மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் முடக்கம் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்
ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி, இந்திய கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை’ (MGNREGA) சிதைத்துள்ளது. அதற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டமானது, உழைக்கும் மக்களின் உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கும் ஒரு “அதிகாரச் சூறையாடல்” (Adhikar Chori) ஆகும். இது வெறும் நிர்வாக ரீதியிலான மாற்றம் மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமூக நீதி மற்றும் பொருளாதார ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அரசியலமைப்புப் பின்னணியும் இடதுசாரிகளின் போராட்டமும் அரசியலமைப்பின் 41-ஆவது பிரிவு, “அரசு தனது பொருளாதாரத் திறனுக்கு உட்பட்டு வேலைக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்” என்று வழிகாட்டு நெறிமுறைகளில் (Directive Principles) கூறுகிறது. சுதந்தி ரத்திற்குப் பின், வேலைக்கான உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்ற சோசலிச சிந்தனை கொண்டவர்களுக்கும், அதை எதிர்த்த முதலாளித்துவ ஆதரவாளர் களுக்கும் இடையே கடும் விவாதம் நிலவியது. இறுதியாக இது வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்க்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இதனை நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களுக் கான “அறிவுறுத்தல் கருவி” என்றும், பொருளா தார ஜனநாயகத்திற்கு அவசியமானது என்றும் விவரித்தார். ஐந்து தசாப்த கால போராட்டங்களுக்குப் பிறகு, 2004-இல் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரிகள் அளித்த தொடர் அழுத்தத்தினால் 2005-இல் இச்சட்டம் உருவானது. இது ஒரு அரசு வழங்கும் தர்மம் அல்ல; மாறாக, குடிமக்கள் கோரும்போது வேலை வழங்க வேண்டியது அரசின் சட்டப்பூர்வக் கடமை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமையை நிலைநாட்டியது. மக்களின் உயிர்நாடியைச் சிதைக்கும் புதிய சட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் உயிர்ப்பாக விளங்கியது அதன் “தேவை அடிப்படையிலான” (Demand-driven) என்ற தன்மையாகும். அதாவது, ஒரு கிராமத்து தொழிலாளி வேலை கேட்டால் 15 நாட்களுக்குள் அரசு வேலை வழங்க வேண்டும். ஆனால், மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தில் இந்த உரிமை நீக்கப்பட்டு, ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் “நிதி ஒதுக்கீடு” (Normative financial allocations) அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என மாற்றப்பட்டுள்ளது. இதன் பொருள், அரசு ஒதுக்கிய நிதி தீர்ந்துவிட்டால், தொழிலாளி வேலை கோரினாலும் வழங்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை ஒன்றிய அரசுக்கு இருக்காது என்பதாகும். மேலும், இதுவரை 100 சதவீத ஊதியச் செலவை ஏற்ற ஒன்றிய அரசு, இனி 40 சத வீதச் செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் எனப் புதிய நிபந்தனையை விதித்துள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் மாநிலங்களுக்கு இது பெரும் சுமையாகும். இது மாநில உரிமைகளைப் பறிக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான தாக்குதலாகும். 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்துவதாகக் கூறு வது, நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டுச் செய்யப்படும் ஒரு வெற்று நாடகமே தவிர வேறில்லை. வர்க்கப் பாரபட்சமும் விளிம்புநிலை மக்களின் பாதிப்பும் புதிய சட்டத்தில், விவசாய வேலைகள் அதிகம் உள்ள காலங்களில் (Peak Season) வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கூடாது என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான வர்க்கப் பாரபட்சமாகும். விவசாய வேலைகள் இல்லாத காலங்களில் அல்லது குறைந்த கூலி வழங்கப்படும்போது மட்டுமே தொழிலாளர்கள் வேலை உறுதிச் சட்டத்தை நாடுகின்றனர். இந்தத் தடையால், ஏழைத் தொழிலாளர்கள் பெரிய நிலப்பிரபுக்கள் நிர்ணயிக்கும் மிகக்குறைந்த கூலிக்கு அடிமைப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது குறிப்பாகப் பெண் தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியைச் சிதைக்கும். மேலும், புதிய சட்டத்தில் குறைதீர்க்கும் மற்றும் ஆலோசனைக் குழுக்களிலிருந்து உழைக்கும் மக்களின் பிரதிநிதித்துவம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, இத்திட்டத்தின் கீழ் பணி யாற்றுபவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிக மானோர் பெண்கள். மேலும், 18 சதவீதத்தினர் பழங்குடியினர் மற்றும் 19 சதவீதத்தினர் பட்டியலினத்தவர். இச்சமூகப் பிரிவினர் அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். 2024-25 நிதியாண்டில் மட்டும் வேலை கோரிய 8.9 கோடி பேரில் 99 லட்சம் பேருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. ஊதிய நிலுவை 8,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 50 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம். கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளையும் கடன் தள்ளுபடிகளையும் வாரி வழங்கும் மோடி அரசு, ஏழைகளின் இந்த உயிர்நாடியை அறுப்பது கண்டிக்கத்தக்கது. ‘ஜி-ராம்-ஜி’ (G-Ram-G) என்ற பெயரில் மத உணர்வுகளைப் பயன்படுத்தி இந்த அநீதியை மறைக்கப் பார்ப்பது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். இந்த தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணி யில் திரள வேண்டியது இன்றைய அவசியமாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் (டிச. 21) வெளியான கட்டுரையின் பகுதிகள்
