articles

img

ஏகாதிபத்திய எதிர்ப்பின் முன்னணிப்படை - கியூபா - செ.முத்துக்கண்ணன்

ஏகாதிபத்திய எதிர்ப்பின் முன்னணிப்படை - கியூபா

“உண்மையான மனிதர் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டார். மாறாக, கடமையிருக்கும் பாதையைத் தான் தேடுவார். அவர்தான் செயல்திறனுள்ள மனிதர்; அவரது இன்றைய கனவுகள்தான் நாளைய நீதி களாக மாறும், ஏனெனில் அவர் வரலாற்றின் முக்கிய நடப்புகளை அறியப் பின்னோக்கிப் பார்க்கிறார்” என்ற ஜோஸ் மார்ட்டியின் வார்த்தைகளில் தட்டியெழுப் பப்பட்டது கியூபா விடுதலை இயக்கமும், புரட்சிகர உணர்வும். இதுபோன்ற உயர்ந்த குறிக்கோளே இளை ஞர்களை தூண்டியது என்பதை உணரும்போதுதான், சாண்டியாகோவில் வீழ்ந்த இளைஞர்களின் வீர உணர்வை நம்மால் உணர முடியும்.

கொடுங்கோலன் பாடிஸ்டா

அமெரிக்க பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் லத்தீன் அமெரிக்காவின் வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தது. பயிர் செய்யப் படாத ஒரு துண்டு நிலம் இருக்கும் போது பசியுடன் பல ஆயிரக்கணக்கானவர்கள் இரவு தூங்கச் செல்வது கொடுமையிலும் கொடுமை. போதுமான உணவோ,  சுகாதாரமோ இல்லாத நிலையில், இது என்னவென்று அறியாத நிலையில் 90 சதவீதம் பேரும், தனது பெய ரைக்கூட எழுதத் தெரியாத நிலையில் 80 சதவீதம் மக்களும் கொண்ட தேசமாக கியூபாவும் அன்றைய தென் அமெரிக்காவின் பூர்வகுடி கிராமங்களும்  இருந்தன. கொலம்பஸ் கண்ட அமெரிக்கா, நாகரிகத்தின் அடையாளம் என உலகம் தூக்கிக் கொண்டாடுவது, செவ்விந்திய பூர்வகுடிகளின் இரத்தத்தில், உழைப்பில் உருவாக்கப்பட்ட உலகம் என்பதை மேற்கத்திய ஊடகங்கள் மறைத்தே வந்துள்ளன. இச்சூழலில் அமெ ரிக்காவின் அடிமை பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆட்சியில் கியூப மக்களின் துன்ப துயரங்களை மார்ட்டி யின் வழியில் நின்று தூக்கி எறிய தூண்டப்பட்ட இயக்கமே ஜூலை 26இல் உருவான பாடிஸ்டாவிற்கு எதிரான போராட்டம்.

ஜூலை 26 இயக்கம்

பிடல் காஸ்ட்ரோ தலைமையில் மன்கடா ராணுவ முகாமுள்ள சாண்டியாகோ நோக்கி ஆயுதந்தாங்கிய புரட்சியை நடத்த ஜூலை 26ஆம் தேதியை தீர்மா னித்தார். காரணம் ஜோஸ் மார்ட்டி தனது முதல் சுதந்தி ரப்போராட்டத்தை தொடங்கிய நாள் ஜூலை 26 ஆகும். அதிகாலை 5 மணிக்கு பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் வீரர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்: “நாம் சண்டையிடும் போது பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. அவசியமில்லாமல் பொது சொத்துகளை நாசப்படுத்தக்கூடாது, சரணடையும் வீரர்களை சுடக்கூடாது, கைது செய்யப்படும் வீரர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும், காயம் பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டும்.” போரில் அவர் காட்டிய அறமே இன்றும் கியூப மக்களை வழிநடத்துகிறது. 123 வீரர்கள் பிடலின் தலைமையில் அணிவகுத்தனர். ஜூலை 29ஆம் தேதி இது தோற்கடிக்கப்பட்டு பிடல் உட்பட கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் பிடல்

“வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற புகழ் பெற்ற உரையை நீதிமன்ற விசாரணையின் போது நிகழ்த்தினார் பிடல் காஸ்ட்ரோ. சித்ரவதைகளின் போது ஆண்களின் வீரத்தை கண்டு சலித்துப்போன பாடிஸ்டாவின் ராணுவ வீரர்கள், பெண்களின் தீரமிக்க உறுதியை குலைக்க முயற்சி செய்தார்கள். இரத்தம் தோய்ந்த கண்ணை எடுத்து ஒரு பெண்ணி டம் காட்டி “இது உனது சகோதரனின் கண்” என  சொன்ன போது, சகோதரியோ “நீங்கள் ஒரு கண்ணை  பிடுங்கி எடுத்த பின்னும் அவன் பேச மறுத்த போதும் நான் மட்டும் பேசுவேனா?” என பதிலுரைத்தார். “என் காதலன் சாகவில்லை, ஏனெனில் தனது நாட்டிற்காக உயிரை விடுவதென்பது எப்போதும் வாழ்வதற்கு சம மானது” என்று ஒரு பெண் கூறினார்.

புரட்சியின் வெற்றி

1958 டிசம்பர் திங்களின் கடைசிநாட்களில் பாடிஸ்டா தனது மாளிகை பொருட்களோடு தங்கம், பணத்தை கடத்திக்கொண்டு ஓடிவிட்டான். 1959 ஜனவரி துவக்கநாளில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய பிடல், ராணுவ சதியால் செய்யப் படும் மாற்றங்களை ஏற்க இயலாது, புரட்சியின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்படும் என அறிவித்து, ஹவா னாவை கைப்பற்ற சேகுவேராவுக்கு உத்தரவிட்டார். புரட்சி வெற்றி பெற்றது மக்களின் பேராதரவோடு. புரட்சி வெற்றியடைந்த போது அங்கிருந்த நிலை  குறித்து பிடல் கூறுகிறார்: வேலை செய்யத் தயாராக இருந்த சுமார் 60,000 கியூபர்கள் வேலையின்றி இருந்தனர். 30 லட்சம் பேருக்கு மேல் மின்வசதி இல்லை. 35 லட்சம் பேர் சேரிகளில் வசித்தனர். 70%  கிராமப்புறக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை, 37% கல்வியறிவற்றவர்களாக, 2 சதவீதத்தினர் காச நோயால் துன்புற்றனர், 95 சதவீதக் குழந்தைகள் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 46 சதவீத நிலத்தை மொத்த நிலவுடைமையாளர்களில் 15 சத வீதத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

புரட்சிகர அரசின்  முன்னுரிமைத்திட்டம்

புரட்சி அரசு தனது முதல் நடவடிக்கையாக வீட்டு  வாடகையை 50 சதவீதம் குறைத்தது. இரண்டாவ தாக அமெரிக்க ஏகபோகத்துக்குச் சொந்தமான ஒரு தொலைபேசி நிறுவனத்துக்கு பாடிஸ்டா அளித்திருந்த சலுகையை ரத்து செய்தது. மூன்றாவது நடவடிக்கை மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தது. மக்களுக்கு மிகவும் தேவையான நிலச்சீர்திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டது. 2 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அமெ ரிக்க ஏகபோகங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. விவசாய சீர்திருத்தம் அதை 40 ஹெக்டேர்களாகக் குறைத்தது. இதனால் நிலமற்ற 2 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு மேல் நிலம் விநியோகிக்கப்பட்டது.

மருத்துவத்துறையில்  உலக சாதனை

பாடிஸ்டாவை விரட்டி புரட்சியின் மூலம் புதிய கியூபா அமைக்கப்பட்ட ஓராண்டிற்குள் மருத்து வத்தை அனைவருக்குமானதாக மாற்ற அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1960 ஆம் ஆண்டில் இருந்தே இதர நாடுகளுக்கான உதவியை செய்திட துவங்கிவிட்டது. 1960இல் சிலியின் பூகம்பப் பாதிப் பிற்கான மருத்துவ உதவியும் 1963இல் அல்ஜீரியா விற்கும் உதவிகள் என செய்தது. 1960 களில் இருந்து ஆப்பிரிக்காவின் 39 நாடுகளில் கியூபாவின் 79000 மருத்துவ வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். உலகம் முழுவதும் 164 நாடுகளில் 4 லட்சம் கியூபா வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். கியூபாவின் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ 1999இல் லத்தின் அமெரிக்காவிற்கான மருத்துவப் பயிற்சி மையத்தினை கியூபாவில் துவங்கினார். 1959 முதல் பொருளாதாரத் தடையை விதித்து கியூபாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என துடித்து வரும் அமெரிக்கா உள்ளிட்டு 105 நாடுகளைச் சேர்ந்த 29000 பேர் கியூபப் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு  மருத்துவர்களாக படித்து பட்டம் பெற்று வெளிவந்த னர். இதில் பாதி பேர் பெண்கள், 75 சதவீதம் பேர் அந்த நாடுகளின் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள், 100 பழங்குடியின பிரிவினர்கள் வீட்டுக் குழந்தைகள் ஆவர்.

மானுடகுல காதலர்கள் நாங்கள்

பிடலின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “புரட்சி காரர்களும், சோசலிசவாதிகளும், மார்க்சிய-லெனி னியவாதிகளுமாகிய நாங்கள் பகைமையை ஒரு கோட்பாடாக கற்பிப்பதில்லை. ஏகாதிபத்தியத்தின் எல்லா கொடுஞ்செயல்களாலும் நாங்கள் பாதிக்கப் பட்டோம். ஆனாலும் ஒரு அமெரிக்கர் இந்த நாட்டுக்கு வருகிறார் என்றால் அவரை இங்கே ஒவ்வொருவரும் மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஏனென்றால் நாங்கள் அமெரிக்க மக்களை வெறுக்கவில்லை. நாங்கள் ஏற்க மறுப்பதும், வெறுப்பதும் அந்த அமைப்பு முறையைத்தான்.” எனவே உலகிற்கு உரக்கச் சொல்லும் தருண மிது. ஒரு கடலின் அலைகள் நாம், ஒரு தோட்டத்தின் மரங்கள் நாம், ஒரு மரத்தின் பூக்கள் நாம் என்று சர்வதேசியம் சொல்லும் சோசலிசத்தின் புதல்வர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். பூமிப்பந்தில் உள்ள உயிர்களின் மீது பேரன்பு கொண்டுள்ளோம்.