articles

img

வழக்கறிஞர்கள் போராட்டம்: தொழில்முறை சார்ந்தது மட்டுமல்ல! - கே. கிருத்திகா

வழக்கறிஞர்கள் போராட்டம்: தொழில்முறை சார்ந்தது மட்டுமல்ல!

சென்னை உயர்நீதி மன்ற நிர்வாகம்,  கடந்த 01.12.2025 முதல் அனைத்து வழக்கு களையும் தாக்கல் செய்வதற்கு ‘இ-தாக்கல்’ (e-filing) முறையைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் திடீர் நடைமுறைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் வெறும் தொழில்முறை சார்ந்தது மட்டுமல்ல, இது பொதுமக்களுக்கான நீதியைப் பாதுகாக்கும் போராட்டமுமாகும்.  உள்கட்டமைப்பு சவால்களும் பொருளாதாரச் சுமையும் இ-தாக்கல் முறையைச் செயல்படுத்த ஒரு வழக்கறிஞருக்குக் கணினி, வருடி (Scanner), அதிவேக இணையம் என சுமார் ₹2.5 லட்சம் வரை முதலீடு தேவைப்படுகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழலில், இது பெரும்பாலான வழக்கறிஞர்களுக்குச் சாத்தியமற்ற ஒன்று. குறிப்பாக, தொழில் தொடங்க முனையும் இளம் வழக்கறிஞர்களுக்குத் தொடர்ச்சியான இணையச் செலவுகளும், தொழில்நுட்பப் பராமரிப்புச் செலவுகளும் பெரும் சுமையாகும்.  மேலும், நீதிமன்றத்தின் ‘இ-தாக்கல்’ இணையதளம் பெரும்பாலும் மந்தமாகச் செயல்படுவதோடு, அடிக்கடி ‘சர்வர்’ தடங்கல்களும் ஏற்படுகின்றன. அவசர வழக்குகளைத் தாக்கல் செய்யும்போது இது பெரும் முட்டுக்கட்டையாக அமைகிறது. இந்தத்  தொழில்நுட்பப் பணிக்காகக் கூடுதல் பணியா ளர்களை நியமிக்க நேரிடும்போது, அந்தச் செலவு இறுதியில் வழக்காடிகளான ஏழை மக்கள் மீதே சுமத்தப்படும்.  ஏகபோக ஆதிக்கமும் இளம் வழக்கறிஞர்களின் எதிர்காலமும்  கட்டாய இ-தாக்கல் முறை சட்டத் தொழிலில் ஒருவித ‘ஏகபோக’ (Monopolistic) நிலையை உருவாக்கும். வசதி படைத்த சில வழக்கறிஞர்கள் மட்டுமே வழக்குகளைக் கையாளும் சூழல் உருவாகி, தனித்து இயங்கும் இளம் வழக்கறிஞர்களும், பெண் வழக்கறிஞர்களும் வசதியான மூத்த வழக்கறிஞர்களைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இது ஆரோக்கியமான சட்டப் பயிற்சிக்கு எதிரானது. தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க முறையான உதவி மையங்கள் இல்லாத நிலையில், நீதிமன்ற அறைகளில் வாதிட வேண்டிய வழக்கறிஞர்கள், இணையதள வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் நேரிடும்.  ரகசியத்தன்மையும் பாதுகாப்பு அச்சுறுத்தலும்  சொந்தமாக உள்கட்டமைப்பு வசதி இல்லாத வழக்கறிஞர்கள், பொதுவான பிரவுசிங் மையங்களையே (Browsing Centers) சார்ந்திருக்க வேண்டியிருக்கும். குடும்பத் தகராறுகள், போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற ரகசியத்தன்மை பேணப்பட வேண்டிய வழக்குகளின் விவரங்களை, மூன்றாம் தரப்பினரிடம் பகிர வேண்டிய சூழல் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது வழக்கறிஞருக்கும் கட்சிக்காரருக்குமான நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும்.  நீதித்துறை அதிகாரிகளா? தொழில்நுட்ப வல்லுநர்களா?  வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகள்; அவர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்ல. சட்ட நுணுக்கங்களைப் படித்து வாதிடுவதே அவர்களின் முதன்மைக் கடமை. அவர்களைத் தொழில்நுட்பப் பணி களுக்குக் கட்டாயப்படுத்துவது நீதியைத் தாமதப்படுத்தும். ஏற்கனவே வர்த்தக மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களில் இ-தாக்கல் முறையினால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளை நீதிமன்றம் உணர வேண்டும்.  நீதிமன்ற நிர்வாகம் வழக்கறிஞர்களின் நியாயமான குரலுக்குச் செவிசாய்க்காமல் பிடிவாதம் காட்டுவது வருத்தமளிக்கிறது. மலிவான மற்றும் எளிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய, தற்போது நடைமுறையில் உள்ள ‘நேரடி ஆவணத் தாக்கல்’ (Manual Filing)  முறையையே தொடர வேண்டும் என்பதே  ஒட்டுமொத்த சட்டத் துறையின் கோரிக்கையாகும்.