நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் தேர்தலில் தலையாய பிரச்சனையாக இருக்கும்!
புதுக்கோட்டை, டிச.26- ஒன்றிய அரசு செய்துள்ள நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் என்பது, வரும் தேர்தலில் தலையாய பிரச்சனையாக இருக்கும் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப் புற வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 12 கோடி பேர் பயனடைந்து வந்தார்கள். சுமார் 8.60 கோடி பேருக்கு வேலை அட்டை வழங்கப்பட்டிருந்தது. படிப்படியாக வேலை அட்டை கள் வழங்குவது குறைக்கப்பட்டு 4.5 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திட்டம், எங்களுடைய திட்டம் அல்ல. இந்தி பேசுவோருக்கும் புரியாத பெயர்; ஆங்கிலம் தெரிந்தோருக்கும் புரியாத பெயர். அதேநேரத்தில் வெறுமனே பெயரை மட்டும் அவர்கள் திருத்தவில்லை. மொத்தமாக அதன் நோக்கத்தையே சிதைப்பது, குலைப்பது, புதைப்பது தான் நோக்கம். இத்திட்டத்தில் வேலை உத்தர வாதம் என்பதே இல்லை. ஒவ்வொரு மாநிலங்களி லும் குறிப்பிட்ட சில பகுதிகளை அறிவித்து அந்தப் பகுதியில் மட்டும் வேலை வழங்கப்படும். நாடு முழு மைக்குமான திட்டமல்ல. ஏற்கனவே நிதித் தட்டுப்பாடு, கடன் வாங்கி ஆட்சி நடத்த வேண்டிய சூழலில் 40 சத வீதம் மாநில அரசின் பங்குத்தொகை என்பது, கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியது வரும். இதனால், பல மாநிலங்களே வேலை வழங்கும் வரையறுக்கப்பட்ட பகுதிகளையும், வேலை வழங்கும் நாட்களையும் குறைக்கக் கோரும் சூழல் வரும். கீழ்மட்டத்தில் இருக்கும் 12 கோடி பேரின் வயிற் றில் அடிக்கும் செயல். வரும் தேர்தலில் தலையாய பிரச்சனையாக இது இருக்கும்” என்றார்.