articles

நெல் கொள்முதல் விலையும் விதிகளும் : விவசாயிகளுக்குத் தீர்வு கிடைக்குமா? - ஆரூரான்

நெல் கொள்முதல் விலையும் விதிகளும் : விவசாயிகளுக்குத் தீர்வு கிடைக்குமா? 

தமிழ்நாடு அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 (சாதாரண ரகம்) மற்றும் ரூ.2,545 (சன்ன ரகம்) என உயர்த்தியிருந்தாலும், ஆனால், கள யதார்த்தம் வேறுவித மாக இருக்கிறது. இந்த விலை உயர்வு, இன்றைய இடுபொருள் செலவு மற்றும் பணவீக்கத்தோடு ஒப்பிடுகை யில் ‘யானைப்பசிக்குச் சோளப்பொரி’ போன்றதுதான். விலைவாசியும் விவசாயியின் கண்ணீரும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், இயந்திர வாடகை, டீசல் விலை மற்றும் ஆட்கள் கூலி என அனைத்தும்  பல மடங்கு உயர்ந்துவிட்டன.

70 ஆண்டுகளுக்கு முன்பு  3 மூட்டை நெல் விற்றால் ஒரு பவுன் தங்கம் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று, 5 ஏக்கரில் விளைந்த முழு நெல்லையும் விற்றால்தான் ஒரு பவுன் தங்கம் வாங்க முடியும் என்ற அளவுக்கு விவசாயத்தின் மதிப்பு சரிந்துவிட்டது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தபடி, உற்பத்திச் செலவைவிட 50% கூடுதல் விலை வழங்கப்பட்டால் மட்டுமே விவசாயி மூச்சுவிட முடியும். சத்தீஸ்கர், ஹரியானா போன்ற மாநிலங்கள் கூட  நம்மைவிட அதிக விலை கொடுக்கும்போது, தமிழகத்தால் ஏன் முடியவில்லை என்ற கேள்வி நியாயமானது. ஈரப்பதம்: தீர்க்கப்படாத பெருஞ்சிக்கல் விலையை விடவும் விவசாயிகளை அதிகம் வாட்டி வதைப்பது ‘ஈரப்பத விதிமுறை’ (Moisture Content)  தான். கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17% மட்டுமே இருக்க வேண்டும் என்று கெடுபிடி காட்டப் படுகிறது.

ஆனால், டெல்டா மாவட்டங்களில் அறுவடைக் காலத்தில் பெரும்பாலும் மழை பெய்வது வாடிக்கையாகி விட்டது. திடீரெனப் பெய்யும் மழையில் நனைந்த நெல்லை உலர வைக்கப் போதிய இடவசதி விவசாயி களிடம் இல்லை. சாலைகளிலும், வயல்வெளிகளிலும் காயவைக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது, மத்தியக் குழு வந்து ஆய்வு செய்து, அறிக்கை கொடுத்து, அதன்பின் தளர்வு அறிவிப்பதற்குள் கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்கும் நெல் முளைவிட்டு வீணாகிவிடுகிறது. இந்த காலதாமதத்தால் ஏற்படும் இழப்பு விவசாயியின் தலையிலேயே விழுகிறது. எனவே, மழைக் காலங்களில் ஈரப்பத வரம்பை ஒன்றிய அரசு 22% வரை உயர்த்த நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. கள நிலவரமும் உள்கட்டமைப்பும் அரசு புதிய நவீன நெல் சேமிப்பு வளாகங்களைத் திறந்திருந்தாலும், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக்கிடக்கும் காட்சி மாறவில்லை.

கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்புக் கிடங்குகளுக்கோ அல்லது அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்வதில் லாரி தட்டுப்பாடு மற்றும் நிர்வாகத் தாமதங்கள் உள்ளன. இதனால் திறந்தவெளியில் அடுக்கப்பட்டிருக்கும் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாகின்றன. களப்பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் சாக்குப்பை தட்டுப்பாடு போன்றவையும் விவசாயிகளை அலைக்கழிக்கின்றன. வாக்குறுதிகளும் எதிர்பார்ப்புகளும் கேரள மாநிலத்தைப் போல விளைபொருட்களுக்குத் தகுந்த விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும், மஞ்சள், கரும்பு போன்ற பிற பயிர்களுக்கும் ஆதார விலை வழங்கப் படும் என்றும் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

 எனவே, வெறும் விலை உயர்வு  அறிவிப்பு மட்டும் விவசாயிகளைக் காப்பாற்றிவிடாது. *    இடுபொருள் செலவுக்கேற்ற நியாயமான விலை உயர்வு. *    பருவமழைக்காலச் சூழலைப் புரிந்துகொண்டு ஈரப்பத விதிகளில் தானியங்கி தளர்வு (Automatic Relaxation). *    கொள்முதல் தாமதத்தைத் தவிர்க்க நவீன உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி. இவை மூன்றும் ஒருங்கிணைந்தால் மட்டுமே அரசு அறிவிக்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கு உண்மையான நிறைவைத் தரும். விவசாயிகளின் குரலுக்குச் செவி சாய்த்து, அரசுகள் உடனடித் தீர்வுகளைத் தரவேண்டும்.