100 நாள் வேலை உறுதித் திட்டம் ரத்து ஏழைகளுக்கு மரண தண்டனை
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் சட்டம், 2005 ஐ ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக “விக்சித் பாரத் – கேரண்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமீண்)” [விபி–ஜி ராம்(ஜி)] என்ற புதிய மசோதாவை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது “விக்சித் பாரத் – 2047” (வளர்ச்சி பாரதம் 2047) தொலை நோக்கின் பகுதி என்கிறது அரசு. புதிய சட்டத்தின் நோக்கங்கள்: தற்போதுள்ள ஆண்டுக்கு 100 நாள் வேலையை 125 நாட்களாக அதி கரித்தல்; விவசாய பருவத்தில் 60 நாட்களுக்கு வேலை வாய்ப்பை தடை செய்தல்; வேலைவாய்ப்பு செலவில் ஒன்றிய அரசின் பங்கை 90% இலிருந்து 60% ஆகக் குறைத்தல்; மாநில அரசின் பங்கை 10% இலிருந்து 40% ஆக அதிகரித்தல்; தொழில்நுட்பத்தின் மீது முழுமை யான சார்பை நிலைநிறுத்துதல் என்று கூறப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 2005 சட்டம் சில அடிப்படைக் கோட்பாடுகளின்படி கட்டமைக்கப்பட்டது: கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வயது வந்தவருக்கும் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாள் வேலைவாய்ப்பை சட்டப்பூர்வ உரிமையாக உத்தரவாதம் செய்தல்; வேலை கோரும் அனைவருக்கும் எந்த வரவுசெலவுத் திட்ட வரம்பும் இல்லாமல் வேலை வழங்குதல்;
இது கோரிக்கை அடிப்படையிலானது, வரவுசெலவுத் திட்ட அடிப்ப டையானது அல்ல; செலவில் 90% ஒன்றிய அரசும் 10% மாநிலங்களும் ஏற்றல்; 15 நாட்களுக்குள் வேலை வழங்காவிட்டால் வேலையின்மை நிவாரணம் வழங்குதல் என்பவையே அந்தக் கோட்பாடுகள். இதுவரை ரூ. 9.98 லட்சம் கோடி செலவில், 4720 கோடி மனித நாட்களை வழங்கியுள்ளது இத்திட்டம். சராசரியாக ஒரு வேலை நாளுக்கு ரூ. 211 கூலியாக தரப்பட்டுள்ளது. அரசின் திறமையான செயல்பாடு இருந்திருந்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். ஆனால் அதற்குப் பதில் அரசு இந்தச் சட்டத்தையே ரத்து செய்துள்ளது. புதிய சட்டத்தின் ஆபத்தான மாற்றங்கள் 1 கோரிக்கை அடிப்படையிலான உத்தரவாதத்திலிருந்து வரவு - செலவுத் திட்ட கட்டுப்பாட்டுக்கு புதிய சட்டத்தின் பிரிவு 4(5), ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டை முன்கூட்டியே தீர்மானிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 4(6), செலவு ஒன்றிய ஒதுக்கீட்டை விட அதிகமானால், கூடுதல் சுமையை மாநில அரசுகள் தாங்க வேண்டும் என்கிறது.
வேலைவாய்ப்பு இனி மக்களின் உரிமையால் அல்ல, ஒன்றிய நிதியால் தீர்மானிக்கப்படும். 2வேலைவாய்ப்பு கடும் குறைப்பு புதிய மசோதா, பிரிவு 6(2) மூலம், விவசாயப் பருவத்தில் 60 நாட்களுக்கு வேலைவாய்ப்பில் தடையை விதிக்கிறது. இது விவசாயிகளுக்கு உண்மையில் நன்மை பயக்குமா? ஒன்றிய அரசின் தரவே காட்டுவது என்ன? இத்திட்டத்தில் வேலை செய்பவர்களில் தலித்துகள் 18.63%, பழங்குடியினர் 17.32%, மொத்தம் 36%. மீதமுள்ள 64% பிற்படுத்தப்பட்ட, பிற சாதிகள் மற்றும் சிறுபான்மையினர். பெரும்பாலானோர் நிலமற்ற குடும்பங்கள் அல்லது சொந்த விவசாயம் சாத்திய மற்றபோது இத்திட்டத்தை நாடும் சிறு, குறு விவசாயிகள். கடந்த ஆண்டு 286 கோடி வேலை நாட்கள் உரு வாக்கப்பட்டன. பெரும்பான்மை வேலை நாட்கள் விவசாய வேலை குறைவாக இருக்கும் பிப்ரவரி முதல் ஜூன் வரை உருவாக்கப்பட்டன. பல மாநிலங்களில் 80% க்கும் மேற்பட்ட வேலை நாட்கள் மார்ச்-ஜூலை மாதங்களில் உருவாக்கப்பட்டன. விவசாய வேலைவாய்ப்பு கிடைக்காதபோதுதான் தொழிலாளர்கள் இத்திட்டத்தை நாடுகின்றனர் என்பது தெளிவு. 60 நாள் தடை ஏழைகளின் கால்களில் கயிறு கட்டுவது போன்றது. எந்த விவசாயியும் இதைக் கோரவில்லை. விவசாயிகள் கோருவது குறைந்தபட்ச ஆதரவு விலையும் இடுபொருள் செலவுகளுக்கான
ஆதரவும் தான்; இதை மோடி அரசு வேண்டுமென்றே தவிர்க்கிறது. 3 மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுதல் கடந்த நிதியாண்டில் ரூ. 93,850 கோடிக்கும் மேல் செலவானது. ஒன்றிய அரசு ரூ. 85,333 கோடி (90%), மாநிலங்கள் ரூ. 8,500 கோடி (10%) பங்களித்தன. புதிய சட்டத்தின் கீழ், ஒன்றிய பங்கு 60% ஆகவும், மாநில பங்கு 40% ஆகவும் மாறும். இதன் பொருள் ரூ.29,000 கோடிக்கும் மேற்பட்ட கூடுதல் சுமை மாநிலங்கள் மீது விழும். தமிழ்நாட்டுக்கு ரூ. 3,281 கோடி குறைப்பு, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 3,049 கோடி குறைப்பு, ஆந்தி ராவுக்கு ரூ. 2,438 கோடி குறைப்பு. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், ஜெகன் மோகன் ரெட்டி போன்றோர் தங்கள் மாநிலங்களின் நலனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இந்த மசோதாவுக்கு ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாநிலங்களை ஆலோசிக்காமல், அவற்றின் ஒப்புதல் இல்லாமல் சட்டம் இயற்றுவது கூட்டாட்சியா? இதுதான் மோடி அரசின் காட்டாட்சி! 4 100 இலிருந்து 125 நாட்கள் - வெறும் மாயை 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக அதிகரித்துள் ளோம் என்று அரசு பெருமை பேசுகிறது. ஆனால் 2005 சட்டத்தின் கீழும் 100 நாட்கள் குறைந்தபட்சம் மட்டுமே, அதிகபட்சம் அல்ல. கடந்த ஆண்டு 5.78 கோடி குடும்பங்கள் வேலை செய்தன, ஆனால் 100 நாள் வேலையை முடித்தது வெறும் 40.7 லட்சம் குடும்பங்கள் மட்டுமே.
இது 8% க்கும் குறைவு! உண்மையான தடை வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு களில் கடுமையாக குறைப்பு என்பது தான். திட்டம் அறிமுகமானபோது ஒன்றிய வரவுசெலவில் 4% இருந்தது. பாஜக ஆட்சிக்குப் பின் இது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. தற்போது வெறும் 1.37%, ரூ. 1.4 லட்சம் கோடியை குறைத்து வெறும் ரூ. 80,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 50 நாள் வேலையைக் கூட வழங்க முடியவில்லை. இந்த நிலையில் 125 நாட்களைப் பற்றி பேசுவது ஏமாற்று வேலை. 5 அதிகாரத்தை மையப்படுத்துதல்; கிராம சபைகளை பலவீனப்படுத்துதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிகளின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் கிராம சபைகள் மூலம் செய்யப்படு கின்றன. புதிய சட்டம் “தேசிய கிராமப்புற உள் கட்டமைப்பு அடுக்கை” அறிமுகப்படுத்துகிறது, இதன் கீழ் என்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், எங்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒன்றிய அரசு தீர்மானிக்கும். அதிகாரத்துவ கட்டுப்பாடு வலுப்படுத்தப்படுகிறது, கிராம சபை அதிகாரங்கள் நீர்த்துப்போகின்றன. 6கூலி நிர்ணயத்தில் ஒன்றிய அரசின் முழு கட்டுப்பாடு 2005 சட்டத்தின் கீழ், கூலிகள், குறைந்தபட்ச கூலி சட்டம், 1948 உடன் இணைக்கப்பட்டன, பணவீக்கத் தின் அடிப்படையில் இயல்பாகவே திருத்தியமைக்கப் பட்டன. மாநில அரசுகள்
அதிக கூலிகளை நிர்ண யித்தால், அவை அங்கீகரிக்கப்பட்டன. புதிய சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படும் கூலிகள் இறுதியானவையாக இருக்கும். பண வீக்கத்துடன் இணைப்பு இல்லை, மாநிலம் நிர்ண யித்த அதிக கூலிகள் அங்கீகரிக்கப்படாது. 7 தொழில்நுட்பம் மூலம் தொழிலாளர்களை விலக்குதல் 2005 சட்டத்தின் விதிகளை மீறி, ஆதார் இணைப்பு ஏற்கெனவே 1 கோடி வேலை அட்டைகளை ரத்து செய்வதற்கும் 7 கோடி பயனாளிகளை நீக்குவதற்கும் வழிவகுத்துள்ளது. கேஒய்சி விதிமுறைகளின் கீழ், மேலும் 27 லட்சம் தொழிலாளர்கள் தகுதியற்றவர் களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இப்போது, நாளொ ன்றுக்கு இரண்டு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு, பணித் தளங்களின் புவி-குறியீட்டு புகைப் படங்கள் மற்றும் கட்டாய டிஜிட்டல் பதிவேற்றங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்தின் போர்வையில், வேலைவாய்ப்பு நீக்கமே சட்டப்பூர்வ மாக்கப்பட்டுள்ளது. 8 வேலை நேர விதிமுறைகளை மீறுதல் கூலிகள் குறைக்கப்படும் அதேவேளையில், வேலைநேரம் அதிகரிக்கப்படுகிறது. நிலையான வேலைநாள் 7 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, பிரிவு 19(ஆ) இன் கீழ், வேலை நேரம் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படலாம். இது பல தசாப்த கால தொழிலாளர் போராட்டங்களை மிதித்து, சுரண்டலை நுட்பமான
முறையில் சட்டப்பூர்வமாக்குகிறது. 9 ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் வேலைவாய்ப்பு முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் தானாகவே பொருந்தும். புதிய சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரிவு 5(1) இன் கீழ் ஒன்றிய அரசு தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படும். மாநில பரிந்துரைகள் தன்னிச்சையாக நிராகரிக்கப்படலாம். 10 சட்டப்பூர்வ உரிமையிலிருந்து ஒன்றிய நிதியுதவி திட்டமாக மாற்றம் 2005 சட்டத்தின் கீழ், எந்தவொரு மாற்றத்திற்கும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்பட்டது. புதிய சட்டம், வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஒன்றிய நிதியுதவி திட்டமாக மாற்றுகிறது, இது அரசாங்கத் திற்கு நிர்வாக அறிவுரைகள் மூலம் மாற்றங்களை சுமத்த அனுமதிக்கிறது. முன்பு, வேலைவாய்ப்பு அல்லது வேலையின்மை நிவாரணம் மறுக்கப் பட்டால் தொழிலாளர்கள் நீதிமன்றங்களை அணுக லாம். அந்த சட்டப்பூர்வ தீர்வு இப்போது நீக்கப் பட்டுள்ளது. 11 ஒப்பந்ததாரர்களுக்கு கதவைத் திறத்தல் பணிகளை நான்கு வகைகளாகப் பிரித்து இயந்திர மயமாக்கலை அனுமதிப்பதன் மூலம், புதிய சட்டம் மறைமுகமாக ஒப்பந்ததாரர் நுழைவை எளிதாக்கு கிறது.
இது கிராமப்புற வேலைவாய்ப்பில் தொழி லாளர்கள் மட்டுமே பலன்பெற முடியும் என்பதை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. 12 தேசிய அளவிலான வழிநடத்தல் குழு – அதிகாரத்துவ கைப்பற்றல் புதிய சட்டம் தேசிய அளவிலான வழிநடத்தல் குழுவை அறிமுகப்படுத்துகிறது, இது முற்றிலும் அதிகாரிகளைக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நிபுணர் களை உள்ளடக்கிய பங்கேற்பு கவுன்சில்கள் மாற்றப் பட்டுள்ளன. இந்த குழு நிதி ஒதுக்கீட்டு விதிமுறை கள், பணி முன்னுரிமைகள் மற்றும் நிபந்தனைகளை தீர்மானிக்கும். இது, தன்னிச்சை மற்றும் அரசியல் தவறான பயன்பாட்டிற்கு வாய்ப்பை உருவாக்கும். 13 காந்தி பெயர் நீக்கம் – அரசியல் நிகழ்ச்சி நிரல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மகாத்மா காந்தியின் பெயரால் அழைக்கப் பட்டது அவரது மரபை கெளரவிக்கவே. டிசம்பர் 15, 2025 அன்று, மோடி அரசு காந்தியின் பெயரை நீக்கி விட்டு இந்த மசோதாவை அதன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியது. ஜி-ராம் (ஜி) என்ற சுருக்கெழுத்து அரசியல் ரீதியாக வடி வமைக்கப்பட்ட பெயர், ஆங்கிலம் மற்றும் இந்தி சொற்களை கலந்து இந்துத்துவா கருத்தியல் நோக்கங்களுக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் உண்மையான நோக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறைந்து வரும் கிராமப்புற வேலைவாய்ப்பை ஈடுசெய்தது, விவசாய கூலிகளை வலுப்படுத்தியது, கிராமப்புற தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை மேம்படுத்தியது,
பாலின கூலி சமத்துவத்தை உறுதி செய்தது, கோவிட் நெருக்கடியின் போது உயிர்களை காத்தது; வேலையை உரிமையாக அங்கீகரித்து கண்ணியம் அளித்தது. ஆனால், ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா, ஜனசங்கம் கருத்தியலில் வேரூன்றிய பாஜக ஆரம்பத்திலிருந்தே இத்திட்டத்தை எதிர்த்துள்ளது. வேலைவாய்ப்பு உத்த ரவாதத்திலிருந்து அதிகம் பயனடைந்த விவசாயத் தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர், குறு விவசாயிகள் இந்துத்துவா கருத்தியலுக்கு முரணா னவர்கள். எனவே, நிலம் மற்றும் செல்வந்த வர்க்கங்களை
திருப்திப்படுத்துதல், கிராமப்புற உழைக்கும் வர்க்கங்களின் கூட்டு வலிமையை பலவீனப்படுத்து தல், ஏழைகளை தனிமைப்படுத்தி மீண்டும் அடி மைத்தனத்திற்கு தள்ளுதல் ஆகியவையே, இந்த புதிய சட்டத்தின் உண்மையான நோக்கம் ஆகும். இது வெறும் சட்ட மாற்றம் அல்ல. வாழ்வாதா ரங்கள் மீதான நேரடித் தாக்குதல். இந்த உரிமை பறிக்கும் மசோதாவை வலுவாக எதிர்த்து, ரத்து செய்ய வைக்காவிட்டால் கிராமப்புற இந்தியா பசி மற்றும் துயரத்திற்குள் தள்ளப்படும். இது சீர்திருத்தம் அல்ல — ஏழைகள் மீதான போர். வேலை நமது உரிமை. வேலைவாய்ப்பு நமது உயிர். - தமிழில் சுருக்கம் : ராகிணி
