அன்பு அறமாக எழுந்தால்...!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலை ஞர்கள் சங்கம் ஐம்பதாண்டுகளை நிறைவு செய்து தனது 16ஆவது மாநில மாநாட்டிற்குச் செல்லும் இவ்வேளையில் நாடு வெறுப்பின் பிடியில் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறது. பாலினம், சாதி, மதம், பொருளாதார நிலை சார்ந்து பிறர் மீதான வெறுப்பு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தீவிர மடைந்துள்ளது. மனிதர்களை அவர்களுக்குள்ள பன்முகப்பட்ட அடையாளங்களுடன் ஏற்று இணங்கி வாழ்கிற சகிப்புத்தன்மையை கைவிட்டு, தானல்லாத மற்றவர்களின் அடையாளங்களை தனக்கு எதிரா னவை என்கிற கற்பிதத்தில் வெறுத்தொதுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஒருவரது அறிவு, ஆற்றல், தகுதி, திறமை, பங்களிப்பு எதையும் பொருட் படுத்தாமல் அவரை பிறப்பின் அடிப்படையில் பாகு படுத்திப் பார்க்கக்கூடிய பார்ப்பனியக் கண்ணோட் டம் திடப்பட்டு வருவதன் விளைவு இது.
இத்தாலி, ஜெர்மனி போல... சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றின் எதிர்மறையே பார்ப்பனியம் என்று அம்பேத்கர் ஆய்ந்தறிந்து சொன்னதை கவனத்தில் கொண்டால் இந்துத்துவம் என்பது மரு வைத்துக் கொண்ட பார்ப்பனியம் தான் என்றுணர முடியும். வாக்களிக்கப்பட்ட சியோன் மலைக்குத் திரும்புவது யூதர்களின் உரிமையாகும் என்று சொல்லும் சியோனி ஸ்ட்டுகளைப் போல, சநாதன தர்மத்தின்படி இயங்கும் வாழ்க்கை முறைக்கு இந்தியாவைத் திரும்பவும் அழைத்துச்செல்வது தமது உரிமை யெனப் பார்ப்பனியர்கள் கருதுகின்றனர். அந்த நோக்கத்தை எட்டுவதற்கு 1925ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவந்த அவர்கள் ஒருகட்டத்தில் இந்த மாபெரும் நாட்டின் அரசியலதிகாரத்தை பாஜக மூலம் கைப்பற்றிவிட்டது வரலாற்று அவலம். ஆட்சி யைக் கைப்பற்ற மக்களாட்சி முறையைப் பயன் படுத்திக் கொள்வது, ஆட்சியைப் பிடித்ததும் சர்வாதி கார முறையில் ஆட்சியை நடத்துவது என்று கடந்த நூற்றாண்டில் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் ஆட்சி யாளர்கள் மெய்ப்பித்ததை நாம் இப்போது இந்தியா வில் கண்டுணர்கிறோம்.
மக்களாட்சித் தொட்டில் என பீற்றிக் கொண்டு... மீச்சிறு பகுதியினரின் நலன்களையும் மேலாதிக் கத்தையும் முன்னிலைப்படுத்துவதாக இந்தியச் சமூ கத்தை மறுகட்டுமானம் செய்வதற்காக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனியர்களுக்கு இயல்பாகவே மக்களாட்சி வெறுக்கத்தக்கதேயாகும். எனவே அவர்கள் மக்களாட்சியின் தொட்டில் என்று பீற்றிக் கொண்டே அரசியல் சாசன நிறுவனங்கள் அனைத் தையும் ஆர்.எஸ்.எஸ்.சாகாக்களாகவும் ஆளுங்கட்சி யின் கிளைகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பல கட்சி முறை நீடிப்பதையும் குறிப்பிட்ட கால ஒழுங்கில் தேர்தல்கள் நடப்பதையும் வைத்து இங்கே மக்களாட்சி நிலவுவதாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அந்தத் தேர்தல்களையும்கூட மோசடியாக நடத்தி, வேண்டிய முடிவை அபகரித்துத் தருவதற்கா னதாக தேர்தல் ஆணையத்தை மாற்றிவிட்டனர்.
இடையறாத பதற்றத்தில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்தல் தேர்தல்கள், ஆட்சி மாற்றங்களுக்கப்பால், ஒருவர் தன் சகமனிதர்களுடன் அன்றாடம் எவ்வாறு வாழ்கி றார் என்பதும் சிறுபான்மையினர் அச்சமற்று சுதந்திர மாக வாழ்வதும், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிகள் இயங்குவதும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உறுதிசெய்யப்படுவதும் மக்களாட்சிக்கான நிபந்த னைகள் என்னும் அண்ணல் அம்பேத்கரின் வழிகாட்டு தல்களுக்குப் புறம்பாகவே ஆட்சி நடத்துகின்றனர். மக்களின் அன்றாட வாழ்வில் தொடர்ந்து மூர்க்க மாகத் தலையிட்டு மக்களை இடையறாத பதற்றத்தில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்வதுடன் அரசு என்பதை சமூகத்திற்கு மேலானதாக நிறுவ முயற்சித்து வருகிறார்கள். மிகவும் தனித்து விடப்பட்டவர்களாக, இந்த நாட்டின் குடியுரிமை, உயிர் வாழும் உரிமை உள்ளிட்ட இயல்புரிமைகள் அனைத்தையும் இழந்து கொண்டிருப்பவர்களாக எண்ணி உழலும் நிலைக்கு மதச்சிறுபான்மையினர் மீது வெறுப்பையுமிழ்ந்து ஒடுக்கிவருகிறார்கள். இஸ்லாமியரது வீடுகள், தொ ழிற்கூடங்கள், வணிகமையங்கள் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துகிறார்கள். மீரட்டில் இந்து ஒருவர் தனது வீட்டை இஸ்லாமியருக்கு விற்றதை ஏற்கமுடியா தென்றும் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டு மென்றும் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய அமைப்பு கள் அந்த வீட்டை முற்றுகையிடுமளவுக்கு வெறுப்பு பரவியிருக்கிறது.
2025 ஜனவரி முதல் ஜூலை முடிவதற்குள்ளா கவே கிறிஸ்தவர்கள் மீது 334 திட்டமிட்ட தாக்கு தல்கள் நடந்துள்ளன. சிறுபான்மையினரின் வழி பாட்டுத்தலங்களை ஆக்கிரமிப்பது, வழிபாடு நடக்கும்போது அத்துமீறி நுழைந்து இடையூறு செய்வது, கட்டாய மதமாற்றம் செய்வதாக பழிசுமத்தி சிறையிலடைப்பது என தொடரும் தாக்குதல்களுக்கு ஆட்சியாளர்கள் ஆதரவுடன் பரப்பப்படும் வெறுப்பரசி யலே காரணம். சமூகத்தை நாம் அவர்கள் என்று பிரிக்கிற வெறுப்பரசியல் ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தி அதன் தடயங்களையும் அழித்தப்பின்பு தான் முற்றுப் பெறுகிறது என்பதற்கு சமகாலத் திலேயே பல சான்றுகள் உள்ளன. எனில் இங்கும் அப்படியொரு கொடூரம் நடப்பதற்கு, பெரும்பான்மை வாதத்திற்குள் சிக்கியிருப்பவர்கள் கொலைகாரர் களாக மாறுவதற்கு உகந்த சூழலை பார்ப்பனிய ஆட்சி யாளர்கள் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.
இழிவுச் சதி, உளவுச் செயலி தமது கருத்துக்கு எதிர்ப்போ விமர்சனமோ மாற்றுக்கருத்தோ அதிருப்தியோ வெளிப்படுத்துகி றவர்கள் மீதான வெறுப்பினால் அவர்களை அர்பன் நக்சல்கள், தேசவிரோதிகள், அன்னிய கைக்கூலிகள் என்று முத்திரை குத்தி பொய்வழக்குகள் புனைந்து சிறையிலடைக்கிறார்கள். மாற்றுக் கருத்தாளர்க ளையும் மனிதவுரிமைப் போராளிகளையும் மௌன மாக்க எவ்வளவு இழிவான சதிகளிலும் இன்றைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவார்கள் என்பதற்கு பீமாகோ ரேகான் 16 என்கிற வழக்கில் சிக்கவைக்கப்பட்ட 16 ஆளுமைகளே சாட்சி. இந்த ஆளுமைகளில் ஒருவரது கணினிக்குள் ஆட்சியாளர்களுக்காக ஊடுருவிய ஓர் உளவாளி தயாரித்துச் செருகிய சதியாவணத்தை சான்றாவணமாகக் காட்டித்தான் கைது செய்தார் கள். இதேரீதியில் பெகாசஸ் என்கிற இஸ்ரேலிய உளவுச்செயலியை எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரது செல்போனுக்குள் இறக்கி வேவு பார்த்தார்கள். இப்போது குடிமக்கள் ஒவ்வொரு வரது அசைவையும் இடையறாது கண்காணிக்கும் நோக்கில் சஞ்சார் சாத்தி என்கிற உளவுச்செயலியை கட்டாயமாக செல்போனில் நிறுவும்படி ஆணை யிட்டுள்ளனர். தனிமனிதச் சுதந்திரத்தில் தலை யிடும் இவ்வாணைக்கு எதிராகக் கிளம்பிய கண்ட னங்களுக்குப் பணிந்து இப்போதைக்குப் பின்வாங்கி யிருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் கண்காணிப்பு தொடர்கிறது.
எதிர்க்குரல் எழாமல் தடுக்க... மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கிற, மூட நம்பிக்கை களைப் பரப்புகிற, சமூகப்பாகுபாடுகளை நியாயப் படுத்தி வலியுறுத்துகிற, மாற்றுக்கருத்தாளர்களை அவதூறு செய்கிற எவரொருவருக்கும் ஒன்றிய ஆட்சி யாளர்களின் ஆதரவும் தூண்டுதலும் இருக்கின்றன.
அவர்கள் சுதந்திரமாக இயங்குகின்றனர். ஆனால் மக்கள் நலன் சார்ந்த கருத்துக்களை பொதுவெளி யில் எழுப்புவதற்கான வாய்ப்புகள் குறைந்தபடியே இருக்கிறது. உலகிலேயே அதிகப்படியான நேரம் இணையவசதியை முடக்கும் நாடு இந்தியா. ஊடகச் சுதந்திரம் கடுமையாகப் பறிக்கப்படும் நாடு என்ற அவப்பெயரும் உண்டு. ஆட்சியாளர்களுக்கு வேண்டிய தொழில்முதலாளிகளே பெரும் ஊடக நிறுவனங்களையும் நடத்துவதால் அவர்கள் ஆட்சியின் மீதான விமர்சனங்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதுடன், மக்களின் செய்தியறியும் உரிமையை யும் தடுக்கிறார்கள். ஆட்சியாளர்கள் பக்கம் சாயாத ஊடக நிறுவனங்களுக்கு விளம்பர மறுப்பு உட்பட பல்வேறு இடையூறுகள் செய்து பணியவைக்கும் முயற்சி திட்டமிட்டு நடக்கிறது. சமூக ஊடகங்க ளையும் கட்டுப்படுத்திவிட முடியுமானால் எந்த எதிர்க்குரலும் எழாதபடி தடுத்துவிடலாமென்பது ஆட்சியாளர்களின் கணிப்பு. இப்படியான நெருக்க டிகளால் ஊடகவியலாளர்களும் கலை இலக்கியவாதி களும் தமது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடு வதற்கு அஞ்சி சுயத்தணிக்கைச் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலநிலை க்கு எதிராக, பொதுவெளியில் அச்சமின்றி குரலு யர்த்த தமுஎகச மாநாடு வழிகாண வேண்டியுள்ளது.
வரலாற்று மோசடிகள்... ஆரியர், வேதங்கள், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீதான பிடிப்பின் காரணமாக அவற்றை முதன்மைப் படுத்தும் வேகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கு வரலாற்றுண்மைகள் மீது அளவில்லா வெறுப்பு. எனவே அவர்கள் வரலாற்றைத் திரிக்கின்றனர். தொல் திராவிடர்களுக்குரியதென ஆய்வாளர்க ளால் சுட்டப்படும் சிந்துவெளி நாகரிகத்தை ஆரியர்க ளுக்குரியது – சிந்து சரஸ்வதி நாகரிகம்- என்கின்றனர். சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலமொழி, ஆரியப் பண்பாடே இந்தியப் பண்பாடு, வேதமே அனைத்து தத்துவங்களுக்கும் உறைவிடம் என்று முன்னிறுத்தப் பார்க்கின்றனர். பாடநூல்கள், கல்விக்கூடங்கள், இணையதளங்கள், பெருஞ்செலவிலான காசி சங்கமம் போன்ற நிகழ்வு கள், ஆளுநர் மாளிகை போன்ற அதிகார மையங்கள், கூலிக்குப் பணியமர்த்தப்பட்ட போலி ஆய்வு மையங்கள் வழியாக இந்த வரலாற்று மோசடிகளை உண்மைபோல நிறுவிக்காட்டும் இழிமுயற்சி தடுக்கப்பட்டாக வேண்டும்.
இந்த மண்ணின் பூர்வகுடிகள் மீதும் அவர்களது பண்பாட்டு வழமைகள் மீதும் ஒன்றிய ஆட்சியா ளர்கள் கொண்டுள்ள வெறுப்பு வரலாற்றுப் பகைமையாக வெளிப்படுகிறது. திராவிடவியல் கருத் தாக்கம் மீது இடையறாத தாக்குதல் தொடுக்கின் றனர். தமிழை நேசிப்பதாக பாசாங்கு செய்து கொண்டே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் எதிராக இயங்குவது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பது, தமிழ் நாட்டில் மதப்பகைமையைத் தூண்டிவிட்டு அமைதி யின்மையை ஏற்படுத்துவது என அவர்களது வெறுப்பி னால் தமிழகம் அலைக்கழிகிறது. கங்கைச் சமவெளி யில் ஆரியர் குடியேறிய காலத்தைவிட தொன்மையா னது என்ற காரணத்தினாலேயே கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படாமல் இருப்பதனை ஏற்கவியலாது.
ஆயுதங்களை முனை முறிக்கும் அன்பு ஹோமோடிஜிடல்ஸ் என்ற புதிய தலைமுறை மனிதர்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் சாதி மாறி திருமணம் செய்வது உயிரைப் பணயம் வைப்பதாக உள்ளதை அடுத்தடுத்து நிகழும் ஆண வக்கொலைகள் நிரூபிக்கின்றன. ஆனால் சாதியாண வத்தால் கொல்லப்பட்ட தனது காதலனின் பிணத்திற்கு மாலையணிவித்து மணந்துகொண்ட ஒரு பெண் வெளிப்படுத்திய அன்பு சூலாயுதங்க ளையும் வெட்டரிவாள்களையும் வீழ்த்தியிருக்கிறது. அன்பு அறமாக எழுந்தால் வெறுப்பின் கொற்றம் வீழும் என்ற தமுஎகச மாநாட்டு முழக்கம் தரும் நம்பிக்கையும் இதுவே.
