articles

img

நான் செத்துக்கொண்டே இருக்கட்டுமா என் அருமைத் தாய்நாடே? - க.கனகராஜ்

நான் செத்துக்கொண்டே இருக்கட்டுமா என் அருமைத் தாய்நாடே?  -  க.கனகராஜ் 

எனக்கு இப்போது பெயர் கிடையாது. “உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவள்” என்பதுதான் என் அடையாளமாகிப் போனது. எனக்கும் கூட என் பெயர் மறந்தே போனது. என்னை வேட்டையாடிக்கொண்டிருக்கும் செங்கார் என்கிற மிருகம் எந்த நேரமும் என்னைக் குதறிப் போட்டுவிடலாம் என்பதால், அவனது அசிங்கமான, வக்கிரமான, கொடூர முகமே என் கனவிலும் நனவிலும் மலம் போல் நிறைந்து அருவருப்பைத் தருகிறது.  செங்கார் என்ற மிருகம்  அது 2017-ஆம் ஆண்டு. ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில மாதங்களே ஆகியிருந்தன. குல்தீப் சிங் செங்கார் என்கிற அந்த மிருகம், பங்கர்மாவ் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியிருந்தது. அந்த மிருகம் அதற்கு முன்பு சமாஜ்வாதி கட்சி சார்பில் இரு முறையும், பி.எஸ்.பி கட்சியின் சார்பில் ஒரு முறையும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது. அதன் ஆரம்பகாலம் இளைஞர் காங்கிரஸில் தொடங்கியது.  அந்த மிருகமும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள். அவனுடைய அரண்மனை போன்ற வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் எனது ஒழுகும் ஓலைக் குடிசையும் இருக்கிறது. அந்த மிருகம் 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் என்னைப் பாலியல் ரீதியாகக் குதறித் தீர்த்தது. அவனது தம்பிக்கும் என்னைக் குதற ஊக்கம் கொடுத்தது. அந்த மிருகம், அவன் சகோதரன், கூட்டாளிகள் எனப் பலர் என்னைக் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார்கள். என் வயது அப்போது 17 தான். சாலை உருளை (Road Engine) ஒன்று பூவின் மீது ஏறி இறங்கியது போல், என் சுயத்தையே சிதைத்து மண்ணோடு தேய்த்துவிட்டார்கள்.  உயிர் பறிக்கப்பட்ட அப்பா  என் அப்பா நியாயம் கேட்கப் போனார். ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்பார்கள். ஆனால், ஏழைகள் பேசுவது கூட அவர்களுக்குப் பொறுக்கவில்லை. செங்காரின் சகோதரனும் அவனது ஏவலாட்களும் அப்பாவைக் கட்டி வைத்து உதைத்தார்கள். அவர்களின் காலில் கிடந்த செருப்புகளோடு கண்ணிலும் வாயிலும் மிதித்தார்கள். ஊர் எதிர்த்துக் கேட்கவில்லை; மவுனம் காத்தது என்று சொல்ல மாட்டேன், பயந்து அடங்கிக் கிடந்தது.  அப்பாவுக்கு வழி தெரியவில்லை; அப்பாவி மனிதர் தானே! போலீசுக்குப் போனார். யோகியின் போலீஸ் அல்லவா? “ராம் ராஜ்யத்தில் வழக்கு பதிவு செய்ய முடியாது” என்று மறுத்துவிட்டது. வேறு என்ன செய்ய முடியும்? ஒரு பக்கம் உடம்பில் காயம், இன்னொரு பக்கம் அசுரனை விடவும் அசுரனாக அட்டூழியம் செய்துகொண்டிருக்கும் செங்கார். அவனுக்குத் தொண்டு செய்வதற்கு அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் யோகியின் போலீஸ். வீட்டில் முடங்கிக் கிடந்தார். சிதைந்து போன நானும், நிலைகுலைந்து போன என் குடும்பமும் கூடவே இருந்தது.  இரண்டு நாட்கள் கழித்துப் போலீஸ் வந்தது; அப்பாவை அழைத்துச் சென்றது. துப்பாக்கி வைத்திருந்ததாக அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தது. சில நாட்கள் கழித்து, வயிற்று வலியால் அப்பா அவதிப்படுவதாகக் காவல்துறை அவரை மருத்துவமனையில் சேர்த்தது. அவர் உடம்பில் காயம் இல்லாத இடமே இல்லை. அப்பா செத்துப்போனார். அப்போதும் ஊர் ‘ மவுனமாகத்தான்’ இருந்தது.  சித்தப்பாவுக்கு சிறை  நான் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், ராம் ராஜ்யத்தின் பாதுகாவலர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் அனுப்பி வைத்தேன். ஒன்றும் நடக்காத நிலையில், குடும்பத்தோடு முதலமைச்சர் வீட்டின் முன்னால் தீக்குளிக்க முயன்றேன். செங்காரால் கொல்லப்படுவதை விட, தீக்குளித்துச் செத்துப்போவது மேல் எனத் தோன்றியது. இதற்கிடையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, என் சித்தப்பாவைச் சிறையில் அடைத்தார்கள்.  இதற்குப் பிறகுதான் யோகிக்கு ‘ஞானம்’ வந்து சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டார். அப்போதும் செங்கார் பா.ஜ.க-விலேயே இருந்தான்; எம்.எல்.ஏ-வாகவும் இருந்தான். அவனுக்கு ஆதரவாக ஒரு கூட்டம், அப்பாவி மீது வழக்கு பதிவு செய்ததாகச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தது. அவர்கள் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். ஆசிபா விஷயத்திலும் அப்படித்தானே நடந்தது?  கண் முன்னால் கொல்லப்பட்ட அத்தைகள்  இதற்கிடையில் சி.பி.ஐ விசாரணைக்காக வழக்கறிஞரோடும் அத்தைகள் இருவரோடும் சென்று வந்துகொண்டிருந்தேன். எனக்குப் பாதுகாப்பு வழங்கக் காவல்துறை நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் எனக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதிலாக, எனக்கு எதிராக உளவு பார்க்கிறார்கள் என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. நான் உச்சநீதிமன்றத்திற்கு இது குறித்துக் கடிதம் எழுதியிருந்தேன். சிறையில் இருந்த என் சித்தப்பாவைச் செங்கார் மிரட்டிக்கொண்டே இருந்தான். “வழக்கைக் கைவிடுங்கள், இல்லையெனில் உயிருடன் இருக்க மாட்டீர்கள்” என்றான்.  நான் வழக்கின் விசாரணைக்குச் சென்று கொண்டிருந்தபோது, எண் பலகை (Number Plate) மறைக்கப்பட்ட கனரக வாகனம் ஒன்று தவறான திசையில் வந்து நேரடியாக மோதியது. அத்தைகள் இருவரும் அங்கேயே செத்துப்போனார்கள். வழக்கறிஞரும் நானும் காயங்களோடு தப்பினோம். இனியும் அந்த மாநிலத்தில் இருக்க முடியாது என தில்லிக்கு வந்துவிட்டேன். சங்கப் பரிவாரின் ராம் ராஜ்யம் அவ்வளவு “பாதுகாப்பானது”! குற்றவாளி சுற்றித் திரிந்தான்; பாதிக்கப்பட்ட நான், என் குடும்பத்தோடு ஓடி ஒளிந்து உயிர் பிழைக்கத் திரிந்தேன்.  கண்ணை மூடிய நீதிமன்றம்  சி.பி.ஐ நீதிமன்றம் செங்கார் மிருகத்திற்கு ஆயுள் தண்டனை விதித்தது. 25 லட்சம் அபராதம் விதித்தது. ஆயுள் தண்டனை என்பது அவன் உயிரோடு இருக்கும் வரை என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த மிருகத்தின் குணம் எள்ளளவும் மாறவில்லை. எந்த நிமிடமும் அவனால் நானும் என் குடும்பத்தினரும் கொல்லப்படலாம். ஆனால், மாண்புமிகு தில்லி உயர் நீதிமன்றம் அவனது ஆயுள் தண்டனையை  நிறுத்தி வைத்து அவனை விடுவித்துவிட்டது. இதோ, 26.12.2025 அன்று அவன் வெளியே வந்துவிட்டதாகச் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  இந்த நாட்டில் என்னைப்போன்றோர் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோனவர்கள், வெளியே சொல்லாமல் விழுங்கிப் புழுங்கிக் கொண்டிருப்பவர்கள், ஊரை விட்டு வெளியேறி அடையாளம் மறைத்து வாழ்பவர்கள் என ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், நான் போராடுகிறேன். அவனுடைய ஆணவம் அதிகரிக்க அதிகரிக்க, என் துணிவும் உறுதியும் போராட்ட வேட்கையும் தீவிரப்பட்டுக்கொண்டிருக்கிறது.  அவர்கள் பில்கிஸ் பானு வழக்கிலும் அப்படித்தான் செய்தார்கள். ‘ஒழுக்கம்’ கற்றுக்கொடுக்கும் அமைப்பு அல்லவா ஆர்.எஸ்.எஸ்? இளம் குழந்தை உள்ளிட்ட 14 பேரைக் கொலை செய்த அயோக்கியர்களை நன்னடத்தை காரணமாக விடுவித்தோம் என்று சொல்லி, வாசலில் வைத்து மாலை அணிவித்து வரவேற்றார்கள். “மாட்டுக்கறி வைத்திருந்தார்” என்று பொய் சொல்லி அப்பாவி அக்லாக் என்பவரை அடித்துக் கொன்றவர்கள் மீதான வழக்கைக் கைவிடுவதாகச் சமீபத்தில்தான் யோகியின் ஆட்சி முடிவு செய்தது. இதை யாரும் மறந்திருக்க முடியாது.  என்ன செய்யலாம் சொல்லுங்கள்!  இந்தியர்களே! என் அருமைச் சகோதரர்களே, சகோதரிகளே! பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவள் நான். கும்பல் பாலியல் வன்கொடுமையைச் சந்தித்தவள் நான். நியாயம் கேட்கச் சென்ற தந்தையைப் போலீசின் கொடூரத்திற்குப் பலி கொடுத்தவள் நான். அப்பா கொல்லப்பட்டதற்கு கண்கண்ட சாட்சியாக இருந்த யூனுஸ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்ததைப் பார்த்தவள் நான். கண்ணுக்கு முன்னால் அத்தைகள் இருவரும் பரிதாபமான முறையில் கொல்லப்பட்டதைப் பார்த்தவள் நான். அவர்களோடு சாவின் விளிம்பிற்குச் சென்றவள் நான். எங்களுக்கு ஆதரவாக நின்றதற்காக என் சித்தப்பா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பவள் நான். சொந்த நாட்டில் அகதியை விட அவலமான நிலையில் வேறொரு இடம் புகுந்து ஒளிந்து வாழ்ந்துகொண்டிருப்பவள் நான். இதோ நீதியின் பீடமாக இருக்கும் நீதிமன்றத்தின் கோர முகத்தையும் எதிர்கொள்ள என்னைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன்.  சகோதரர்களே, சகோதரிகளே, தாய்மார்களே! இந்த நாடும், சட்டங்களும், நீதிமன்றங்களும் நமக்கானவை இல்லையா? இதைப் பணயமாகப் பிடித்து வைத்திருக்கும் செங்கார் போன்ற மிருகங்களுக்கும், அவர்களைப் போன்ற குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஆட்சியாளர்களுக்கும், அவர்களுக்குத் துணையாக நிற்கும் நீதிமன்றங்களுக்கும் எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த நீதிப் போராட்டத்தில் உங்கள் ஆதரவைக் கோருகிறேன். நான் செத்துக்கொண்டே இருக்கட்டுமா அல்லது நாம் போராடி வெல்வோமா?   இப்படிக்கு, உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட உங்கள் மகள் / சகோதரி / இந்தியக் குடிமகள்.