articles

img

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு - வி.பரமேசுவரன்

1975 ஜூன் 25 ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 தேதி தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. இரவோடு இரவாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட நான் திருச்சி மத்திய சிறையில் நள்ளிரவில் அடைக்கப்பட்டேன்.  காலையில் சிறைக் கதவு திறந்ததும் எனக்கு முன்னால் ஒருவர் வந்து வணக்கம் செலுத்தினார். தனது பெயர் இளங்கோவன் என்றும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு அவர் கூறினார், ‘நீங்கள் சொன்னபடி நான் மிசாவில் கைதாகி சிறைக்கு வந்துவிட்டேன். என்.வெங்கடாசலம் இன்னும் வர வில்லை’ என்றார். அவரும் விரைவில் வந்துவிடுவார் என்று நான் கூறினேன்.

 திருச்சி சிறையில்  

இந்த உரையாடலுக்கு ஒரு பின்னணி நிகழ்வு உண்டு. கோ.இளங்கோவன் வசித்த இளங்காடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தோழர் என்.வி.அவர்களுடன் நானும் பங்கேற்றேன். எனக்கு முன்னால் பேசிய அவர், அப்பகுதியில் தலித் மக்களுக்கு எதிராகச் செயல்படும் நபர்களைப் பற்றி கடுமையாக விமர்சித்தார். அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் உதவி செய்வதையும் தோழர் என்.வி. விமர்சித்தார். அடுத்து நான் பேசும் போது, “திமுக ஆட்சி எந்த நேரமும் கலைக்கப்பட லாம். அப்படி கலைக்கப்பட்டால் மிசா சட்டத்தின் கீழ் தோழர் என்.வி. கைது செய்யப்படுவார், சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவனும் கைது செய்யப்படுவார். சிறையில் ஒரு அறையில் என்.வி.யும், அடுத்த அறை யில் இளங்கோவனும் பூட்டப்படலாம்” என்று குறிப் பிட்டேன். இதனை நினைவூட்டிதான் நீங்கள் பொ துக்கூட்டத்தில் சொன்னபடியே நடந்து விட்டது என்று இளங்கோவன் கூறினார். அடுத்து சில நாட்களில் என்.வி. அவர்களும் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.  திருச்சி மத்திய சிறையில் ஒன்றுபட்ட தஞ்சை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் அடைக் கப்பட்டிருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கே.அனந்த நம்பியார், எஸ்.கே.நம்பியார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.பாரதிமோகன், கே.ஆர்.ஞானசம்பந்தம், பி.எஸ்.தனுஷ்கோடி, என்.மணியன், புதுக்கோட்டை பெரி.குமாரவேல் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். திமுக தலைவர்கள் திருவாரூர் தென்னன், தாழை கருணா நிதி, கோ.சி.மணி, புதுக்கோட்டை தியாகராஜா காடு வெட்டியார், போடி சுருளிவேல், ஆர்.நாகசுந்தரம், நன்னிலம் நடராஜன், தஞ்சை எஸ்.நடராஜன், வெற்றி கொண்டான், திருச்சி சிவா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.  சிறையில் உணவு சாப்பிடுவதற்கு ஒரு அலுமினி யத் தட்டும், தண்ணீர் குடிப்பதற்கு அலுமினியக் குவளையும் தரப்பட்டது. கழிவறைக்கு செல்லும் போது, அதே குவளையைத்தான் பயன்படுத்த வேண்டும். சென்னை மத்திய சிறையில் நடந்த கொடூர மான தாக்குதல் பற்றிய செய்தி திருச்சி சிறைக்கு எட்டியது. சிறிது நாட்கள் பதற்றம் நிலவியது. அப்போது கோ.பாரதி மோகன், கே.ஆர்.ஞானசம்பந்தம் ஆகி யோர் திமுக தலைவர்களை சந்தித்து, எதற்கும் பயப்பட வேண்டாம் தைரியமாக இருங்கள் என்று தங்களது சிறை அனுபவங்களை கூறினர். சிறையில் காலை யில் உப்புமா, மதியம் காரச் சாம்பார் என்று நாட்கள் நகர்ந்தன. திமுக தலைவர்கள் உணவருந்த முடியா மல் பெரிதும் சிரமப்பட்டனர்.  

டி.ஆர்.சுப்ரமணியம் ஆலோசனை  

அப்போது ஸ்ரீவைகுண்டம் தோழர் டி.ஆர்.சுப்ர மணியம் சிறையில் இருந்தார். சிறைவாசிகளுக்கான உணவுப் பொருட்களை ஸ்டோரிலிருந்து வாங்கி வந்து  நாமே சமைக்கலாம் என்று ஆலோசனை கூறினார். தாழை கருணாநிதி மிசா சிறைவாசிகளின் தலைவ ராக தேர்வு செய்யப்பட்டார். விறகு மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி வரும் பொறுப்பை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் என்.மணியன் ஏற்றுக் கொண்டார். சமையல் பொறுப்பை தோழர் டி.ஆர்.சுப்ரமணியம் நேரடியாகக் கவனித்தார். அவரது மேற்பார்வையில் சாம்பார், ரசம், கூட்டுப் பொரியல் தயாரானது. பல நாட்களுக்கு பிறகு மிசா சிறைவாசிகள் அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தனர்.  அதன் பிறகு தோழர் டி.ஆர்.சுப்ரமணி யத்தை திமுக தலைவர்கள் சந்தித்து முக மலர்ச்சி யுடன் நன்றி கூறினர். தோழர் டி.ஆர்.சுப்ர மணியம் இடுப்பில் வேட்டியும், தோளில் ஒரு துண்டும்  மட்டுமே அணிந்திருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பெல்லாரி (ஆந்திரா) சிறை முதல் பல சிறைச்சாலைகளை கண்ட மாபெரும் தேச  பக்தர் அவர் என்பதை திமுக தலைவர்கள் அறிந்து வியந்தனர். பிறகு அவர் பாளையங்கோட்டை சிறை க்கு மாறுதலாகிச் சென்றார்.

தலைவரே என்றழைத்த அனந்தநம்பியார்  

தோழர் என்.வெங்கடாசலம் காலை எழுந்தவுடன் தினசரி முகச் சவரம் செய்து கொள்வார். வெள்ளைச் சட்டை வேட்டியுடன் காலையிலே சிறை வளாகத்தை சுற்றி வருவார். திமுக தலைவர்கள் பலரையும் சந்தித்து நலம் விசாரிப்பார். தஞ்சை மாவட்ட திமுக தலைவர்க ளிடம் அவருக்கு இருந்த நெருங்கிய பழக்கத்தை அப்போது காண முடிந்தது.  ஒருநாள் நடந்து வரும் போது கே.அனந்த நம்பி யார் என்.வி.யை பார்த்து ‘தலைவரே’ என்று அழைத் தார். பிறகு என்.வி.யிடம் அதைப்பற்றி கேட்டேன். கடலூர் சிறையில் பாதுகாப்புச்  சட்டத்தில் கைதியாக இருந்தபோது, என்.வி. வெண்டயம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அதனால் கடலூர் சிறையில் அவருக்கு ‘தலைவர்’ என்ற புகழாரம் சூட்டப் பட்டது. அதை நினைவில் வைத்துதான் அனந்த நம்பியார் என்.வி.யை தலைவரே என்று அன்போடு அழைத்தார்.  வாரந்தோறும் சிறைவாசிகளை ஐ.ஜி., சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்திக்கும் பழக்கம் இருந்தது. அப்போது கோ.பாரதிமோகன், அனந்தநம்பியார், என்.வெங்கடாசலம் ஆகியோர் சிறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதி காரிகளிடம் நீண்ட நேரம் பேசுவார்கள். பாதுகாப்பு சிறைவாசிகளுக்கான சலுகைகளை வரிசையாக சுட்டிக்காட்டி அவற்றை பெற்றுத்தருவதில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பெரும் பங்காற்றினர்.

 மகிழ்ச்சியும் கொதிப்பும்  

சில நாட்களில் சிறை வாழ்க்கையோடு திமுக தலைவர்களும் பழகிவிட்டனர். நன்னிலம் நடராஜன் நகைச்சுவை பேச்சாளர். குளிப்பதற்கு அவருக்கு சுடு தண்ணீர் தேவைப்பட்டது. கையில் மண்குடத்தை எடுத்தார். மூன்று செங்கல்களை வைத்து அடுப்பை உருவாக்கினார். வேப்ப மரத்து குச்சிகளை சேகரித்தார். “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன், சுள்ளி பொறுக்க வைத்தானடி” என்று அவர் பாடியதைக் கேட்டு தோழர் என்.வி. சிரித்து விட்டார்.  மிசா சிறைக் காலத்தில் உச்சநீதிமன்ற உத்தர வின் பேரில், கீழ வெண்மணியில் நெருப்பிட்ட கொடூரன் கோபால கிருஷ்ண நாயுடு கைதாகி சிறைக்கு வர நேரிட்டது. சாதாரண வகுப்பில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு மிசா சிறைப்பகுதியில் இருந்து ரகசியமாக உணவு கொண்டு செல்லப்பட்டது. இதனை அறிந்த என்.வெங்கடாசலம் கொதித்தெழுந்தார். கையில் ஒரு குச்சியுடன் சிறை வளாகத்தை சுற்றி வந்து, “அந்த  நாய்க்கு உணவு கொடுத்து அனுப்பியது யார்” என்று குரல் எழுப்பி கர்ஜித்தார். ஜெயிலர் தலைமையில் காவலர்கள் கூட்டமாக வந்து விசில் ஊதி அனைவரும் செல்லுக்கு செல்லுமாறு அமைதிப்படுத்தினர்.  முகத்தில் புன்னகை தவழும் என்.வி., அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் காட்சியை அன்று நான் நேரில் கண்டு வியந்தேன். அவரோடு தஞ்சைப்  பகுதியில் பல கூட்டங்களில் பேசும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கூட்டங்களில் அதிகார வர்க்கத்தையும் சாதி ஆதிக்க சக்திகளையும் எதிர்த்து ஆவேசத்துடன் முழங்குவார். கிராமங்களுக்கு பொதுக்கூட்டங்களுக்குச் செல்ல அப்போது வாகன வசதிகள் இல்லை. பூதலூர் பகுதி தோழர்கள் சைக்கிளில் வந்து தோழர் என்.வி அவர்க ளையும் என்னையும் அழைத்துச் செல்வார்கள். தனது போராட்ட அனுபவங்களையும் பொதுக்கூட்ட நிகழ்வு களையும் சிறையில் இருந்த போது என்னோடு அவர் பகிர்ந்து கொள்வார். புதுக்கோட்டை மாவட்டம் காவேரி மில் பகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில் என்.வி பங்கேற்றார்.  

நெற்றியில் துப்பாக்கி  கலங்காது கர்ஜனை  

பொதுக்கூட்டத்தை விளக்கி தோழர்கள் சைக்கிள் பிரச்சாரத்திற்கு சென்ற போது ஒரு கிராமத்தில் சைக்கிள்களை பறித்து கிணற்றில் தூக்கிப் போட்ட னர். பொதுக்கூட்டத்தில் தோழர் என்.வி பேசும்போது, காவல்துறையிடம் புகார் அளித்த நிலையிலும் அதைக் கொண்டு கொள்ளாத போக்கை கடுமையாக விமர்சித்தார். அப்போது ஆத்திரம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் மேடை மீது ஏறி தோழர் என்.வி நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டினார். அப்போது என்வி  “இதோ நிற்கிறானே, இவன் ஒரு ரவுடி” என்று கர்ஜித்தார்.   இதனைகேட்டு அதிர்ந்து போன சப் இன்ஸ் பெக்டர் அங்கிருந்து சென்று விட்டார். இத்தகைய அசாத்திய துணிச்சலை தோழர் என்.வியிடம் மட்டுமே காணமுடியும். சிறைக்கு வருவதற்கு முன்னால் குடவாசலில் வாலிபர் சங்க மாநாடு எழுச்சியுடன் நடை பெற்றது. அதில் மன்னார்குடி வழக்கறிஞர் ரெங்கன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நானும் அந்த பட்டிமன்றத்தில் பங்கேற்றேன். பட்டிமன்றத்தில் ஆணித்தரமான வாதங்களை அவர் முன்வைத்த போது கூட்டத்தில் ஆரவாரம் எழுந்தது.பொது வாழ்வில் இப்படி பன்முகத்தன்மையுடன் அவர் மிளிர்ந்தார்.

 கடைசி சந்திப்பு  

1977 ஆம்  ஆண்டு நடுப்பகுதியில் தஞ்சை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.நடராஜன் இல்ல திரு மணத்தில் தோழர் என்.வியுடன் நானும் கலந்து கொண்டேன். அவரிடம் இருந்து விடைபெறும் போது, விரைவில் பொன்மலை வருகிறேன். அவசர நிலை கால கொடுமைகள் பற்றி மனு தயார் செய்ய வேண்டும்.  நீதிபதி ஷா தலைமையில் அமைக்கப்பட்ட கமிசனுக்கு அனுப்ப வேண்டும் என கூறினார். நான் அவரை கடைசியாக சந்தித்தது அப்போதுதான்.  செப் 22 ஆம் தேதி தஞ்சை தோழர்கள் பொன் மலை சங்க திடலுக்கு வந்தனர். அப்போது கே.அனந்த நம்பியார் சங்க அலுவலகத்தில் இருந்தார். வந்த தோழர்களின்  முக வாட்டத்தைக் கண்ட  தோழர் நம்பி யார் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என யூகித்துக் கொண்டார். மறுநிமிடமே நம்பியார் பொன்மலையில் இருந்து புறப்பட்டார். ரயில் மூலம் சோழகம்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கினார்.  

என்.வி. வீட்டில் நம்பியார்  

நானும் அவருடன் சென்றிருந்தேன். ரயில் நிலை யம் முழுதும் தோழர்கள் கலங்கிய கண்களுடன் நிற்பதை நம்பியார் கண்டார். ராயமுண்டான்பட்டி என்.வி., வீட்டுக்கு சென்று விவரங்களை கேட்ட றிந்தார். ஒரு சைக்கிளில் பின் சீட்டில் தோழர் நம்பி யார் அமர்ந்து கொண்டு திருச்சி-தஞ்சை நெடுஞ் சாலைக்கு வந்து சேர்ந்தார். தஞ்சாவூரில் காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்தார். தோழர் என்.வி கடத்தப்பட்டிருக்கலாம் என்றும்  அதில் சம்பந்தப் பட்ட எதிரி யார் என்பதை பெயர் குறிப்பிட்டு உரிய முறையில் உடனடியாக விசாரிக்குமாறும் கூறினார். அப்படியெல்லாம் விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று பொறுப்பின்றி அந்த அதிகாரி கூறினார். “உன் மகளுக்கோ அல்லது உன் மனைவிக்கோ இத்தகைய நிலை ஏற்பட்டு இருந்தால் இப்படி கூறுவீர்களா?” என்று நம்பியார் கர்ஜித்தார். நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நெடும் போராட்டம் நடந்தது. தஞ்சையில் நடைபெற்ற மாபெரும் பொ துக்கூட்டத்தில் என்.வி.,யை கடத்திய நபர்களை கைது செய்யக்கோரி தோழர் ஆர்.உமாநாத் இடிமுழக்கம் செய்தார்.    தொண்டால் பொழுதளந்த தோழர் என்.வி., முகத்தில் என்றுமே வாட்டத்தை கண்டதில்லை. பிரச்ச னைகளில் வாடி நிற்கும் மக்களை தட்டிக்கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்துவார். ஒரு நாள் பொது கூட்டம் முடிந்து தஞ்சையில் ஒரு விடுதியில் தங்கி இருந்தோம். விடிந்ததும்  எல்ஐசி யில் பணியாற்றி வந்த  தோழர் என்.சீனிவாசன் அறைக்கு வந்து சேர்ந்தார். கைப்பையை திறந்து சிறிது பணத்தை என்.வி-இடம் கொடுத்தார். அதில் இருந்து எனக்கு பயணப்படி தரப் பட்டது. தஞ்சையில் தோழர் என்.வி. அவர்களின் வலது கரமாக செயல்பட்ட தோழர் என்.சீனிவாசன் அவர்க ளோடு தீக்கதிரிலும் நீண்ட நாட்கள் இணைந்து பணி யாற்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.  கம்யூனிஸ்ட் பேரியக்கம் ஒளிபொங்கும் வைகறை. மனிதகுலத்திற்கு புத்தொளி காட்டும் பாசறை. தஞ்சை நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தெலுங்கானா போராட்ட வீரர் தோழர் எம்.பசவ புன்னையா “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, அதைத்தான் நாங்கள் செய்கிறோம்” என்று கூறினார். தோழர் என்.வெங்கடாசலத்தின் போராட்ட நினைவலைகள் தோழர்கள் நெஞ்சில் என்றும் சுடரொளி வீசிக்கொண்டிருக்கும். தோழர் என். வெங்க டாசலம் அவர்களின் தோழமையும் துணிவும் எளிமை யும் நேர்மையும் என்றும் நிலைத்து நிற்கும்.