பொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்
இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்ட பின்னர் எவ்வளவு முதலீடு வரும் என்பதைப் பற்றியே ஆட்சியாளர்களும், வணிக இதழ்களும் பேசுகின்றனர். ஆனால் 1999 இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் மூலம் இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்ட பின்னர், 25 ஆண்டுகளில் உள்ளே வந்த அந்நிய நிறுவனங்களில் எத்தனை முதலீடுகளை எடுத்துக் கொண்டு திரும்பப் போய் விட்டன என்று இவர்கள் பேசுவதே இல்லை. இதோ இந்த பட்டியலைப் பாருங்கள். ஓடிப் போன முதலீடுகள் இவை. 1) ஆஸ்திரேலியா ஏ.எம்.பி (சன்மார் இணைவினையில் இருந்து - 2005) 2) அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி (டாடா உடனான இணைவினையில் இருந்து 2009) 3) நெதர்லாந்து ஐ.என். ஜி (வைஸ்யா உடனான இணைவினையில் இருந்து 2013 ) 4) பிரிட்டனின் ராயல் சன் லைப் (ராயல் சுந்தரம் இணைவினையில் இருந்து 2015) 5) ஓல்ட் மியூச்சுவல் (கோடாக் மகேந்திரா இணைவினையில் இருந்து 2017) 6) அமெரிக்காவின் நியூயார்க் லைப் (மேக்ஸ் உடனான இணைவினையில் இருந்து 2022) 7) பிரிட்டனின் ஸ்டாண்டர்டு லைப் அபர்தீன் (ஹெச்.டி.எப்.சி உடனான இணைவினையில் இருந்து 2023) 8) ஜெர்மனி அல்லயன்ஸ் (பஜாஜ் லைப் உடனான இணைவினையில் இருந்து 2025) 9) ஜெர்மனி அல்லயன்ஸ் (பஜாஜ் பொது இன்சூரன்ஸ் உடனான இணைவினையில் இருந்து 2025) இன்சூரன்ஸ் என்பதன் இலக்கணமே நிச்சயமில்லாத எதிர்கால நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பு வழங்குவதே. ஆனால் அந்த தொழிலுக்கு வரும் நிறுவனங்களே எதிர்காலத்தில் எவ்வளவு காலம் நீடிக்குமென்பதே நிச்சயமில்லை என்றால் என்ன செய்வது? இலக்கணத்தை மீறுபவர்கள் இவர்கள்.
தொழில் நடத்த நாங்கள் வரவில்லை!
இன்சூரன்ஸ் துறைக்குள் அனுமதிக்கப்படும் அந்நிய முதலீடுகள், இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான நீண்ட கால முதலீடுகளாக பயன்படும் என்பதே அரசின் வாதம். ஆனால் 25 ஆண்டு காலமாக வந்திருக்கிற அந்நிய முதலீடுகள் உண்மையில் தொழில் நடத்த வருகின்றனவா? அந்த முதலீடுகள் நீண்ட காலம் தொழிலில் தங்கி ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுமா? இல்லை ஊக மூலதனமாக பங்குச் சந்தையில் விளையாடுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு ஒரு உதாரணம் பிரிட்டனின் “ஸ்டாண்டர்ட் லைப் அபர்தீன்”. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2400 கோடி ரூபாய் இந்திய இன்சூரன்ஸ் துறையில் முதலீடுகளைச் செய்த நிறுவனம் இது. 2017க்கு பின்னர் பங்குகளை விற்க ஆரம்பித்து விட்டது. 10 தவணைகளில் பங்குகளை ரூ.34000 கோடிகளுக்கு விற்று முற்றிலும் தொழிலைவிட்டு வெளியேறிவிட்டது. முதலீடுகளை விட 14 மடங்கு (1400 %) லாபம் பார்த்துள்ளது. மலர் விட்டு மலர் தூவும் வண்ணத்து பூச்சி மூலதனமாக உள்ளே வரும் அந்நிய முதலீடாகவே அமைகின்றனவா என்ற கேள்வியையே நியாயமாக இது எழுப்புகிறது.
கூரை ஒண்ணும் கிழியவில்லை
இன்சூரன்ஸ் துறையே ஆதாரத் தொழில் வளர்ச்சியின் காமதேனு ஆகும்; இதில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டால் உள்ளே வந்து அந்நிய முதலீடுகள் கொட்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் 10 ஆண்டு கணக்கைப் பாருங்கள். 2015 - 24 வரை உள்ளே வந்த அந்நிய முதலீடுகள் ரூ.33,03,104 ஆகும். இதில் டிசம்பர் 2014 முதல் ஜனவரி 2024 வரையிலான காலத்தில் இன்சூரன்ஸ் துறைக்கு வந்துள்ள அந்நிய முதலீடுகள் வெறும் ரூ.53,900 கோடிகள் மட்டுமே. மொத்த அந்நிய முதலீட்டு வருகையில் இது 1.6 %மட்டுமே. இது நிதிச் சேவை செயலாளர் விவேக் ஜோஷி வெளியிட்டுள்ள தகவல். அறிவித்தவுடன், அனுமதித்தவுடன் அந்நிய முதலீடு வருவதில்லை. வந்தாலும் நீண்ட காலம் தங்குவதில்லை. தங்க வேண்டுமெனில் அதற்கு அது போடும் நிபந்தனைகளை நம் தேசம் தாங்குமா? என்ற கேள்வியும் இருக்கிறது. எந்நேரம் வருவார்கள்? எந்த நேரம் புறப்பட்டு விடுவார்கள்? என்று கணிக்கிற, கட்டுப்படுத்துகிற இடத்தில் அரசு இருக்கிறதா என்பது கேள்வியே.
தாமதி... மறு... குப்பையில் வீசு
இது அமெரிக்க பன்னாட்டு தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் பற்றிய புகழ் பெற்ற வாசகங்கள். ஒரு தனியார் மருத்துவக் காப்பீடு நிறுவனத்தின் சி.இ.ஓ பிரியன் தாம்சன் நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். வன்முறையை ஏற்காதவர்கள் கூட கொலையின் பின்புலத்தில் இருந்த காரணத்தை ஆதரித்தார்கள். பாலிசிதாரர்கள் உரிமங்கள் தாமதம் ஆவது, மறுப்பது, புகார்களை கூட குப்பையில் வீசுவது என்ற பொருள் கொண்ட Delay, Deny, Depose என்ற வாசகங்கள் பிரபலம் ஆயின. சமூக வலைத் தளங்களில் வைரல் ஆனது.
