கள்ளிச் செடியில் மல்லிகை பூக்காது தமிழிசை அவர்களே
மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழி லாளர் விரோத சட்டத் தொகுப்புகளை விமர்சித்ததற்காக - கம்யூனிஸ்ட் களை பாய்ந்து பிராண்டுவதாக கற்பனை செய்து கொண்டு - தன்னைத்தானே பிராண்டிக் கொண்டு நிற்கிறார் ‘தமிழிசை’ என்கிற ‘தமிழ் வசை’. “உண்டியலிலிருந்து பெட்டிக்கு மாறிய கம்யூ னிஸ்ட்கள்” என்று கம்யூனிஸ்ட்களை வசை பாடுவ தாக நினைத்துக் கொண்டு, ‘உத்தம வேடம்’ போட முயற்சித்திருக்கிறார் தமிழிசை. உண்டியல்தான் கம்யூனிஸ்ட்களின் நிரந்தரமான நிதி திரட்டலுக்கு வழி. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அர சாங்கம் ஏழை மக்களின் வரிப் பணத்தை எடுத்து, தனியாருக்குக் கொடுத்து அதில் பங்கு வாங்கிக் கொள்ளும் இழிவான நடவடிக்கையில் ஈடுபட்டதைப் பற்றி அவருக்கு கவலையில்லை.
125 கோடி ரூபாயை விழுங்கியவர்கள் தமிழ்நாட்டைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு குழுமத்திற்கு செமிகண்டக்டர் நிறு வனம் நடத்த அனுமதி வழங்கிவிட்டு, அதற்கு 70 சதவீதம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் கஜானாவி லிருந்து பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, அதற்காக 125 கோடி ரூபாய் தமிழ்நாடு பாஜகவின் கணக்கிற்கு மாற்ற வைத்த ‘பெருமைமிக்க’ கட்சியில் இருக்கிறோம் என்ற குறைந்தபட்ச அருவருப்பு கூட இல்லாமல் தமிழிசை பேசியிருப்பது, சாக்கடை யிலேயே உழல்பவர்களுக்கு அதன் நாற்றம் தெரியாது என்பதற்கான சிறந்த உதாரணம். அப்பனே!
முருகா!! பிஎம்கேர்ஸ் பிக்பாக்கெட் கொரோனாவைக் காரணம் காட்டி, இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகளிடமும், ஒன்றிய அரசுப் பணியாளர்களிடமும், மத்திய பொதுத்துறை நிறுவன பணியாளர்களிடமும் பணத்தை வசூலித்து, அதற்கு கணக்கு காட்ட மாட்டேன்; அது தனியார் நிதி என்று சண்டித்தனம் செய்து கொண்டிருப்பது மோடிதான் என்பதை உலகறியும். பி.எம்.கேர்ஸ் என்று பெயர் வைத்துவிட்டு, அது ஏதோ அரசின் நிதி என்ற தோற்றம் காட்டி அதிகாரி களிடமும் தொழிலாளிகளிடமும் பிக்பாக்கெட் அடித்த ஒரு கூட்டத்தின் ஓர் அங்கம்தான் தான் என்பதையும், அதன் தலைவர்தான் மோடி என்பதையும் மறந்துவிட்டுப் பேசுகிறார் தமிழ் வசை. அதானியைச் சுமக்கும் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு மோடி, பொதுச் சொத்தையும் மக்களின் உரிமையையும் தன் நண்பர் அதானிக்கு அள்ளிக் கொடுத்ததை தமிழிசை மறந்துவிட்டார். சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில், டோரன் பவர் நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டரை ரூபாய் 6000-க்கு கொடுத்ததும், தன் நண்பர் அதானிக்கு ஒரு சதுர மீட்டர் நிலத்தை வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுத்ததை யும்,
அதற்கு பரிகாரமாக 2016 தேர்தல் செலவுகளை அதானி பார்த்துக் கொண்டதும், அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி பயன்படுத்திய விமானம் அதானியின் தனி விமானம் என்பதும் ஊர் அறிந்த அவமானம். தமிழ் வசைக்கு அது மணக்கிறது என்பதால், சூடிக்கொண்டு சுற்றட்டும். மாறாக, எந்த அழுக்கும் அண்டாத கம்யூனிஸ்ட் நெருப்புகளைப் பார்த்து, அவதூறுச் சேற்றை அள்ளி எறிய வேண்டிய அவசியம் இல்லை. சற்று வாசித்தாவது அறிய முயற்சியுங்கள் அடுத்ததாக, கம்யூனிஸ்ட்கள் மில்களை எல்லாவற்றையும் மூடிவிட்டார்களாம். சமீபத்திய மூடல் நோக்கியாவாம். சொந்த அறிவை பயன் படுத்த வாய்ப்பில்லாத போது, சற்று வாசித்தாவது விவ ரங்களை தெரிந்து கொள்ள தமிழ் வசை முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஒன்றிய அரசு, ஆண்டு தோறும் எந்தெந்தப் பிரச்சனைகளால் ஆலைகள் மூடப்பட்டிருக்கின்றன என்பது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் பொறுப்பில் இருந்தவருக்கு, அடுத்தவரிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற குறைந்தபட்ச நேர்மைகூட இல்லை. எந்த முதலாளி யும் லாபம் வரும் என்றால், தொழில் தகராறுக்காக ஆலையை மூடமாட்டார்கள்.
நட்டம் ஏற்படுகிறது என்றால், காலில் விழுந்து கும்பிட்டாலும் கண நேரம்கூட தாமதிக்காமல் மூடிவிட்டு ஓடிவிடுவார்கள். நோக்கியா மூடலுக்கு தொழிற்சங்கம்தான் காரணம் என்று எந்த சாக்கடையில் ஆதாரம் எடுத்தார் என்று தமிழிசை சொல்ல வேண்டும். ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை யை மூடியபோதே, குஜராத்தில் உள்ள சனத் என்ற இடத்திலிருந்த ஆலையையும் மூடிவிட்டுச் சென்றது. அங்கு சிஐடியு சங்கமா இருந்தது? தமிழ்நாட்டில் மூடியதற்கு தொழிற்சங்கம் காரணம் என்று ஃபோர்டு நிறுவனம் எந்த இடத்திலும் சொல்ல வில்லை. முதலாளிகளின் கால் நக்கிப் பிழைக்கும் சிலர் வழக்கமாக, கம்யூனிஸ்ட்களை சாடுவதற்காக சொல்கிற, அதே அரைத்த மாவை மீண்டும் அரைத் திருக்கிறார் தமிழிசை. திராணி இருந்தால், ஒன்றிய அரசின் ஆவணங்களிலிருந்து தமிழிசை பட்டிய லிடட்டும், மோடி அரசின் கொள்கைகளால் மூடப்பட்ட ஆலைகள் எத்தனை; தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் மூடப்பட்ட ஆலைகள் எத்தனை என்று சொல்லட்டும். ஒருவர் அறியாமையில் இருப்பதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த அறியாமையை ஏதோ அறிவாளித்தனம் என்று அலட்டிக் கொள்வதுதான் நகைப்புக்குரிய அசிங்கம். மோடி விழுங்கிச் செரித்தது எத்தனை? தொழிலாளிகளுக்கு நன்மை செய்வதற்காகவே மோடி அவதாரம் எடுத்ததாக தமிழிசை பீற்றிக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப் பேற்ற போது, ஒன்றிய பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றிய நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 31, 2015 நாள்படி, 12,91,174 பேர். 2024-இல் இது 8.10 லட்சம்பேர். ஒன்பது ஆண்டு களில் மோடி விழுங்கிச் செரித்த பொதுத்துறை நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் 4.81 லட்சம். அதாவது மூன்றில் ஒரு பங்கு. ஒன்றிய அரசுப் பணிகளிலும் பல லட்சம் நிரப்பப்படாமல் உள்ளது. இந்தியாவின் இளைஞர்கள்
வேலைக்காக ஏங்கித் தவிக்கும் போது, ரயில்வே துறையில் 3 லட்சத்து 20 ஆயிரம் காலிப் பணியிடங்களை, காலி யாகவே வைத்துக் கொண்டு கபட நாடகம் ஆடுபவர் மோடி. அதில், தினம் ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டிருக்கும் போதும், சுமார் 1.70 லட்சம் பாது காப்புப் பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது தமிழ் வசைக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. ரூ.16.35 லட்சம் - உங்கள் பாரம்பரியச்சொத்தா? இவையெல்லாம் போகட்டும். இப்போது அவர்களை வெற்றி பெற வைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மூலம் பீகாருக்குச் சென்று வாக்களித்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்குமாக குழந்தைகளோடும், வயதான பெற்றோர்களோடும் மூட்டை முடிச்சுகளோடு, கோவிட் காலத்தில் நடந்து கொண்டிருந்த போது, நரேந்திர மோடி அரசாங்கம் நயா பைசா பாக்கி இல்லாமல் அவர்களிடம் கட்டணம் வசூலித்து ‘கருணை’ காட்டியதை நாடே கண்டது. ஆனால், தனது பெருமுதலாளி நண்பர்களுக்கு இந்தக் காலத்தில் 10 ஆண்டுகளில், சுமார் 16.35 லட்சம் கோடி ரூபாயை தன் பாரம்பரியச் சொத்து போல தள்ளுபடி செய்திருக்கிறார். நரேந்திர மோடி, ராகுல் காந்தியை விமர்சித்த வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், இது ஒன்றும் நரேந்திர மோடியின் தாய்மாமா வீட்டுச் சொத்து அல்ல.
வேலை கொடுக்கவும் வக்கில்லாமல், வேறு மாநிலத்திற்குச் செல்வதை தடுக்கவும் துப்பில்லாமல்; நோய்களிலிருந்து தப்பிக்க முடியா விட்டாலும் சொந்த ஊர் போயாவது செத்துவிடலாம் என்று கிளம்பியவர்களிடம் கந்துவட்டிக்காரரைப் போல் கறந்த மோடியைத் தலைவராக வைத்துக் கொண்டு, தொழிலாளர் நலனுக்காக மோடி நிற்ப தாய் தம்பட்டம் அடிப்பது - ஒன்று, அறியாமையில் இருக்க வேண்டும். அல்லது ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு செய்கிற மோசடியாக இருக்க வேண்டும். கேரளாவைப் பற்றி என்ன தெரியும்? குறைந்தபட்சக் கூலி அதிகபட்சமாக இருப்பது கேரளத்தில்தான் என்பதை தமிழ் வசை யாரிட மாவது கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். அன்றாடம் உழைத்து அதில் வரும் காசில் பசியைப் போக்கும் நிலையில் இருக்கக் கூடிய, தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்ட தொழிலாளிகளுக்கு ரூ.2999 கோடியை தமிழ்நாட்டிற்கு ஏழு மாதங்களாக பாக்கி வைத்திருந்த நரேந்திர மோடி மிகப்பெரிய புண்ணியவாளராம்! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, அறிவற்றவர்களின் கண்ணுக்கு கருணையற்றவர்களே காருண்யவான்களாய் தெரிவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. உங்கள் சங்கமே சொல்லும் உண்மை தெரியுமா? அடுத்ததாக, 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தொழிலாளிகளுக்கு மிகப்பெரிய நன்மையை கொண்டு வரப் போகிறது என்று கூவி யிருக்கிறார் தமிழ் வசை.
ஆர்எஸ்எஸ்சின் வார்ப்பான - தொழிலாளர்களுக்காக இருப்பதாக பம்மாத்து செய்து கொண்டிருக்கிற - பாரதிய மஸ்தூர் சங்கம் நவம்பர் 21 ஆம் தேதி ஒன்றிய தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார்கள். அதாவது, இந்திய தொழிலாளர் பாராளுமன்றம் என்று இதர தொழிற்சங்க அமைப்பினரால் அழைக்கப்படுகிற, இந்திய தொழிலாளர் கான்ஃபரன்ஸ் என்னும் அரசு - முதலாளிகளின் பிரதிநிதிகள் - தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டத்தை, இந்த தொழிலாளர் பங்காளன் மோடி ஆட்சியில் கடந்த 10 வருடங்களாக கூட்டப்படவே இல்லை என்று அவர்களே அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்கள். இது வேறெந்த பத்திரிகையிலும் வந்த செய்தி யல்ல. ‘ஆர்கனைசர்’ என்கிற ஆர்எஸ்எஸ் பத்திரிகை நவம்பர் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பிரசுரித்துள்ள செய்தி இது. அதே செய்தியில், அதே பிஎம்எஸ் சங்கம் தொழிலுறவு சட்டத் தொகுப்பு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சம்பள சட்டத்தொகுப்பு ஆகிய வற்றில் அவர்கள் கூற்றுப்படியே, சில பிரிவுகள் தொழிலாளர் விரோதமாக சொல்லியிருப்பதை, ‘தற்குறி’கள் பார்க்காமல் இருக்கட்டும்; தமிழ் வசை ஏன் பார்க்காமல் இருக்கிறார்? தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான சம்பள வரம்பை 15 ஆயிரம் ரூபாயிலேயே வைத்திருப்பது அநியாயம்; அதை 30 ஆயிரம் ரூபாயாக மாற்றுங்கள். இஎஸ்ஐ தகுதிக்கான சம்பள வரம்பை 21 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு மடங்காக்கி, 42 ஆயிரமாக மாற்ற வேண்டும். போனஸ் கணக்கிடு வதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரம் என்பதை,
14 ஆயிரம் ரூபாயாக மாற்ற வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூபாய் ஆயிரத்திலிருந்து 7,500 ரூபாயாக மாற்ற வேண்டும். அதை நுகர்வோர் குறியீட்டு எண்ணுடன் இணைக்க வேண்டும். திட்டப் பணியாளர்களான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், ஆஷா ஊழியர்கள், மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் ஆகியோருக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றெல்லாம் பிஎம்எஸ் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கண் இருப்பவர்கள் பார்த்திருப்பார்கள். காதிருப்ப வர்கள் கேட்டிருப்பார்கள். அறிவு இருப்போர் அறிந்திருப்பார்கள். தமிழிசை அவர்களுக்கு இது எப்படி வசப்படாமல் போனது? திட்டப் பணியாளர்களுக்கு நீண்ட காலமாக ஒன்றிய அரசின் பங்கை உரிய நேரத்தில் கொடுக்காமல், உதாசீனம் செய்து வரும் மோடி அரசாங்கத்தை தமிழ் வசை கேள்வி கேட்டிருக்க வேண்டும். இந்தியாவில் பாஜக ஆளும் அத்தனை மாநிலங்களிலும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அப்படியொரு மசோதா தாக்கல் செய்து, அதை நிறைவேற்றிய பிறகும் - அவர் சொல்வது போல, மதிய உணவுக்கு அறிவாலயத்து க்குப் போன கம்யூனிஸ்ட்கள், இரண்டே இரண்டு எம்எல்ஏ-க்களோடு இருந்த போதும் எதிர்த்தோம். அதை, திரும்பப் பெற வைத்தோம். எதை, எங்கு சாப்பிட்டதால், பாஜக எம்எல்ஏ-க்கள் அல்லது தமிழ் வசை இதைப் பற்றி எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள் என்பதைச் சொல்லட்டும். கள்ளிச் செடியில் மல்லிகை பூக்குமா? 29 சட்டங்கள் மூலம் நீண்ட நெடுங்காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை காவு வாங்குவதற்காக 4 தொகுப்புச் சட்டங்கள்
கொண்டு வரப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் முதல் இப்போது இருக்கும் அந்நிய நிறுவனங்கள், அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக சேவகம் செய்வதற்காகவே பிறப்பெடுத்த கூட்டம் அதை தொழிலாளர்களுக்கான உரிமை என்று கொண்டாட வேண்டும் என்கிறது. கள்ளிச் செடியில் மல்லிகை பூப்பதாக கற்பனை செய்து கொண்டு பேசுவதற்கு, தமிழிசைக்கு நாம் ஒன்றும் தடை சொல்லப் போவதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களையும் நம்பச் சொல்கிறார் அவர். தமிழ் வசையே சொல்வது போல, பெரிய நிறுவனங்களுக்கு ஆட்குறைப்பு செய்வது எளிதாக இருக்காது என்றால் சிறிய நிறுவனங்களில் ஆட்கு றைப்பை அரசின் அனுமதியில்லாமல் செய்து கொள்ளலாம் என்பது தானே பொருள். 300 பேர் வரை பணி செய்யும் இடங்களுக்கு அனுமதியின்றி ஆட்குறைப்பு செய்யலாம் என்கிறார்கள். இந்தியா வில் 90 சதவீத பணியாளர்கள், 300 மற்றும் அதற்கும் குறைவானவர்களை வைத்து உற்பத்தி
செய்யும் நிறு வனங்களிலேயே வேலை செய்கிறார்கள். சரி, தொழில் தகராறு எழுப்பினால், உடனடியாக தீர்வு கிடைக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. இந்தி யாவின் தற்போதைய நிலவரப்படி, 12 லட்சம் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. புதிய சட்டத் தொகுப்புக் களால், இந்த நிலைமை இன்னும் மோசமாகும். இது என்ன அதானியின் மோசடி வழக்கா, அதற்காக, இந்திய மக்களின் நலனை காவு கொடுத்து, டிரம்ப்பிடம் மோடி பேசுவதற்கு? சாதாரண ஏழை-எளிய மக்களின் உரிமைகள்தானே! மோடி எகத்தாளமாய் சிரித்துக் கொண்டிருப்பார். எனவே இதையெல்லாம் சேர்த்து வைத்துப் பார்த்தால் தமிழ் வசைக்கே புரியும், தாம் நடத்துவது அபஸ்வர கச்சேரி என்று. அறியாமையில் இருப்போர் வாயைத் திறந்தால், அவர்கள்தான் அசிங்கப்படுவார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் தமிழ் வசைதான்.
