tamilnadu

img

காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு! அங்கன்வாடி ஊழியர் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சமூக நலத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டபடி மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள 21 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும், ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பயனாளிகளின் முகத்தை பதிவு செய்யும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (மே 2) மாநிலம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதன் ஒருபகுதியாக சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று இயக்குநர் மெர்சி ரம்யா சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், மாநில தலைவர் எஸ்.ரத்தின மாலா, பொதுச் செயலாளர் டி.டெய்சி, சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின் ஊழியர்களிடம் பேசிய தலைவர்கள், “பிரதான கோரிக்கைகள் மீது மே 22ந் தேதிக்குள் அரசு உயர் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும். குறுமையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் படிகள் உறுதிப்படுத்தப்படும். பதவி உயர்வு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட உறுதிகளை இயக்குநர் வழங்கி உள்ளதை தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக  அறிவித்தனர்