பாரம்பரிய விதைகளை மட்டுமல்ல, விவசாயத்தையும் பலிகொடுத்த மோடி!
“இயற்கை விவசாயம் இந்தியாவின் சொத்து... இயற்கை விவசாயத்திற்கு உலகின் தலைமை இடம் தமிழ்நாடு” என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கோவை யில் நடந்த தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பேசும் போது புகழ்ந்து தள்ளினார். அதோடு மட்டுமின்றி இம்மாதம் 3-ஆம் தேதி அவரது சமூக ஊடகப் பக்கமான ‘லிங்க்டு இன்’-இலும் தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிக ளைக் கண்டு வியப்படைந்தேன் என்றும், ஒரு விவ சாயி மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுனி போன்ற பாரம்பரிய நெல் வகைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதோடு நெல்லிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்கிறார் என்றும் பாராட்டு மழை பொழிந்தார்.
இப்படி அடுத்தடுத்து அவர் நடந்து கொள்வதைப் பார்த்ததுமே ஏதோ தவறாக நடக்கப் போவது போலிருக்கிறதே என்ற சந்தேகப் பொறி தட்டியது. காரணம் இல்லாமல் பேசு கிறவர் இல்லையே பிரதமர் மோடி. பாரம்பரிய நெல் வகைகள் மீது அவர் திடீர் பாசம் கொள்வது ஏன்? விதைச் சட்டம் 2025: ஒரு கார்ப்பரேட் சதி நவம்பர் மாதம் 12-ஆம் தேதி விதைச் சட்டம் -2025 எனும் வரைவு மசோதாவை ஒன்றிய அரசு இணைய தளத்தில் வெளியிட்டு, டிசம்பர் 11-ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களையும் ஆட்சேபணைகளையும் தெரிவிக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்குக் கெடு விதித்திருந்தது ஒன்றிய வேளாண் அமைச்சகம். அதுவும் அந்த மசோதாவை ஆங்கி லத்தில் மட்டும் வெளியிட்டு சாதாரண விவசாயிக ளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருந்தது. ஏற்கெனவே 1966-ஆம் ஆண்டு விதைச் சட்டம், 1983-ஆம் ஆண்டு விதை கட்டுப்பாட்டு ஆணை யம், 2001-ஆம் ஆண்டு தாவரங்கள் மற்றும் விவ சாயிகளின் உரிமை பாதுகாப்புச் சட்டம் போன்றவை எல்லாம் நடைமுறையில் இருக்கும் போது, இப்போது ஏன் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்? அதற்கு அப்படி என்ன அவசரம் என்று பார்த்தால், அதன் பின்னால் அமெரிக்காவின் நெருக்குதல் இருப்பது தெரிகிறது.
1990-களில் நவதாராளமயக் கொள்கைகள் அறிமுகமான காலத்தில் கூட, உலக வர்த்தக ஒப் பந்தத்தில் இணைக்கப்பட்ட போது விவசாயிகளின் விதை உரிமை பாதுகாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக ஏற்பட்ட நிகழ்வாக வந்த 2001-ஆம் ஆண்டு சட்டம் கூட விவசாயிகளின் பாரம்பரிய விதை உரிமை களைப் பாதுகாத்தது. ஆனால் இப்போதைய விதைச் சட்டம்- 2025, இந்த பாரம்பரிய விதை உரிமைக்கான பாதுகாப்பை அடியோடு இல்லாமல் செய்கிறது என்பதுதான் கொடுமை. இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசு சொல்லும் காரணம், இது தரமான விதை விநியோகத்தை மேம்படுத்து மாம், போலி விதைகளைத் தடுக்குமாம். அப்படியா னால் ஏற்கனவே இருந்த சட்டங்கள் இதற்குப் பயன் படவில்லையா? 2022-23 இல் மட்டும் 43,001 விதை மாதிரிகள் தரமற்றவை எனப் பட்டியலிடப் பட்டுள்ளதாகவும், இதைத் தடுக்கவே புதிய சட்டம் என்றும் வேளாண்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்குர் கூறியிருக்கிறார். உண்மையில், போலிகளும் தரமற்றவைகளும் எல்லா காலத்திலும் வரத்தான் செய்யும், அதைத் தடுப்பதுதான் அரசின் கடமை.
அதற்காக ஒட்டுமொத்த விதை உரிமையையும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பது நியாயமல்ல. திருதராஷ்டிர ஆலிங்கனம்: மோடியின் இரட்டை முகம் இந்திய வேளாண்துறையில் கடந்த 11 ஆண்டுக ளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பிரத மர் மோடி கோவையில் பேசினாரே, அது இது தானா? இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா முன்னேற்ற மடைந்துள்ளது என்று அவர் கூறுவதன் பின்னணி உண்மையில் பயங்கரமானது. இந்தியாவின் பாரம்பரிய விதை ரகங்களை உலகளவில் கொண்டு செல்வதல்ல இவர்களின் நோக்கம்; வெளிநாட்டு விதைகளை இந்தியாவில் விற்க பன்னாட்டு நிறுவ னங்களை அனுமதிப்பதுதான். ஏற்கெனவே அந்நிய பன்னாட்டு வேளாண் இடுபொருள் நிறுவனங்கள் பல இங்கே வணிகம் செய்து கொண்டுதான் இருக் கின்றன. உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை யில் உள்ளன. ஆனால் அந்த நாடுகளின் விதைக ளை, குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணு திருத்தப்பட்ட விதைகளை நம் நாட்டுக்குள் அனும திப்பதற்குத்தான் இந்த புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இயற்கை விவசாயம் பாரம்பரியத்தில் பிறந்தது என்று 56 அங்குல மார்தட்டிப் பேசிய மோடி, அதற்கு எதிராகவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறார். அவர்கள் ஒன்றை புகழ்ந்து பேசுகிறார்கள் என்றால் அதை அழிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள் என்பது தான் பொருள். இது மகாபாரத துரியோதனனின் தந்தையான திருதராஷ்டிரனின் அரவணைத்துக் கொல்லும் நயவஞ்சகமும் ஆகும்.
திருதராஷ்டிர ஆலிங்கனம் என்பதுதான் இந்துத்துவா அரசியலின் இயல்பு. விதை உற்பத்தியில் டிஜிட்டல் விலங்கு இயற்கை விவசாயம் என்ற பெயரில் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டிருக்கும் விவசாயிகள், தங்கள் பகுதிகளில் கிடைக்கும் பாரம்பரிய விதைகளையும் இயற்கை உரங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அந்த விதையிலும் கைவைக்கிறது மோடி அரசு. ரசாயனங்களால் மனிதர்களுக்கும் கால்நடை களுக்கும் ஆபத்து என்ற உணர்வு மேலோங்கிய தால் தான் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் மிகுந்தது. ஆனால் இதை அரசு ஊக்குவிக்கவில்லை. உரம் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியை குறைத்ததால் இயற்கை விவசாயம் மேம்பட்டுள்ளது என்று பொய் பேசுகிறார் பிரதமர். அவர் அறிமுகப்படுத்திய புதிய நெல் வகைகளான ஜிஸிஸி தன் 100 மற்றும் புசா டிஎஸ்டி போன்றவை உண்மையில் மரபணு திருத்தப் பட்ட விதைகள். இது விதைச் சட்டம் 2025-க்கு முன் விடப் பட்ட வெள்ளோட்டம். இந்தச் சட்டப்படி விவசாயிகள் மற்றும் கிராமப்புற விற்பனையாளர்கள் பயன்படுத்தும் அனைத்து விதை களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதைகள் முழுமை யாகப் பரிசோதிக்கப்பட்டு கியூஆர் (QR) குறியீடு பெற வேண்டும். அவை விதை மூட்டைகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். விதையைப் பதிவு செய்யாத நிறுவனம் தண்டனைக் குள்ளாக்கப்படும். தனிப்பட்ட விவசாயிகள் விதை களைச் சேமிக்க அனுமதிக்கப்பட்டாலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மகளிர் விதை சேகரிப்புக் குழுக்கள் போன்றவை வணிக நிறுவ னங்களாக வகைப்படுத்தப்படும். இது இந்தியாவின் மரபணு பாரம்பரியத்தைச் சுரண்டுவதற்கு வழி வகுக்கும் என விதை நிபுணர் பாரத் மன்சத்தா அம்பலப் படுத்துகிறார்.
பாரம்பரிய ரகங்களை விவசாயிகள் விற்பது இனி சிரமம், ஏனெனில் அரசு அவற்றை கொள்முதல் செய்யப் போவதில்லை. அப்படி என்றால் வெளிநாட்டு விதைகள் தானே சந்தைக்கு வரும்? பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இந்தியச் சந்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசு விதைப் பண்ணைகள் மூலம் மேற்கொள்ளப்படும் விதை உற்பத்தி முறை இனி தொடருமா என்பது ஐயமே. இந்தச் சட்டம் பெரிய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் சீரான கலப்பின விதைகளுக்கே சாதக மாக இருக்கும். உள்நாட்டு, பன்முகத் தன்மை கொண்ட ரகங்கள் தரப்படுத்தப்பட்ட அளவுகோல்க ளைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் அவை சந்தையிலிருந்து மறையும். விதை விற்பனை சோத னைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களை அங்கீ கரிக்க இந்தச் சட்டம் அனுமதிப்பதால், வெளிநாட்டு காப்புரிமை பெற்ற விதைகள் இந்தியாவுக்குள் தாராளமாக நுழையும். பி.டி.பருத்தி விதைகளால் ஏற்கெனவே 25 ஆயிரம் விவசாயிகள் செத்து மடிந்ததை நாடு பார்த்தது. கண்காணிப்பு இல்லா மல் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அனுமதிக்கப் பட்டால் சுகாதாரச் சீர்கேடும் விவசாயிகளின் பொரு ளாதார வீழ்ச்சியும் ஏற்படும். தற்போது விதை பழுதானால் விற்பனையாளரிடம் நேரில் இழப்பீடு கேட்க முடியும்.
ஆனால் புதிய சட்டப்படி விவசாயிகள் நீதிமன்றங்கள் மூலம்தான் நஷ்டஈடு பெற முடியும். அதுவும் அந்த நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஒரு சிறு விவசாயியால் தில்லிக்கும் வெளிநாட்டுக்கும் அலைந்து நீதி பெற முடியுமா? ஆனால் பாயர், டவ், மன்சாண்டோ போன்ற நிறு வனங்கள் இந்தியாவின் 60 ஆயிரம் கோடி ரூபாய் விதைச் சந்தையைக் கைப்பற்றவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நமக்கு பாரம்பரிய விதையும் போகும், புதிய விதைகளை வாங்கி பயன்படுத்த முடி யாத நிலையும் ஏற்படும். அமெரிக்காவின் நிர்பந்தத்து க்கு மோடி அரசு அடிபணிந்து விட்டது என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனாலும் கூட பிரதமர் மோடி அசராமல் ஓடி வரு கிறாராம் தமிழ்நாட்டுக்கு. ஜனவரி 13, 14, 15 தேதிகளில் வந்து தமிழ்நாட்டில் பொங்கல் வைக்கப் போகிறாராம். பாரம்பரிய விவசாயத்துக்கும் விதைக்கும் பட்டை நாமம் சாத்தியதற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வர வேற்பதற்கும் தமிழ்நாட்டு மக்களும் விவசாயி களும் தங்களது உரத்த கண்டனத்தை ஓங்கி முழக்கிடு வோம்! இயற்கை விவசாயத்தை மட்டுமல்ல, இந்திய விவசாயத்தையும் பாதுகாப்போம். பாரம்பரிய விதை களையும் பாதுகாப்போம்!