articles

img

ஜாபர் அலி என்றொரு மகத்தான மனிதர்....

பள்ளிப்பாளையத்தில் கந்துவட்டி கொடுமைக்காரர்கள் ஒரு பெண்ணுக்கு இழைத்த பாலியல் கொடுமையை தட்டிக்கேட்டதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் வேலுச்சாமிஅந்த சமூக விரோதிகளால் 2010 ம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வரவில்லை. வேலுச்சாமியின் குடும்ப பாதுகாப்புக்காக நிதிவழங்குமாறு கட்சியின் சார்பில் வேண்டுகோள்விடுத்தோம்.  எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் வலைப்பூவைப் பார்த்த, துபாயில் வேலை செய்துகொண்டிருந்த ஜாபர் அலி என்பவர் உடனடியாகப் பணம் அனுப்பினார். அத்துடன் ஆண்டுக்கொருமுறை இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் பள்ளிப்பாளையம் சென்று வேலுச்சாமிகுழந்தைகளுக்குப் புத்தாடைகளும், குடும்பச் செலவுக்குப் பணமும் கொடுத்துவிட்டுவருவார்.

வேலுச்சாமியின் இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் ஜாபர்அலி தான் படிக்க வைத்தார். மாதா மாதம் தவறாமல் பணம் அனுப்பிவைத்தார்.மாநிலம் மழுவதும் நிதிவசூல் செய்து ரூபாய் 3 லட்சம் குழந்தைகளின் பெயரில் வைப்புதொகையாக போட்டதோடு கட்சியின் மாவட்டக்குழு முன்நின்று இரண்டு பெண்களுக்கும் திருமணம் நடத்தியது. அந்தத் திருமண விழாக்களுக்கு வந்தது மட்டுமல்ல, அதற்கான செலவுக்கும் கணிசமாக உதவினார். கட்சியிலிருந்து பல தோழர்களும் நானும் அந்தத் திருமணநிகழ்வுகளுக்கு சென்றிருந்தோம் என்றாலும்ஜாபரைத்தான் வேலுச்சாமியின் பிள்ளைகள் தந்தையாகவும் தாயாகவும் பார்த்தார்கள். ஜாபர்அலி அவர்களைத் தனது பிள்ளைகளாகவே கருதினார், வளர்த்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயிலிருந்து சொந்த ஊருக்கு (கச்சராபாளையம், கள்ள குறிச்சிமாவட்டம்) வந்துவிட்டார். ஒரு முறை  சென்னையில் கட்சி மாநிலக்குழு அலுவலகத்திற்கு வந்து எங்களோடு பேசிவிட்டுச் சென்றார்.நேற்று (புதன்) தொழுதூரில் சாலை விபத்தில்காயமுற்று வியாழனன்று காலை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில்    ஜாபர் அலி  (64)இறந்துவிட்டார்என்ற அதிர்ச்சியான, ஆழ்ந்த துயரத்தைத்தருகிற தகவலைத் தெரிவித்தார். கட்சியின்நாமக்கல் மாவட்ட செயலாளர் கந்தசாமி.  அதனைக்  கேட்டு உறைந்து போனேன். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் த.ஏழுமலை உள்ளிட்ட தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.மத வேலிகள்  கடந்த ஜாபர் அலியின்  அன்புமனம்  மகத்தானது. அவரது மனிதநேயம் பற்றி‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் பதிவு செய்திருக்கிறேன்.அவர் வீட்டிற்குச் சென்று சந்திக்க திட்டமிட்டிருந்தேன். இத்தகைய எண்ணங்களை உடனடியாகச் செயல்படுத்தி விட வேண்டுமென்ற அவசியத்தை உணர்த்துவது போல, இனி அவரைப்பார்க்கவே முடியாது என்ற நிலைஏற்பட்டுவிட்டது.

அவரது மனதில் ஊறிய மனித நேயத்தை முகத்தின் தெளிவும், பார்வையின் கனிவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்தை இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,  அன்னாரை  இழந்து வாடும் அவரது இணையர் மற்றும் குடும்பத்தின ருக்கும், அவர் தன் பிள்ளைகளாக நேசித்த மறைந்த தோழர் வேலுச்சாமியின் மகள்கள், மகனுக்கும் என்ன வார்த்தைகளில் ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.ஜாபர் அலிக்கு ஒருமகள் இரண்டுமகன்கள். இளைய மகன் யாசர் முகமதுவுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினேன்.ஒரு கம்யூனிஸ்ட்டின் குடும்பத்தை பாதுகாத்தஜாபர் அலியின் குடும்பத்தை கட்சிபாதுகாக்கும்.

கட்டுரையாளர் ; ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)