மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம்
இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் புகுந்து ராணுவத் தாக்குதல் நடத்தி மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை யும் அவரது மனைவியையும் கடத்திக் கொண்டு போன அமெரிக்காவின் செயல், இதுகாறும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து விழுமியங்களையும் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. இன்றைய ஏகாதிபத்திய முறைக்கு முடிவு காண வேண்டுமென்பதும், உலகத் தொழிலாளி வர்க் கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதும் வெனிசுலா நிகழ்வுகள் எடுத்துரைக்கும் பாடங்கள். பல நூற்றாண்டுகள் அடிமைப்பட்ட மக்கள் போரா டிப் பெற்ற ஜனநாயக உரிமைகளையும், இறை யாண்மை மாண்புகளையும் பாதுகாத்திடும் போராட்டம் முக்கியமானதாக முன்னிற்கிறது.
சர்வதேச சட்டங்களைப் பாதுகாத்தல்
ஜனநாயகம், இறையாண்மை சார்ந்த சர்வதேச விதிகளும் சட்டங்களும் ஆபத்துக்கு உள்ளாகியி ருக்கும் இந்த சூழலில் அவற்றைப் பாதுகாக்கும் போராட்டம் முக்கியமானது. ஜனநாயகம், இறை யாண்மை, நாடுகளின் சுய உரிமை அனைத்தும் எழுத்து வடிவில் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை உலக மக்கள் பாதுகாக்க வேண்டும். அவற் றைக் காப்பதற்கு இன்னும் வலிமையான கட்ட மைப்புகள் உருவாக்கிட வேண்டும். தற்போது உள்ள வற்றை பாதுகாத்து மேலும் முன்னெடுக்க வேண்டும். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐ.நா. மன்றத்தின் சாசன விதிகள், சர்வதேச சட்டங்கள் என நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்கும் விதிகளும் சட்டங்களும் உருவாக்கப்பட்டன. 1945இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா.சாசனம் (UN Charter) மக்கள் தங்கள் அரசியல் அமைப்பை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை வலியுறுத்துகிறது. “அனைத்து உறுப்புநாடுகளும் சமமான இறையாண்மை (sovereign equality) கொண்டவை” என்று தெளிவாக சாசனம் பிரகடனம் செய்கிறது. இராணுவத் தலையீடு மூலம் மற்றொரு நாட்டின் தேச ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரத்தை பறிக்கும் செயல்களை ஐ.நா. சாசனம் தடை செய்கிறது.
1960இல் ஐ.நா.பொதுச் சபை தீர்மானம் எண்: 1514, - “ காலனித்துவ நாடுகள், காலனி நாட்டு மக்க ளுக்கு சுதந்திரம் வழங்குவது குறித்த பிரகடனம்” வெளியிட்டது. இது “ஒரு நாட்டு மக்களை வெளிநாட்டு ஆதிக்கத்தில் வைத்திருப்பது ஐ.நா. சாசனத்துக்கு எதி ரானது” என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கருத்தை அழுத்தமாக அறிவித்தது. அத்துடன் விடுதலை பெற்ற மக்கள் தங்கள் இயற்கை வளங்களையும் செல்வத்தையும் தாமே நிர்ணயம் செய்யும் உரிமை உண்டு என்றும் உறுதிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 1966 மனித உரிமை உடன் படிக்கைகளில் “அனைத்து மக்களும் தங்கள் இயற்கை வளங்களை தாமாகவே பயன்படுத்தி, தங்கள் பொருளாதார–சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்க உரிமை பெற்றவர்கள்” என்று தெளிவாக குறிப்பிட்டது.
ஆதிக்கக் கோட்பாடுகள்
இவை அனைத்துக்கும் பின்னணியாக பல நூற்றாண்டு காலனியாதிக்கத்தை எதிர்த்த போராட்ட வரலாறு உள்ளது. டிரம்ப்பின் வெனிசுலா மீதான தாக்குதல் நடவடிக்கை மேற்கண்ட முற்போக்கான சட்டங்களை காலில் போட்டு மிதித்துள்ளது. வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்ப தும் அதனுடைய எண்ணெய் வளத்தை அமெரிக்க எண்ணெய் கார்ப்பரேட் கம்பெனிகள் கையகப் படுத்தும் என்பதும் முழுக்க முழுக்க உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட சட்ட விதிகள், ஐ.நா. சாசனம் அனைத்துக்கும் எதிரானது. சர்வதேச அளவில் தெளிவான விதிகள் உரு வாக்கப்பட்டாலும் இன்னமும் மோசமான ஒரு கோட்பாடு நீடித்துக் கொண்டிருக்கிறது. எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட இயற்கை கனிம வளங்கள் கொண்டுள்ள ஏழை நாடுகள் தங்கள் இறையாண்மை யை இழந்து, ஏகாதிபத்தியங்களுக்கு நவீன அடிமைக ளாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கை. பழைய மன்றோ தத்துவம், தற்போதைய டிரம்பின் “தேசிய பாதுகாப்புக் கொள்கை” அனைத்தும் இந்த ஆதிக்கக் கோட்பாட்டின் வெளிப்பாடுகள்.அதனு டைய விளைவுகள்தான் வெனிசுலா உள்ளிட்ட மூன் றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் அடக்குமுறை. வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் இனி எங்களுக்கே சொந்தம் என்று டிரம்ப் ஆர்ப்பரிக்கி றார். அமெரிக்காவின் சாதாரண உழைக்கும் தொழி லாளிக்கு எண்ணெய் கிணறுகளை அவர் உரிமை யாக்கப் போவதில்லை. மாறாக அமெரிக்காவின் கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாப வேட்டைக்கு அவை பயன்படும். “அமெரிக்கா முதலில்“ என்று டிரம்ப் பேசுவதும் முழுக்க கார்ப்பரேட் முதலாளி களின் மூலதன நலன்களுக்காகவே. சாதாரண அமெரிக்க தொழிலாளிக்கு எந்த நன்மையும் இத னால் ஏற்படப் போவதில்லை.அமெரிக்க மக்கள் இதை உணர்ந்ததால்தான் அமெரிக்க நகரங்கள் முழு வதும் அணி அணியாகத் திரண்டு, வெனிசுலா மீதான நடவடிக்கையைக் கண்டித்து போராடி வரு கின்றனர். அமெரிக்காவினுடைய அரசியலமைப்புச் சட்டத்தையும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகா ரத்தையும் ஒரே நேரத்தில் தூக்கி எறிந்து வெனிசுலா மீதான அராஜக நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. இதைக் கண்டித்து அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் மக்கள் அமைப்புகள் பெருவாரியாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் காலனியாதிக்கப் போராட்டமும் மோடி அரசும்
மனிதநேயத்திற்கு எதிராகவும், சட்டங்களுக்கு விரோதமாகவும், அமெரிக்கா வெனிசுலா மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கண்டனத்தை எழுப்பியுள்ளன. எனினும் இந்தியா இதனை உறுதியாக கண்டிக்காதது உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. இதனால், தெற்குலக நாடுகளின் தலைவராக தன்னை முன்னிறுத்த முயலும் இந்திய ஆட்சியாளர்களின் கனவு ஈடேறப் போவதில்லை.இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பு வகிக்க வேண்டிய சூழலில், டிரம்ப் பிற்கு சரணாகதி அடையும் போக்கு காரணமாக தற்போதுள்ள மரியாதையையும் இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் இந்திய மக்கள் நடத்திய காலனிய எதிர்ப்பு போராட்டப் பாரம்பரியத்தை அறியாதவர்கள். அதுமட்டு மல்ல,அமெரிக்காவோடு கூடிக் குலாவுகிற கொள்கை களைக் கொண்டிருக்கிற கார்ப்பரேட் ஆளும் வர்க்கம் காலனிய எதிர்ப்பு சரித்திரத்தையே அழிக்க முனை கின்றனர். காலனி ஆதிக்கத்தின்போது இந்தியாவின் உற்பத்தி மற்றும் பொருளாதார பலன்களை பிரிட் டன் பெருமளவுக்கு அபகரித்தது. பிரிட்டன் இந்தி யாவிற்கு வருவதற்கு முன்பு உலகப் பொருளா தாரத்தில் இந்தியாவின் பங்கு 23 சதவீதம். அது, விடுதலைக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளியேறிய போது 4 சதவீதமாக சுருங்கிப் போனது. இந்தியாவின் மொத்த தேசிய வரு மானத்தில் சராசரி 10 சதவீதத்திற்கும் மேலான வரு மானத்தை பிரிட்டன் கொள்ளை கொண்டது. இது அல்லாமல், உள்நாட்டுத் தொழில்களை அழித்து தங்களது தொழில்களை விரிவாக்கிக் கொண்டதும், வணிக வருமானத்தை பெருக்கிக் கொண்டதெல்லாம் பொருளாதாரக் கொள்ளையின் கோர வடிவங்கள். விவசாயத்தில் பணப்பயிர்களை பயிரிடச் செய்து, விற்பனைக்கான உற்பத்தி என்று இந்திய விவசாயத்தை அடியோடு மாற்றினர். அநியாய நிலவரி, கடன் சுமை என அன்று விவசாயி களின் வாழ்க்கை சோகக் கடலில் மூழ்கியிருந்தது. 17ஆம் நூற்றாண்டுக்கும் - 20ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் பிரிட்டிஷ் கொள்கையால் சுமார் 2 கோடியே 90 லட்சம் இந்தியர்கள் பட்டினியால் மடிந்த னர். இந்தியா மீது நடந்த எந்த படையெடுப்பும் இந்த அளவிற்கு மக்களை அழித்ததில்லை. கஜினி முகமது படையெடுப்பு பற்றி பேசும் மோடி எந்தக் காலத்தி லும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் ஏற்படுத்திய வர லாறு காணாத கொடூரங்களைப் பேசியதில்லை. கால னியாதிக்கத்தின் இரத்தக்கறை படிந்த வரலாற்றை உணர்ந்தவர்கள் உயிருள்ளவரை ஏகாதிபத்தி யங்களின் காலனித்துவக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவார்கள்.
தொடரும் வேட்டை
டிரம்ப் நிர்வாகம் தங்களது மேலாதிக்க நடவடிக்கை களை நிறுத்தப் போவதில்லை. கொலம்பியா, கிரீன் லாந்து, மெக்ஸிகோ, கியூபா, ஈரான் போன்ற நாடுக ளையும் வேட்டையாட அவர்கள் முனைப்பாக செயல் பட்டு வருகின்றனர். லத்தீன் அமெரிக்காவின் அரிய வளங்களைக் கைப்பற்றுவதுதான் இந்த நடவடிக்கைகளின் நோக்கம். மிரட்டல் உருட்டல்களோடு சமமற்ற வணிகப் பேச்சுவார்த்தைகள் அராஜகமாக முடிக்கப் பட்டு இந்த வளங்களை ஏகாதிபத்தியங்கள் அபக ரிப்பார்கள். இதுவே இன்றைய . நவீன காலனி யாதிக்க அடாவடி. ஆனால், தற்போது டிரம்ப்பின் நடவடிக்கை பழைய காலனியாதிக்கத்தை மீண்டும் அரங்கேற்று கிறது. கடந்த காலத்தில் ஏகாதிபத்திய பேரரசுகள் நேர டியாக, ராணுவ ரீதியாக தலையிட்டு தங்களுக்கான வணிக, சுரண்டல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டன. இதுதான் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் அந்த அராஜகமான காலனித் துவத்தை நோக்கி உலகத்தை கொண்டு செல்கிற ஒரு மோசமான வழிமுறையை அமெரிக்கா மேற் கொண்டுள்ளது.
லெனின் கூற்று உண்மை
அமெரிக்காவின் எரிசக்தி துறை அமைச்சர் கிரிஸ் ரைட் வெனிசுலாவின் மூன்று முதல் ஐந்து கோடி பேரல் எண்ணெய்யை உடனடியாக சந்தைப் படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனமான செவ்ரான் உடனடியாக செயல்படுவதற்கான அனுமதியை அளிப்பதாக அவர் அறிவித்தார். இவை அனைத்தும் ஏகாதிபத்திய முறைமை. லெனின் ஏகாதிபத்தியம் பற்றி சொன்னது இப்போ தும் பொருந்தும் என்பதை இந்த நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவ வளர்ச்சி யின் ஏகபோக கட்டம் என்பது லெனின் கூற்று.நிதி மூலதனம் மேலாதிக்கம் செலுத்தும் ஏகபோக முதலா ளித்துவமாக அது வளர்ந்துள்ளது. மற்ற போட்டியா ளர்களை விலக்கி, அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு மேலும் மேலும் மூலதனத்தை மையப் படுத்திட கார்ப்பரேட் அமெரிக்கா வெறி பிடித்து அலைகிறது; ஏகபோகமாக உலகை ஆதிக்கம் செலுத்த முனைகிறது. முதலாளித்துவத்திற்கு ஏற் பட்டுள்ள நெருக்கடியை தீர்த்துக் கொள்ள மனிதப் பேரழிவை நிகழ்த்திட முனைகின்றனர். இதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் உலக உழைக்கும் மக்களின் ஒற்றுமையில்தான் உள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பை மையப்படுத்தி உலகத் தொழிலாளி வர்க்க இயக்கங்கள் போராட்ட வியூ கங்களை முன்னெடுக்க வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் மக்களை பேரலையாக திரட்டிட வேண்டிய கடமை உலக இடதுசாரி இயக்கங்களுக்கு உண்டு.
