அழும் பிள்ளை தான் பால் குடிக்கும்
ஒரு மன்னன் அவனது நன்மைக்காக மிகப்பெரிய யாகம் ஒன்று நடத்தினான். அப்போது பலியிடுவதற்காக ஆடு ஒன்று அருகில் கட்டப்பட்டிருந்தது. தன்னை பலியிடப் போவதை ஆடு அப்போது நன்கு உணர்ந்தும் இருந்தது. அதனை எண்ணி வருந்தியபடி அதற்காக வெறுமனே அழுது கொண்டிருக்கவில்லை ஆடு. அதனுள்ளும் பல கேள்விகள் தோன்றின. ஏதேதோ வகையில்பயங்கரமாக சப்தமிட்டுக் கொண்டே இருந்தது ஆடு. ஓயாமல் சப்தம் செய்ததால் எரிச்சல் அடைந்த மன்னன், பக்கத்தில் இருந்த பண்டிதரைப் பார்த்துக் கேட்டான். “இந்த ஆடு ஏன் பயங்கரமாக கத்திக் கொண்டே இருக்கிறது?” அதற்கு பதில் சொல்லாமல் சிறிது மௌனமாக இருந்தார் பண்டிதர். காரணம் அவருக்கு ஆட்டின் மொழி தெரியும். “அது என்னதான் கூறுகிறது என்று சொல்லுங்கள் பண்டிதரே”என்று மீண்டும் வற்புறுத்தினான் மன்னன். “எதற்காக மன்னன் என்னை பலியிட விரும்புகிறான்? இந்த யாகத்தின் போது பலியிட்டால் நான் சொர்க்கத்தை அடைவேன் என்று இங்கு கூடியிருக்கும் பலரும் சொல்கிறார்கள். நான் ஏன் சொர்க்கத்திற்கு போக வேண்டும்? இங்கேயே இலை தழைகளைத் தின்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்று நான் மன்னனிடம் கேட்கவில்லையே! யாகத்தில் பலியானவர்கள் சொர்க்கத்திற்குப் போவது உறுதி என்றால் மன்னனின் பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் உள்ளிட்டோர்களை பலி கொடுத்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டியது தானே!” என்று இந்த ஆடு சொல்கிறது என்று கூறினார் பண்டிதர். இதைக் கேட்டதும் மன்னன் வெலவெலத்துப் போனான். உடனே ஆட்டை அவிழ்த்து விடுமாறு உத்தரவிட்டான். ஒருவேளை ஆடு குரல் எதுவும் எழுப்பாமல் இருந்திருந்தால் சாவிலிருந்து அது விடுபட்டிருக்க முடியாது. அழும் பிள்ளைதான் பால் குடிக்கும். அதுபோல் ஓங்கித் தட்டினால் தான் கதவு திறக்கும்.
