articles

img

எதிரியின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்துவோம்! நம் வாழ்நாளிலேயே புரட்சிகர மாற்றம் சாத்தியம்!

எதிரியின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்துவோம்!  நம் வாழ்நாளிலேயே புரட்சிகர மாற்றம் சாத்தியம்! 

சிஐடியு மாநாட்டில் முழங்கிய புதிய தலைவர் சுதீப் தத்தா 

விசாகப்பட்டினம்  “நாம் தியாகிகள் நடந்து சென்ற இரத்தச் சுவடுகளின் மீது பயணிக்கிறோம்; இந்திய சமூகத்தைச் சோசலிச சமூகமாக மாற்றுவதே நமது இறுதி இலக்கு. புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமில்லை என்று நம்மை நம்பவைத்து முடக்க எதிரிகள் முயல்கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வது இதுதான் – அந்தப் புரட்சிகர மாற்றத்தை நம் வாழ்நாளிலேயே நாம் சாத்தியமாக்கிக் காட்டுவோம்!” என்று சிஐடியு-வின் புதிய அகில இந்தியத் தலைவர் தோழர் சுதீப் தத்தா ஆவேசமாக முழங்கினார்.  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சிஐடியு 18-வது அகில இந்திய மாநாட்டின் நிறைவு நாளில், புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பின் அவர் ஆற்றிய உரை, வெறும் நன்றியுரையாக இல்லாமல், உலகளாவிய முதலாளித்துவத்திற்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாக அமைந்தது.  புதிய யுகத்தின் போராட்டமும் புதியதே!  தனது உரையில், தொழிற்சங்க இயக்கத்தின் புதிய திசைவழி குறித்துப் பேசிய அவர், “தோழர்களே, வழக்கமான போராட்ட முறைகளின் காலம் முடிந்துவிட்டது. நாம் இப்போது மிகக்கடுமையான சவால்கள் நிறைந்த, வலுவான - பணிய வைக்கும் தன்மை கொண்ட (Offensive Struggle) புதிய போராட்ட யுகத்தில் நுழைந்துள்ளோம். நாம் முன்னேறிச் செல்லத் தவறினால், எதிரிகள் நமது வீடுகளுக்குள் புகுந்து நம்மை அழிப்பார்கள். ஏகாதிபத்தியச் சக்திகள் உலகெங்கும் வன்முறையை ஏவிவிடுகின்றன. காசாவில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்படுவதைக் கண்டும் நாம் அமைதியாக இருக்க முடியாது. நம்மைச் சூழ்ந்துள்ள இந்த நெருக்கடியைப் புரட்சிகரமான சமூக மாற்றத்திற்கான கருவியாக நாம் மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.  தொழிற்சங்க இயக்கத்திற்கான நான்கு தூண்கள்  தொழிலாளர் வர்க்கம் கவனம் செலுத்த வேண்டிய நான்கு மிக முக்கியமான இலக்குகளை சுதீப் தத்தா விரிவாக விளக்கினார்:  • நவீன பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி: இன்று தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்கள் ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் தான். மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யும் இவர்களே ‘நவீன பாட்டாளி வர்க்கம்’. இழந்தது எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் இவர்களது வேலைநிறுத்தச் சக்தியே முதலாளித்துவத்தின் முதுகெலும்பை உடைக்கும் வல்லமை கொண்டது. அவர்களை இயக்கத்தோடு ஒருங்கிணைப்பதே நமது முதல் பணி.  • இளைஞர் படையைத் திரட்டுதல்: வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடும் இளைஞர்களைத் தொழிற்சங்க இயக்கத்தின் பால் ஈர்க்க வேண்டும். ஆளும் வர்க்கத்தின் வகுப்புவாதச் சூழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் இரையாவதற்கு முன்னால், ‘கண்ணியமான வேலை’ என்பதை அடிப்படை உரிமையாக்கப் போராடும் ஒரு பெரும் புரட்சிகர ராணுவம் போல நாம் மாற்ற வேண்டும்.  • பெண் தொழிலாளர்களின் பேராற்றல்: உழைக்கும் பெண்களின் சக்தியை நாம் முழுமையாகக் கட்டவிழ்த்து விட வேண்டும். பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்குப் பின்னணியில் இருக்கும் ஆணாதிக்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து வர்க்கப் போராளிகள் ஒவ்வொருவரும் போர்க்களம் காண வேண்டும். இந்தப் பெண் சக்தி வீறு கொண்டு எழுந்தால், அது புதிய சமூக-அரசியல் மாற்றத்தை உருவாக்கும்.  •    தொழில்நுட்ப மாற்றமும் நவீனத்துவமும்: மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்துகொண்டு நமது போராட்ட முறைகளை நவீனப்படுத்த வேண்டும். உலகிலேயே மிகவும் நவீனமான வர்க்கம் தொழிலாளி வர்க்கம் தான் என்பதை நமது சமரசமற்ற செயல்பாடுகளின் மூலம் இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டும்.  பிப்ரவரி 12: வழக்கமான ஒன்றல்ல!  தனது உரையின் இறுதியில் பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம் குறித்துப் பேசிய அவர், “வருகிற பிப்ரவரி 12 வேலைநிறுத்தம் என்பது வழக்கமான ஒன்றல்ல; அது இந்த ஆட்சிக்கு நாம் விடுக்கும் இறுதி எச்சரிக்கை. ஒன்றிய ஆட்சியாளர்கள் செவிசாய்க்காவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமடையும். விவசாயிகள் நம்மோடு கைகோர்த்திருப்பது நமது நம்பிக்கையை இரட்டிப்பாக்குகிறது. சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் உலகம் முழுவதற்கும் ஒரு நெருப்பை மூட்டியுள்ளது. அதே நெருப்பை நாம் இந்தியாவெங்கும் கொண்டு செல்வோம். எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்துங்கள். அதிகாரம் மக்களிடமே உள்ளது, நாம் சமூக மாற்றத்தின் இயந்திரமாகச் செயல்படுவோம்” என்று முழங்கினார்.  “எதிரிகளைப் பீதியடையச் செய்யுங்கள்; பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தத்தை ஆட்சியாளர்களின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு போராட்டமாக மாற்றுங்கள். அதிகாரம் மக்களிடமே உள்ளது, நாம் சமூக மாற்றத்தின் இயந்திரமாகச் செயல்படுவோம்” என்ற இறுதி முழக்கத்துடன் மாநாடு எழுச்சியுடன் நிறைவடைந்தது.

மாநாட்டில் சிஐடியுவின் புதிய தலைவராக சுதீப் தத்தா, பொதுச்செயலாளராக எளமரம் கரீம் மற்றும் பொருளாளராக எம். சாய்பாபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   தமிழகத்தைச் சேர்ந்த அ.சவுந்தரராசன், மாலதி சிட்டி பாபு ஆகியோர் அகில இந்தியத் துணைத் தலைவர்களாகவும், ஜி.சுகுமாறன், ஆர். கருமலையான், எஸ்.கண்ணன் ஆகியோர் அகில இந்தியச் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மூத்த தலைவர் ஏ.கே.பத்மநாபன், நிரந்தர அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.  தமிழகத்திலிருந்து அகில இந்தியச் செயற்குழு உறுப்பினர்களாக (WCM) வி. குமார், கே. திருச்செல்வன், கே. ஆறுமுக நயினார், எஸ். ராஜேந்திரன், இ. முத்துக்குமார், கே.சி. கோபிகுமார், ஏ. ஜானகிராமன் மற்றும் எஸ். தேவிமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அகில இந்திய பொதுக் கவுன்சில் உறுப்பினர்களாக (GCM) தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பிரதிநிதிகள் விபரம் வருமாறு:  வி. குமார், கே. திருச்செல்வன், கே. ஆறுமுக நயினார், எஸ். ராஜேந்திரன், இ. முத்துக்குமார், கே.சி. கோபிகுமார், ஏ. ஜானகிராமன், எஸ். தேவிமணி, எம். மகாலட்சுமி, என். ஐடா ஹெலன், எஸ்.கே. மகேந்திரன், பி. கருப்பையன், எம். சந்திரன், சி. ஜெயபால், ஆர். ரசல், பி.என். தேவா, டி. ஜெய்சங்கர், எம். தனலட்சுமி,  எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே. ரங்கராஜ், ஏ. கோவிந்தன், சி. நாகராஜ், ஆர். லெனின், எம். சிவாஜி, ஏ. ஸ்ரீதர், எஸ்.கே. முருகேஷ், செந்தில்குமார், பேபி ஷகிலா, ஜி. விவேகானந்தன்,  எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், டி. குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

சிஐடியு மாநாட்டு விவாதங்களில் பங்கேற்ற தமிழக தலைவர்கள்