொள்ளும் மச்சாடோ, அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவன முதலாளிகளிடம் ஒரு பகிரங்கமான வாக்குறு தியை அளித்துள்ளார்: “என்னை ஆட்சியில் அமர்த்தி னால், அதற்கு ஈடாக வெனிசுலாவின் 1.7 டிரில்லியன் டாலர் (சுமார் 1.4 லட்சம் கோடி டாலர்) மதிப்புள்ள சொத்துக்களை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.” இது ஏதோ தேர்தல் மேடையில் உதிர்க்கப்பட்ட வெற்று வார்த்தை அல்ல; இது ஒரு தேசத் துரோக ஒப்பந்தம். அமெரிக்காவின் நீண்டகாலக் கைக்கூலி மரியா கொரினா மச்சாடோ ஒன்றும் அரசிய லுக்குப் புதியவர் அல்ல.
2003-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க அரசால் நிதியுதவி அளிக்கப்பட்டு, வெனி சுலாவின் இடதுசாரி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருபவர். மறைந்த ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் காலத்திலிருந்தே ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். ஆச்சரியம் என்னவென்றால், தன் சொந்த நாட்டின் மீது அமெ ரிக்கா ராணுவப் படையெடுப்பு நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்த இவருக்குத் தான், 2025-ஆம் ஆண்டிற்கான ‘அமைதிக்கான நோபல் பரிசு’ வழங்கப்பட்டுள்ளது. அமைதிப் பரிசு பெற்ற ஒருவர், போரை யாசிக்கிறார் என்பதுதான் முதலாளித்துவ உலகின் முரண்நகை. தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொ னால்டு டிரம்ப்பும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தீவிர வலதுசாரியுமான மார்கோ ரூபியோவும் (Marco Rubio) மச்சாடோவை வெனிசுலாவின் ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்தக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர். மியாமி மாநாடும், அதிர்ச்சியூட்டும் வாக்குறுதியும் கடந்த 2024 நவம்பர் 5-ஆம் தேதி, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் ‘அமெரிக்க வர்த்தக மன்ற’ (America Business Forum) மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்கா வின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தலை வர்கள் குழுமியிருந்தனர்.
இந்த மேடையில்தான் மச்சாடோ காணொலி வாயிலாகத் தோன்றி அந்த அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டார். டிரம்ப் மேடையேறுவதற்குச் சற்று முன்பு பேசிய மச்சாடோ, அமெரிக்கத் தொழிலதிபர்களைப் பார்த்து, “வெனிசுலாவை அந்நிய முதலீட்டிற்கு முழு மையாகத் திறந்துவிடுவோம். இது சாதாரண வாய்ப் பல்ல; 1.7 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள வாய்ப்பு!” என்று கூச்சமில்லாமல் கூறினார். அவர் முன்வைத்த திட்டம் ‘மாபெரும் தனியார் மயமாக்கல்’ (Massive Privatization Program). வெனி சுலாவின் உயிர்நாடியான எண்ணெய் மற்றும் எரிவா யுத் துறைகளை மட்டுமல்லாது, கனிம வளம், தங்கம், மின்சாரம், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறை என அனைத்தையும் அமெரிக்க நிறுவனங்க ளுக்குத் தாரைவார்க்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். “சவூதியை மறந்துவிடுங்கள்” 2025 பிப்ரவரி மாதம், டொனால்டு டிரம்ப்பின் மகன் (Donald Trump Jr.) உடனான ஒரு நேர்காணலில் மச்சாடோ பேசிய வார்த்தைகள் இன்னும் அப்பட்டமா னவை. “சவூதி அரேபியாவை மறந்துவிடுங்கள்.
அவர்களிடம் இருப்பதை விட அதிகமான எண்ணெய் வளம் எங்களிடம் உள்ளது. அது முடிவற்ற சாத்தி யக்கூறுகளைக் கொண்டது. நாங்கள் எண்ணெய் துறையிலிருந்து அரசைத் தூக்கி எறிந்துவிட்டு (kick out the government), ஒட்டுமொத்தத் துறையையும் தனியார்மயமாக்குவோம். அமெரிக்க நிறுவனங்கள் இதன் மூலம் கொழுத்த லாபம் சம்பாதிக்க முடியும்” என்று அவர் உறுதியளித்தார். உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடு வெனிசுலா. அந்த வளத்தை வைத்து தான் அங்குள்ள ஏழை மக்களுக்கு வீட்டுவசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வரு கின்றன. ஆனால் மச்சாடோ, “எண்ணெய் வளத்தை எடுப்பது (Upstream), சுத்திகரிப்பது (Midstream), விநியோகிப்பது (Downstream) என அத்தனையையும் தனியாருக்குத் திறந்துவிடுவேன்” என்கிறார். இது அந்நாட் டின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் செயலாகும். மின்சாரமும் கடற்கரையும் விற்பனைக் காம்! மச்சாடோவின் விற்பனைப் பட்டியலில் இல்லாதது எதுவுமே இல்லை. வெனிசுலாவின் மின்சாரக் கட்ட மைப்பைச் சுட்டிக்காட்டி, “எங்களிடம் 17 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கட்டமைப்பு உள்ளது. இதைச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில் நுட்பத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள லாம்” என்று அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்க ளுக்கு ஆசை காட்டுகிறார். அதேபோல, வெனிசுலாவின் இயற்கை எழில் கொஞ்சும் 2,800 கிலோமீட்டர் நீளமுள்ள கரீபியன் கடற்கரையையும் சுட்டிக்காட்டி, “இது சுற்றுலாத் துறைக்காகக் காத்திருக்கிறது, வந்து எடுத்துக்கொள் ளுங்கள்” என்று அழைப்பு விடுக்கிறார். மக்களின் பொதுச் சொத்துக்களை, ரியல் எஸ்டேட் வியாபாரி போலக் கூறுபோட்டு விற்கத் துடிக்கிறார். அமெரிக்க எஜமானர்கள் மச்சாடோ யாருக்காக வேலை செய்கிறார் என்பது மியாமி கூட்டத்தில் அவர் நன்றி தெரிவித்த விதத்திலி ருந்தே தெரிந்தது. வெனிசுலாவில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை வீழ்த்தத் துடிக்கும் மார்கோ ரூபியோவை, “அமெரிக்கக் கண்டத்தின் சுதந்திரத்துக்கான சாம்பியன்” என்று புகழ்ந்தார். மேலும், புளோரிடா ஆளுநர் டிசாண்டிஸ் (DeSantis), ரிக் ஸ்காட் (Rick Scott) மற்றும் கியூபா-வெனிசுலா எதிர்ப்புப் போக்கை முன்னெ டுக்கும் ‘மூன்று நண்பர்கள்’ (Three Amigos - மரியா எல்விரா சலாசர், மரியோ டியாஸ், கார்லோஸ் கிமேனஸ்) ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார். மியாமி மேயர் பிரான்சிஸ் சுவாரஸ், மச்சாடோ விடம் பேசும்போது,
“விரைவில் நான் என் மனைவி யுடன் வெனிசுலா வந்து, ஜனாதிபதி மாளிகையில் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இதன் மூலம், வெனிசுலாவில் ஒரு ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்படுத்தி, தங்கள் பொம்மை அரசை நிறுவ அமெரிக்கா எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பது தெளிவாகிறது. புவிசார் அரசியல் விளைவுகள் மச்சாடோ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ப தையும் அவர் மறைக்கவில்லை. வெனிசுலா இதுவரை கடைப்பிடித்து வரும் அணிசேராக் கொள்கையைக் கைவிட்டு, சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுக ளுடனான உறவை முறித்துக்கொள்வதாக அவர் கூறி யுள்ளார். அதுமட்டுமல்லாமல், லத்தீன் அமெரிக்கா வில் எஞ்சியிருக்கும் இடதுசாரி அரசுகளான நிகரகுவா மற்றும் கியூபாவையும் கவிழ்க்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் கூப்பாடு போடுகிறார். சுருக்கமாகச் சொன்னால், மச்சாடோ முன் வைப்பது ஒரு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு முழுமையான பொருளாதாரச் சரணாகதி. 1.7 டிரில்லி யன் டாலர் என்பது ஒரு பெரிய தொகைதான். ஆனால், ஒரு நாட்டின் சுயமரியாதையையும், மக்களின் எதிர் காலத்தையும் விட அது பெரிதல்ல. வெனிசுலாவை மீண்டும் அமெரிக்காவின் கொல்லைப்புறமாக மாற்றத் துடிக்கும் இந்த முயற்சி, லத்தீன் அமெரிக்கா முழுமைக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகும். ஏகாதி பத்தியம் தன் கோரப் பற்களை மறைக்காமல், வெனிசுலா வை விழுங்கத் தயாராக நிற்கிறது என்பதற்கு மச்சா டோவின் இந்தப் பேச்சு
ஒரு நேரடி சாட்சியம். முற்றுகையும் சவாலும் இந்த பின்னணியில் பூமிப்பந்தின் மேற்கு அரைக் கோளத்தில் மீண்டும் ஒரு பனிப்போர் காலச் சூழலை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. லத்தீன் அமெ ரிக்க வரலாற்றில் இல்லாத வகையில் வெனிசுலா இன்று மிகக் கடுமையான ராணுவ முற்றுகையை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வெனிசுலாவின் கடற்பரப்பைச் சூழ்ந்துள்ள நிலை யில், வாஷிங்டனின் கட்டளைக்கு அடிபணியும் வலது சாரி நாடுகளைக் கொண்டு ஒரு ‘வெனிசுலா எதிர்ப்பு அச்சு’ மிகத்தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டு வருகிறது. வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளத் தையும், நவீனத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான அரிய கனிமங்களையும் கைப்பற்றும் நோக்கில், அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் தடைக ளைத் தாண்டி இப்போது நேரடி ராணுவத் தாக்கு தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. குறிப்பாக, அந்நாட்டின் முக்கியக் கட்ட மைப்புகளைச் சிதைக்கும் இஸ்ரேல் பாணியிலான வான்வழித் தாக்குதல் அபாயம் நிலவுகிறது. இருப்பி னும், ஹியூகோ சாவேஸ் விதைத்த புரட்சிகர உணர்வும், சர்வதேச அளவில் சீனாவின் வலுவான பொருளாதாரப் பின்னணியும் அமெரிக்காவின் இந்த மேலாதிக்கக் கனவுக்குப் பெரும் சவாலாக உள்ளன. மன்த்லி ரிவியூ இணைய இதழில் வெளியான நீள் கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் : எஸ்பிஆர்
