பச்சோந்திகள் வெட்கப்படும் நேரமிது… அ.அன்வர் உசேன்
ஒன்றிய அரசாங்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு டன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக சிபிஎம் உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் வற்புறுத்திய கோரிக்கை இது. சமீபத்தில் நடந்த சிபிஎம்-மின் 24ஆவது மதுரை மாநாட்டிலும் இது பற்றி தெளிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை தொடர்ந்து எதிர்த்து வந்த பா.ஜ.க. இப்பொழுது ஏன் இதனை அறிவித்தது? பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் என்ன பதிலடி தரப்போகிறது என அனைவரும் காத்திருக்க இத்தகைய சூழலில் ஏன் இந்த அறிவிப்பு? பீகார் தேர்தல் காரணமா? இந்த கேள்விகள் எழாமல் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சங் பரிவாரத்தினரின் சில கருத்துக்களை நினைவுபடுத்திக் கொள்வது தவறாகாது: சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து இவர்கள் முன்னால் சொன்னது என்ன?
பஜன்லால் ஷர்மா/ ராஜஸ்தான் பா.ஜ.க. முதல்வர்:
“சாதிவாரி கணக்கெடுப்பு என்பது பிரிட்டிஷாரின் (சாதிய பிளவு) கொள்கையை பொருத்துவது என்பதாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” கங்கனா ரணாவத்/ பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்: “சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு போதும் நடக்காது; நடக்கக் கூடாது” யோகி ஆதித்யநாத்/ உ.பி. பா.ஜ.க. முதல்வர்: “சாதிவாரி கணக்கெடுப்பு கேட்பவர்கள் பிரிவினைவாத அரசியலை விரும்புபவர்கள்” மோகன் யாதவ்/ மத்திய பிரதேச பா.ஜ.க. முதல்வர்: “சாதிவாரி கணக்கெடுப்பு பயனற்றது; தேவையில்லாத ஒன்று” நிதின் கட்கரி/ பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர்: “யாராவது சாதிவாரி கணக்கெடுப்பு கேட்டால் அல்லது எனது சாதியை கேட்டால் அவர்களை உதைத்து விரட்டுவேன்”
சின்ஹா/ பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பொய்வாதி “
சாதிவாரி கணக்கெடுப்பு கேட்பது என்பது இந்து மதத்தை உடைக்கவும் பாரதத்தை பலவீனப்படுத்தவும் கேட்கப்படும் கோரிக்கை”
அமித் மாளவியா/ பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப
ஒருங்கிணைப்பாளர்: “இந்தியாவில் சாதிகளே இல்லை. பொற்கொல்லர்/ தச்சர் என்பதெல்லாம் சாதிய பெயர்கள் அல்ல. தொழில் பெயர்கள். இது புரியாமல் பிரிட்டிஷார் சாதிய சென்சஸ் நடத்தினர். சாதிகளே இல்லாத பொழுது சாதிய கணக்கெடுப்பு தேவை எங்கே வருகிறது? “சாதிய கனக்கெடுப்பு இந்திய சமூகத்தை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது” கர்நாடகா பா.ஜ.க.: “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அறிவியல் அடிப்படை இல்லாதது; இந்து மதத்தை பிளக்கவே பயன்படும். அதன் நோக்கம் வேறு இல்லை.” பிகு மாத்ரே/ மும்பை பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பொய்வாதி “இந்த பாம்புகள் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகின்றனர். பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் எண்ணிக்கை 52% அல்ல; 41%தான் என சமீபத்திய அரசின் ஆய்வறிக்கையை சீர்குலைப்பது இதன் நோக்கம்”
ராகுல் சிவஷங்கர்/ பா.ஜ.க. ஆதரவு ஊடக வியலாளர்:
“நம்மை பிளவுபடுத்த 75 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷார் சாதியை கேட்டனர். 75 ஆண்டுகளுக்கு பின்னரும் அரசியல்வாதிகள் சாதியை கேட்டுக்கொண்டுள்ளனர்.” 2024 டிசம்பர் மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரியதற்காக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் வழக்கை ஏற்றுக்கொண்டது.
ஜூலை 20/2021 அன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நித்யானந்த ராய் சொன்னது: “
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்பது ஒன்றிய அரசின் கொள்கை அடிப்படை முடிவு”. நரேந்திர மோடி: “சாதிவாரி கணக்கெடுப்பு கேட்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் பாவத்தை செய்கின்றனர்.” “சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அர்பன் நக்சல்களின் சிந்தனை” இவர்கள் அனைவரும் இப்பொழுது மோடியின் முடிவை அரசியல் “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என வாய் கூசாமல் மாற்றிச் சொல்கின்றனர். நம்மைவிட வலிமையான நிறம்மாறிகள் உள்ளனரோ என பச்சோந்திகள் வெட்கப்படும் நேரம் இது!