கவுரவமாம் கவுரவம்... இது வெற்றுப் பெருமிதம்!
தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர்
திருப்பூர் ரிதன்யாவின் மரணம், நாமக்கல் ஆர்.டி.ஓ., தம்பதியினர் மரணம், இன்னும் நித்தம் நித்தம் நடந்துவரும் தற்கொலைகள்; அடிக்கடி நடக்கும் ஆணவக் கொலைகள்; அனைத்திற்கும் காரணம் திருமணம்! திருமணம்!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ணயிக்கப் படுவதாக கதைக்கப்படுகிறது. அப்படியானால் இந்த மணங்கள்? சொந்த சாதி, சமமான அந்தஸ்து, 9இல் 8 பொருத்தம், ஜாதகம், நிறம், வரதட்சணை –கார் – பங்களா – பவுன், குலம் - கோத்திரம், செவ்வாய் தோஷம், குருபலன் - இவையெல்லாம் தான் திருமணத்தில் பார்க்கப்படுகின்றன. இவையெல்லாம் அமை யாத திருமணங்கள். நடக்காதவை எத்தனை? எத்தனை? முன்பின் பார்த்திராத பழகாத பெண், பையனுடனே வாழ பழக வேண்டும். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. பெண் பார்த்தவுடன் மாப்பிள்ளை தரும் முதல் பரிசு செல்போன். கொஞ்சம் பேசிக் கொள்கிறார்கள்.
திருமணம்... ஆன பின்பு மாமியார், மாமனார் கொடுமைகள் சொல்லும் தரமன்று. மாமனார், மருமகளை வன்கொடுமைக்குள்ளாக்கியதை தமிழகத்தில் திருசெங்கோட்டில் பார்த்தோம்.
நாமக்கலில் தன் மகளின் காதலை ஏற்க முடியாமல் போலி கவுரவமே பெரிதென்று ரயில் முன் ‘பாய்ந்து’ படித்த பெற்றோர் உயிரை மாய்த்துக் கொண்டனர். சாதிப் பெருமை கருத்து உலாவும், பெருமைகள் பேசி ஆணவக் கொலைகள் நடத்தும் ரவுடிகள் உலாவும் இடமாக மாறிப் போனது நாமக்கல்!
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்குப் பகுதியில், பெண்ணும், பையனும் கலந்து பேசி, மனம் ஒப்பி நடக்கும் எளிமையான திரு மணங்கள் கானல் நீராகப் போய்விட்டன. குடும்பத்திற்கு குடும்பம் போட்டி போட்டு நடக்கும் ஆடம்பர திருமணங்களைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
தொழிலாளிகள் சம்பள உயர்வு கேட்கிறபோது தொழில் செய்ய முடியாத அளவில் உள்ளது; கட்டுபடியாகவில்லை என்று கதைக்கும் முத லாளிகளின் இல்லத் திருமணங்கள் மிகப்பெரிய ஆடம்பரத்தில் திளைக்கின்றன.
கொஞ்ச நாட்களுக்கு முன் நடத்த திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். 2 இட்லி, கொஞ்சம் காய்கறிகள், சுண்டல், 1 பழம், பீடா சாப்பிட்டேன். இது ரூ.5500 என்றார்கள். 1 பிளேட் எடுத்தால் ரூ. 5500 கணக்கு என்றார்கள். பிளேட் எடுக்கிற இடத்தில் தான் எண்ணப்படும். சும்மாவே வந்திருக்கலாம் என்று தோன்றியது!
முகேஷ் அம்பானி திருமணம், குஜராத் வைர வியாபாரி திருமணம், அம்மையார் ஜெய லலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம், நாடு கண்ட மகா ஆடம்பர திருமணங்கள்.
சமீப காலமாக மேற்கு மண்டலத்தில் நடக்கும் திருமணங்கள் இந்த வகை மினி மெகா திருமணங்கள்.
கோவை கொடிசியாவில் கண்காட்சிகள் நடத்தும் வளாகத்தில் திருமணங்கள் 15 ஆயிரம், 25 ஆயிரம், 30 ஆயிரம் அழைப்பிதழ்கள். சொந்த பந்தங்களுக்கு ஒரு வரவேற்பு. வியாபார நண்பர்களுக்கு ஒரு வரவேற்பு. தன்னுடைய தொழிலாளிகளுக்கு ஒரு வரவேற்பு விருந்து. உறுதிப்பேச்சு வார்த்தை (பெண் பார்க்கும் நிகழ்ச்சி) 1000 பேருக்கு விருந்து. நிச்சயதார்த்தம் 2000 பேருக்கு விருந்து. மெகந்தி போடும் நிகழ்ச்சி விருந்து. ‘சங்கீத்’ ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட விருந்து. மணமகன், மணமகள், நண்பர்கள் பார்ட்டி (விருந்து) (ஹோட்டலில் மதுவுடன்). (நிச்சய தார்த்தத்திற்கும் - கல்யாணத்திற்கும் இடையில் எவ்வளவு நாள் காத்திருப்பது” அதனால் ஒரு விருந்து);
இவை மட்டுமா? நிச்சயதார்த்த விருந்து; பட்டினி சாத விருந்து; இரவு வரவேற்பு விருந்து; காலை முகூர்த்த விருந்து; மதியம் பெண் அழைப்பு விருந்து; அப்புறம் சம்பந்தி விருந்து (கறி விருந்து). விருந்தென்றால் 10 வகை இனிப்பு, காய்கறி தொடங்கி 4 வகை ஐஸ்கிரீம், கரும்புசாறு, பாப்கார்ன் வரை 50 அயிட்டங்கள்!. (1 பிளேட் ரூ.1000 தொடங்கி ரூ.6000 வரை)
நிச்சயதார்த்தத்தின் போது மோதிரம் போடுவது அந்த காலம். பெண்ணுக்கு 5 லட்சத்தில் பட்டுச் சேலை. மேலாடை தைக்க மட்டும் ரூ.50 ஆயிரமாம்
மாப்பிள்ளை பையனுக்கு மோதிரமோ, பிரேஸ்லெட் போட்டால் ரொம்ப சிம்பிளாக தெரிந்து விடுமாம்! சமீபத்தில் ஒரு மணப்பெண் மாப்பிள்ளைக்கு 16 லட்சத்தில் ஒரு வாட்ச் பரிசளித்துள்ளார். திருப்பூரில்தான்.
கொச்சியில் கப்பலில் திருமணம். தனி டிரெயின் விடப்பட்டது. 200 பேருக்கு விமான டிக்கெட். அத்துனை பேருக்கும் 5 ஸ்டார் ஓட்டலில் ரூம். வரதட்சணை? உஸ் அதெல்லாம் கேட்கவே கூடாது!
தற்போது உள்ள மண்டபங்கள் போத வில்லை. தனி ஜெர்மன் செட் அலங்காரம் செய்ய திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணி - ரூ.3 கோடி வரை செலவு. தலைமை சமையல்காரர் ‘கேரவனில்’ வந்து தனி மண்டபத்தில் ‘ரெஸ்ட்’ எடுக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அய்யோ தலை சுற்றுகிறது.
இவை ஒருபுறம் இருக்க... சமீபத்தில் அரச்சலூ ரில் திருமணம் செய்ய வந்த ஜோடியை உள்ளே விடாததால் கோயில் வாசலில் நின்று தாலியை மணமகள் கழுத்தில் கட்டி, அருகில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டு விட்டு மணமக்கள் கையை பிடித்துக் கொண்டு நடந்து சென்ற காட்சி மனதை விட்டு அகல மறுக்கிறது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு கிறதாம். அங்கும் தற்கொலைகள், ஆணவக் கொலைகள், சித்ரவதைகள் இருக்குமோ?