“ஊடுருவல்” எனும் பூச்சாண்டி இந்தியா முழுவதும் வெறுப்புக் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. 2025-ஆம் ஆண்டின் இறுதி வாரங்களில், இந்தியா முழுவதும் நடந்த தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள், தாக்குதலுக் குள்ளானவர்களை வங்கதேசத்தவர்கள் என்றும் சீனர்கள் என்றும் முத்திரை குத்தி, புலம்பெயர்ந்தோர் மீது ஏவப்படும் ஒரு கவலையளிக்கும் வன்முறைப் போக்கை வெளிப்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மூவருமே நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியக் குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொழி, பிராந்தியம், தோற்றம் அல்லது ஒருவரின் தேசிய இனத்தைப் பற்றிய தன்னிச்சையான அனுமானங்களின் அடிப்படையில் வன்முறை வெடிப்பது மிகவும் கவலைக்கு ரியது; காவல்துறை இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மாநில மற்றும் ஒன்றிய அரசியல் தலைமை தெளிவுபடுத்த வேண்டும். அடுத்தடுத்த சம்பவங்கள் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 31 வயதான புலம்பெயர் தொழிலாளி ராம் நாராயண் பாகேல், டிசம்பர் 17 அன்று ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். பாகேல் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதுடன், அவரைத் தாக்கியவர்கள் அவர் “வங்க தேசத்தவரா” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களைப் பெருமளவில் சார்ந்துள்ள கேரளா, தனது கல்வி அறிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்துப் பெருமை கொள்கிறது; ஆனால் இந்தச் சம்பவம் அதன் பெயருக்கு ஒரு கறையாக அமைந்துள்ளது. டிசம்பர் 24 அன்று, ஒடிசாவின் சம்பல்பூரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் “வங்கதேசத்தவர்” என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். ஜுயல் ஷேக் என்ற அந்தத் தொழிலாளி, ஒரு தேநீர் கடை யில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டப் பட்டு, அவரது அடையாள ஆவணங்களைக் கேட்டு, அவர் ஒரு சட்டவிரோத வங்கதேசக் குடியேறி என்று குற்றம் சாட்டப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒடிசாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வங்க மொழி பேசும் தெருவோர வியாபாரி ஒருவர் தாக்கப்பட்டார். தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது, அரி வாள் மற்றும் கத்திகளுடன் வந்த சிறுவர்களால் தாக்கப் பட்டார். இந்தத் தாக்குதல் படம் பிடிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டது. டேராடூனில், டிசம்பர் 28 அன்று, திரிபுராவைச் சேர்ந்த 22 வயது மாணவர் அஞ்சல் சக்மாவுக்கும் அவரது சகோதரருக்கும் எதிராக இனவெறி வசவுகளை வீசிய ஒரு கும்பலால் குத்திக் கொல்லப்பட்டார். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியா வின் பிற பகுதிகளில் பெரும்பாலும் ‘அந்நியர்களாகவே’ நடத்தப்படுகிறார்கள்; சக்மாவைத் தாக்கியவர்கள் அவரை “சீனன்” என்று அழைத்துள்ளனர். இவை தனித்தனியான சம்பவங்கள் அல்ல; சிறுபான்மையினரை இலக்கு வைப்பது அல்லது நண்பரின் பிறந்தநாளைக் கொண்டா டும் மாணவர்களைக் கூட மிரட்டுவது என பல வன்முறைப் போக்குகளுக்கு மத்தியில் இவை நிகழ்கின்றன. மாநிலக் காவல்துறையினர் சில கைதுகளைச் செய்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை. பாஜகவின் பிரச்சாரமே காரணம் வங்கதேசத்தில் இருந்து “சட்டவிரோத ஊடுருவல்” நடப்பதாக, தனது ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான முக்கிய ஆயுதமாக பாரதிய ஜனதா கட்சி மாற்றியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வன்முறைக் கும்பல்கள் அப்பாவி மக்களுக்கு எதிராக இந்த “ஊடுரு வல்” எனும் பூச்சாண்டியைப் பயன்படுத்தத் துணிச்சல் பெறுவது தற்செயலானது அல்ல. பாரதிய ஜனதா கட்சி தனது பிரச்சாரத்தின் ஆபத்துகளை உணர்ந்து தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். (தி இந்து - ஆங்கிலம் - தலையங்கம், 1.1.26 ) தமிழில் : க.கனகராஜ்