articles

img

மரம் வேறு, கனி வேறு அல்ல! - மதுரை சொக்கன்

மரம் வேறு, கனி வேறு அல்ல! 

நூறாண்டுகளைத் தாண்டி நிறை வாழ்வு வாழ்ந்த அன்புத் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்களது மறைவினால் கட்சித் தோழர்கள் அனைவரும் கலங்கி நிற்கிறார்கள். அவருடைய இறுதி நிகழ்ச்சி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்வாக மாறியுள்ளது. வான்மழை ஒரு புறம் பொழிய, தோழர்களும், கேரளத்தின் அனைத்துப் பகுதி மக்களும் தங்கள் கண்ணீ ரால், தங்களுடைய அன்புத் தலைவரின் மீது இருந்த அளவிட இயலா அன்பு மழை பொழிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவதூறு செய்வதையே தங்கள் ஆயுட்காலப் பணியாக கொண்ட சில முதலாளித்துவ ஊடகங்களும்கூட தோழர் வி.எஸ். இறுதி ஊர்வலத்தை 24 மணிநேரமும் நேரலையாக ஒளிபரப்பின.

ஒட்டுமொத்த கேரளமும் விழிநீர் வழிய, வீதியில் நின்றதால் ஏற்பட்ட அழுத்தம் இது.  தினமணி ஏடு 24.7.2025 அன்று, “போரா ளிக்குப் பிரியாவிடை” என்ற தலைப்பில் தலை யங்கம் ஒன்றை எழுதியுள்ளது. இரங்கல் தெரிவித்து எழுதப்படுகிற எழுத்துக்களி லும்கூட வடிகட்டப்படாத வன்மத்தை இறக்கி வைக்க முடியும் என்பதற்கு இந்த தலையங்கம் ஓர் எடுத்துக்காட்டு. இந்த தலையங்கத்தின் பல வரிகள் தோழர் வி.அச்சுதானந்தனின் தன்னலமற்ற, தன்னிகரற்ற வாழ்வை புகழ்ந்துரைக்கிறது.  ஆனால் தலையங்கத்தில் முதல் பாராவிலேயே, “தோழர் வி.அச்சுதானந்தன் போன்றவர்கள் பாடுபட்டு வளர்த்த இயக்கம் பழைய வீரியத்தை இழந்து நிற்கிறது” என்று வருத்தப்படுவது போல வன்மம் காட்டுகிறது. தோழர் வி.எஸ். போன்றவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம் வீரியத்தை இழந்து விடவில்லை என்பதற்கு அவரது இறுதி ஊர்வலமே சாட்சி. கூடி வந்த தோழர்கள் முஷ்டி உயர்த்தி உங்கள் வழியில் எங்கள் பயணம் என்றும் தொடரும் என்று முழக்க மிட்டனர். செங்கொடி இயக்கம் ஓரிரு மாநி லங்களில் மட்டும் அறியப்படும் இயக்கமாக குறுகி நிற்கிறது என்று தினமணி வருத்தப்பட்டு பாரம் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அறிதல் என்பது அதிகாரத்தில் மட்டுமில்லை; போராட்ட வேர்களிலும் இருக்கிறது.  தோழர் வி.அச்சுதானந்தன் குறித்து எழுதுகிற தினமணி உள்ளிட்ட சில ஊடகங்கள் அவர் கட்சியினால் புறக்கணிக்கப்பட்டதைப் போல சித்தரித்து தங்களது சில்லரைத் தனத்தை காட்டிக் கொள்கின்றன. தோழர் வி.எஸ். அவர்களது பயணம் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் அவரும் ஒருவர். அவர், தனது கடைசி மூச்சுவரை கட்டுப்பாடு மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாகவே இருந்தார்.  தினமணி தலையங்கத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு துவங்கி, மாநி லச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர்,

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை அவர் உயர்ந்தது குறித்தும், 14 ஆண்டுகள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் ஒரு முறை மாநில முதல்வராகவும், இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப் பாளராகவும் பணியாற்றியது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்புகள் அனைத்தையும் அவருக்கு வழங்கியது அவர் சார்ந்திருந்த கட்சிதான். இப்போது, தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனை புகழ்வது போல காட்டிக் கொண்டு, கட்சியை இகழ்ந்து எழுதுகிற பல ஏடுகள் அப்போது தோழர் வி.எஸ். அவர்களுக்கு புகழ் மாலை சூட்ட வில்லை. மாறாக, அழுக்குகளையும் அவதூறு களையும் அள்ளி வீசவே செய்தனர். ஆனால் அவர், தன்னுடைய இடக்கையால் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, கம்பீரமாக பயணித்தார்.  தன்னுடைய 92 ஆவது வயதில் 3,200 கிலோ மீட்டர் பயணித்து, 150 பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றியதை தினமணி ஏடு வியந்து பேசுகிறது. அந்தப் பயணத்தில் அவரை வழிநடத்தியது அவர் ஏற்றுக்கொண்ட லட்சியம்தான். ஏதோ சில பதவிகளுக்காக அவர் பயணித்தவர் அல்ல. இவ்வாறு சித்தரிப்பது, அவரது போராட்ட வாழ்வை கொச்சைப்படுத்துவது ஆகும்.  தினமணி ஏடு குறிப்பிட்டிருப்பது போல, அவரது கால்களை வழிநடத்தியது கட்சிப் பற்றேயன்றி, பதவிப் பித்து அல்ல. அவர் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள், தனிப்பட்ட நலன்களுக்காக உழைத்தவர்கள் அல்ல. ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.   இளம் வயதிலேயே தாய், தந்தையரை இழந்த அவர், கட்சியின் குழந்தை. இயக்கத்தின் கதகதப்பில் வளர்ந்தவர் அவர். அவருடைய எளிமையும், போராட்ட வலிமையும் கட்சி அவருக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள். அவர் கட்சியின் பக்கம் நின்றதைவிட, மக்களின் பக்கமே நின்றார் என்று எழுதிப் பார்ப்பதில் சிலர் பரம சுகம் காண்கிறார்கள். ஆம். அவர் மக்கள் பக்கம்தான் நின்றார். ஏனெனில், கட்சி எப்போதும் மக்களின் பக்கமே நின்றது.  கம்யூனிஸ்ட் கட்சி உச்சபட்ச ஜனநாய கத்தை உச்சி மேல் வைத்து போற்றுகிற கட்சி. விரிவான விவாதங்களுக்குப் பிறகு, ஒன்றுபட்ட முடிவை எடுப்பதும், அதை ஒரே திசையில் நின்று நடைமுறைப்படுத்துவதும் கம்யூனிஸ்டுகளுக்கே உரிய கட்டுப்பாடு மிக்க பண்பாகும். ஆனால், கட்சிக்குள் நடந்ததாக கட்டிவிடப்பட்ட கதைகளுக்கு தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் பொறுப்பேற்க முடியாது.  தோழர் வி.எஸ். ஒரு வேலி தாண்டிய வெள்ளாடு என்று சொல்வதன் மூலம் அவர்  வளர்த்த இயக்கத்தை வேட்டையாட முயல்கின்றனர் சிலர். இந்தியா முழு வதும் கிளை பரப்பி நின்ற தோழர் வி.எஸ்.அச்சு தானந்தன் என்ற ஆலமரத்தின் வேர் கட்சி என்ற நிலத்திலேயே எப்போதும் வேர் கொண்டு நின்றது என்பதை அறிந்தவர் அறிவர். “அவரை விமர்சித்தவர்கள், இறுதிச்  சடங்கில் கலந்து கொண்டு பூ வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தும் போலித் தனத்தை அவர் பார்த்திருக்க வேண்டும், அவருக்கே உரித்தான ஏளனப் புன்ன கையை புரிந்திருப்பார்” என்று எழுதிக் காட்டு கிறது தினமணி. ஒருவேளை, தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன்

இந்த தலையங்கத்தைப் படித்திருந்தால், ஏளனப் புன்னகைதான் புரிந்திருப்பார். அவர் உயிரோடு இருந்த காலத்தில் எத்தனை பூமாலைகளை கட்டிப் போட்டு பாராட்டியது தினமணி போன்ற ஏடுகள்?  விமர்சனம், சுயவிமர்சனம் என்பது கம்யூ னிஸ்டுகளுக்கே உரிய அறப்பண்பு. ஆனால், கம்யூனிஸ்டுகள் மீது கல்லெறிவதையே நோக்கமாகக் கொண்ட சிலர் இப்போது, தோழர் அச்சுதானந்தனுக்கு வைக்கும் மலர் வளையத்தில் தங்களது வர்க்க வக்கி ரத்தை சேர்த்துக் கட்டியிருப்பதை தோழர் அச்சுதானந்தன் பார்த்திருந்தால், ஏளன மாகத்தான் புன்னகைத்து கடந்திருப்பார்.  தினமணி தலையங்கத்தின் கடைசி வரிகளில், “மார்க்சிஸ்ட் கட்சியை கட்டிய மைத்த 32 மத்தியக் குழு உறுப்பினர்களில் எஞ்சியிருந்தவர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்.

இப்போது அவரும் மறைந்துவிட்டார். அவருடன் 60 ஆண்டுக் கனவும்...” என்று முடிகிறது. அவர் கண்டது  ஒரு தனிமனிதனின் கனவல்ல; கம்யூ னிஸ்ட்டுகளின் கூட்டுக் கனவு. அவர் தன்னு டைய கனவை பூமி வெளியெங்கும் விதைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பதற்கு வெடித்து விம்மி அழுத மக்களே சாட்சி. தோழர் வி.எஸ். போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மண்ணிலும், மக்கள் மனங்களிலும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. கனியை புகழ்வது போல, கனி தந்த மரத்தின் வேரை வெட்ட முயல்கின்றனர் சிலர். விஷ மரத்தில் ஒரு போதும் நற்கனி கள் விளைவதில்லை. தோழர் வி.எஸ்.அச்சு தானந்தன் பொதுவுடமை இயக்கம் என்ற விருட்சத்தில் விளைந்து கனிந்த கனி. மரம் வேறு; கனி வேறு அல்ல! அந்தந்த மரம் அதன் கனிகளால் அறியப்படும் என்கிறது விவிலியம்.