articles

img

வங்கதேசம் எரிகிறது; ஆனால் மக்களின் மன உறுதி குலையவில்லை! - சாந்தனு டே

வங்கதேசம் எரிகிறது; ஆனால் மக்களின் மன உறுதி குலையவில்லை!

வங்கதேசம் தற்போது ஒரு இருண்ட காலத்தை நோக்கித் தள்ளப்பட்டுள் ளது. நாடு முழுவதும் வெறுப்பு அரசிய லும், மதவாதத் தீவிரவாதமும் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது. ஒரு பயங்கரமான சம்பவத்தைத் தொடர்ந்து மற்றொன்று எனத் திட்டமிடப்பட்ட வன் முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் முன் னெப்போதும் இல்லாத வேகத்தில் பரப்பப்படுவது டன், வங்கதேசம் முழுவதும் இந்தியா எதிர்ப்பு முழக்கங்கள் தீவிரமடைந்துள்ளன. மைமன்சிங்கில் தீபு தாஸ் என்ற இளம் ஆடைத் தொழிலாளி, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி ஒரு கும்பலால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் பொதுவெளியில் மரத்தில் தொங்கவிடப்பட்டு எரிக்கப்பட்டது. இது வெறும் தன்னிச்சையான வன்முறை அல்ல; சிறு பான்மையினரின் பாதுகாப்பு, கார்ப்பரேட் நிறுவ னங்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் மதவாத கும்பலிடம் அரசு மண்டியிட்டுள்ளது ஆகியவற்றின் பின்னணியில் நடந்த ஒரு காட்டுமிராண்டித்தனம். கலாச்சார நிறுவனங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் மதவாத சக்திகளின் கோரத்தாண்டவம் ஊட கங்கள் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது திரும்பியுள்ளது. வங்கதேசத்தின் முன்னணி நாளி தழ்களான ‘புரோதோம் ஆலோ’ (Prothom Alo)  மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) அலுவல கங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டன. கடந்த காலங்களில் ஜனநாயகப் போராட்டங்க ளுக்கு ஆதரவாக நின்ற இந்த ஊடகங்களுக்குத் தற்போது எவ்வித பாதுகாப்பும் இல்லை. ‘நியூ ஏஜ்’  பத்திரிகையின் ஆசிரியர் நூருல் கபீர் தாக்கப்பட்டார்; குல்னாவில் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். குறிப்பாக, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காசி நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் ‘சாயாநாட்’ (Chhayanaut) கலாச்சார நிறுவனம் எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆட்சியின் கீழ் தாகூரின் படைப்புகள் தடை செய்யப்பட்டிருந்த 1961-இல், பாகிஸ்தான் ராணுவ சர்வாதிகாரி அயூப் கானின் அச்சுறுத்தல்களை மீறி தாகூரின் நூற்றாண்டு விழாவை முன்னெடுத்த போதே இந்த நிறுவனம் பிறந்தது. இது வெறும் கட்டிடம் அல்ல; வங்காளப் பண்பாட்டின் உயிர்நாடி. தாகூரின் படங்க ளும் புத்தகங்களும் எரிக்கப்பட்டன; இசைக்கரு விகள் உடைக்கப்பட்டன. சோசலிசக் கொள்கைக ளால் ஈர்க்கப்பட்ட ‘உதிச்சி’ (Udichi) என்ற கலை அமைப்பும் தாக்குதலுக்கு உள்ளானது. 1999 மற்றும் 2001-இல் நடந்த குண்டுவெடிப்புகளால் பல உயிர்க ளைப் பலி கொடுத்த பின்னரும் ஓயாத இக்கலை ஞர்களின் குரலை, தற்போதைய வன்முறை கும்பல் ஒடுக்கப் பார்க்கிறது. இத்தாக்குதல்கள் ஒரு திட்டமிட்ட கலாச்சார அழிப்பு என்பதை ஜமாத் மாணவர் அமைப்பின் “இடதுசாரிகளையும், சாயாநாட்டையும் ஒழிப்போம்” என்ற கூச்சல் உறுதிப்படுத்துகிறது. மதவாத அச்சுறுத்தலும்  பாகிஸ்தான் தலையீடும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, அமைதி நிலவும் என்று உறுதியளித்த போதி லும், எதார்த்த நிலை கவலைக்கிடமாக உள்ளது. சூஃபி தர்காக்கள் மற்றும் பவுல் கலைஞர்களின் கூடாரங்கள் சிதைக்கப்படுகின்றன; கல்லறைகள் தோண் டப்பட்டு சடலங்கள் இழுத்து வரப்பட்டு எரிக்கப்படு கின்றன. ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்பு கள், தங்களுக்கு வெறும் 8 முதல் 10 சதவீத வாக்கு வங்கி மட்டுமே இருந்தபோதிலும், தற்போது ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நம்புகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஐந்து குழுக்கள் வங்கதேசத்திற்கு வந்து சென்றுள்ளன. பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகள் அங்கு நடமாடுவது இந்தியா வின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். வங்க தேசத்தின் தனித்துவமான அடையாளத்தை அழித்து,  அதனை ஒரு ‘வங்காளப் பாகிஸ்தானாக’ மாற்றும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. 1971 விடுதலைப் போரின் விழுமியங்கள் சிதைக்கப்பட்டு, வங்காள மொழி அடிப்படையிலான பண்பாடு ஓரங்கட்டப் படுகிறது. சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கு மற்றும் பத்திரிகை சுதந்திரம் டாக்கா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, வங்கதேசத்தில் தற்போது சுமார் 4,00,000 சட்டவிரோத ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டும் அரசியல் வன்முறைகளில் 281 பேர் கொல்லப்பட்டனர்; 7,689 பேர் காயமடைந்தனர். பத்திரிகை சுதந்திரம் முற்றிலுமாக நசுக்கப்பட்டுள்ளது. சுமார் 1,126 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அல்லது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். 2026 பிப்ரவரியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், சுவீடனின் ஃபோஜோ மீடியா இன்ஸ்டிடியூட் (Fojo Media Institute) அறிக்கையின்படி, 89 சதவீத பத்திரிகையாளர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுகின்றனர். இந்த மதவாத பயங்க ரம் வங்கதேசத்தை மட்டுமல்லாமல், எல்லையைத் தாண்டி இந்தியாவிலும் வகுப்புவாத சக்திகளுக்குத் தீனி போடுகிறது. இரு நாடுகளிலும் உள்ள வகுப்பு வாத சக்திகள் ஒன்றையொன்று சார்ந்து வளர்ந்து, மக்களிடையே பிரிவினையை ஆழப்படுத்துகின்றன. வன்முறைக் கும்பல் யார் எழுத வேண்டும், யார் பாட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அனுமதித்தால், ஒரு நவீன அரசு என்ற கட்டமைப்பே சரிந்துவிடும். மக்களின் மன உறுதியும் எழுச்சியும் இவ்வளவு அராஜகங்களுக்கு மத்தியிலும், வங்கதேச மக்களிடையே ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வற்றிவிடவில்லை. ‘புரோதோம் ஆலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ இதழ்கள் மீண்டும் வெளி வரத் தொடங்கியுள்ளன. “அஞ்சமாட்டோம்!” (UNBOWED!) என்ற தலைப்பில் டெய்லி ஸ்டார் வெளியிட்ட தலையங்கம், “எங்கள் அலுவலகத்தை அவர்களால் எரிக்க முடியும், ஆனால் எங்கள் உறுதியை எரிக்க முடியாது” என்று பிரகடனப்படுத்தி யுள்ளது. டாக்காவின் வீதிகளில், “மதவாதத்தை அடியோடு வீழ்த்துவோம்” என்ற கோஷங்களுடன் பேரணிகள் நடைபெறுகின்றன. ஜனநாயகப் பாதையில் திரும்புவதற்குத் தேர்தலே ஒரே வழி. தேர்தல்கள் தாமதப்படுத்தப்பட்டால் நாடு விவரிக்க முடியாத குழப்பத்தில் ஆழும். இந்தச் சூழலில், பன்முகத்தன்மை கொண்ட வங்க தேசத்தைக் கனவு காணும் ஒவ்வொரு குடிமகனும் எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும். வன்முறை யாளர்களை வீடியோ ஆதாரங்கள் மூலம் கண்ட றிந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. “நான் எரியவில்லை என்றால், நீ எரிய வில்லை என்றால், நாம் எரியவில்லை என்றால், இருளை ஒழிக்கும் வெளிச்சம் எப்படி வரும்?” என்ற கவிஞர் நாசிம் ஹிக்மெட்டின் வரிகள், தற்போது வங்கதேசத்தின் போராட்டக் குரலாக மாறியுள்ளது. “இருண்ட பக்கம் எங்களைச் சூழ்ந்துள்ளது, இது எப்போது முடியும்?” என்ற கவிஞர் ஷம்சுர் ரஹ்மானின்  ஏக்கம், இன்று ஒவ்வொரு வங்கதேச ஜனநாயக வாதியின் இதயத்துடிப்பாக ஒலிக்கிறது. இருளைக் கிழித்துக்கொண்டு வெளிச்சம் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வங்கதேச மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பீப்பிள்ஸ் டெமாக்ரசி (டிச.21)  தமிழ்ச்சுருக்கம்  : எஸ்பிஆர்