உரிமைகளை மீட்கவும், கூட்டுறவைக் காக்கவும் ஓரணியில் திரள்வோம்!
1988ஆம் ஆண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் கோரி, தமிழ்நாட்டின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நடத்தியது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம். அந்தப் பெருநெருப்பில் பூத்த மலராக, 06.08.1988 அன்று உருவானதுதான் ‘கூட்டுறவுத் துறை ஊழியர் பேரியக்கம்’. அந்த எழுச்சியின் வடிவமே இன்று ‘தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம்’ என கம்பீரமாகத் திகழ்கிறது. 37 ஆண்டுகாலப் பயணம் கடந்த 37 ஆண்டுகளாக, கூட்டுறவுத் துறை ஊழியர்களின் உரிமைப் போர்க்களங்களில் முதல் வரிசை யில் நின்று, எண்ணற்ற மக்கள் நலப் போராட்டங்களையும், தொழிலாளர் நியாயப் போராட்டங்களையும் முன்னெடுத்த பெருமை நம் சங்கத்திற்கு உண்டு. கூட்டுறவு நிறுவனங்களின் பாதுகாப்பும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை பாதுகாப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை ஆணித்தரமாக உணர்த்தி, தனியார்மயத் திணிப்பிலிருந்தும், சிதைவுப் போக்கிலிருந்தும் இத்துறையைக் காத்து நின்ற அரண் இந்த இயக்கம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வலுவான கட்டமைப்போடு இயங்கி வரும் ஒரே துறை சார்ந்த சங்கம் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பெருந்தலைமைகள் முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களிலும், இத்துறை ஊழியர்கள் முன்னணிச் சக்தியாக விளங்கிய வரலாறு நமக்கே உரித்தானது. காலத்தின் கட்டளை - நமது முக்கியக் கோரிக்கைகள் இச்சங்கம் பெற்ற வெற்றிகள் பலவாயினும், இழந்த உரிமைகளை மீட்கவும், புதிய மாற்றங்களைப் பெற்றிடவும் நமக்கான களம் இன்னும் விரிந்து கிடக்கிறது. நம் முன்னுள்ள மிக முக்கியக் கோரிக்கைகள் வருமாறு: * பதவி உயர்வில் ஜனநாயகம் (கலந்தாய்வு முறை): கூட்டுறவுத் துறையில் பதிவுறு எழுத்தர் முதல் துணைப் பதிவாளர் வரை அனைத்துப் பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கும் போது, வெளிப்படையான ‘கலந்தாய்வு முறை’ (Counseling System) கட்டாயமாக்கப்பட வேண்டும். மண்டல ஒதுக்கீடு மற்றும் ஊழியர்களின் விருப்பத்தை மதிக்கும் இம்முறையே துறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடித்தளமாகும். * காலிப்பணியிடங்களை நிரப்புதல்: டிஜிட்டல்மயம் மற்றும் புதிய திட்டங்கள் என்ற பெயரில் குறைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்ப புதிய பணியிடங் களை உருவாக்கி, படித்த இளைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தர வேலைவாய்ப்பை அரசு வழங்க வேண்டும். * ஜனநாயகத் தேர்தல்: கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுக்களுடன் துறை செயல்பட்டால் மட்டுமே கூட்டுறவுத் துறையின் மாண்பு காக்கப்படும். * பணிச்சுமையைக் குறைத்தல்: புதிய திட்டங்களைச் செயல்படுத்துகிறோம் என்ற பெயரில், ஊழியர்கள் மீது திணிக்கப்படும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தைத் தடுக்க வேண்டும். இதற்கு முறையான திட்டமிடலும், பணியாளர் பற்றாக்குறையைப் போக்குவதுமே தீர்வாகும். * கூடுதல் பொறுப்பிற்கான பாதுகாப்பு: கூட்டுறவுச் சார்பதிவாளர்கள் (Sub-Registrars) தங்கள் பணியுடன், பல சங்கங்களுக்குக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், ‘கண்காணிக்கத் தவறினார்’ எனக் கூறி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க, அரசு தெளிவான செயல்முறை ஆணையைப் பிறப்பிக்க வேண்டும். *ஒப்பந்த முறை ஒழிப்பு: அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் (Outsourcing) மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை முழுமையாக ரத்து செய்து, காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதை அரசு தனது கொள்கையாக அறிவிக்க வேண்டும். *பழைய ஓய்வூதியத் திட்டம்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (NPS) ரத்து செய்துவிட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான ‘வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை’ (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மதுரையில் சங்கமிப்போம்! மேற்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்கவும், கூட்டுறவு ஊழியர் இயக்கத்தின் அடுத்தகட்டப் போராட்ட வியூகங்களை வகுக்கவும் ஒரு வரலாற்றுத் தருணம் கைகூடியுள்ளது. வரும் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில், தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் விளைநிலமான மதுரை மாநகரில், சங்கத்தின் 16ஆவது மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவை எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இப்பேரவையில், மாநில, மாவட்டப் பிரதிநிதிகளும், சங்க உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்று, நமது உரிமைகளை மீட்பதற்கான விவாதங்களை முன்னெடுப்போம். கூட்டுறவுத் துறையின் எதிர்காலத்தையும், நம் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மதுரையில் ஓரணியில் திரள்வோம்!
