articles

img

மாதம் ஒரு நாள் காவல் குறைதீர் முகாம் நடத்துக! தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்

மாதம் ஒரு நாள் காவல் குறைதீர் முகாம் நடத்துக! தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்

திருப்புவனம் காவல் நிலையத்தில் சித்ரவதையால் அஜித் குமார் படுகொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஜூலை 6 ஞாயிறன்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆர்ப்பாட்டத்  தில் உணர்ச்சிமிகு உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசுக்கு 6 முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தார்.

1 காவல் கண்காணிப்பாளர்கள் பொதுமக்களை சந்திக்கட்டும்!

ஒவ்வொரு மாவட்ட காவல் கண் காணிப்பாளரும் மாதத்தில் ஏதாவது ஒரு நாள் முழுக்க பொதுமக்களை சந்திக்க  வேண்டும். மாவட்ட ஆட்சியர் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துகிறார். திங்கள்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து மனுக் களை பெறுகிறார். அதேபோல், காவல்துறை எஸ்.பி.யும் சந்திக்க வேண்டும், என்றார். “29 நாள் நீங்கள் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு செய்யுங்கள்; ஒரே ஒரு நாள் பொதுமக்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.  தற்போது எஸ்பியை பார்க்கவே முடி யாத நிலை உள்ளதாகவும், அமைச்சரை விட, சட்டமன்ற உறுப்பினரை விட, முத லமைச்சரை விட பெரிய பதவி என்பது போல் கர்வத்துடன் எஸ்பிக்கள் நடந்து கொள்வதாகவும் விமர்சித்தார்.  

2 அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்படும் சிசிடிவி கேமரா வேண்டும்  

காவல் நிலையங்களில் நடக்கும் குற்றங்களை நிரூபிப்பதற்கு அல்லது கண்டறிவதற்கு அனைத்து காவல் நிலையங்களிலும் கட்டாயம் வேலை செய்யக்கூடிய சிசிடிவி கேமரா இருக்க வேண்டும்.  “சிசிடிவி கேமரா இருக்கும் இடத்திலும் அது வேலை செய்யாது. எப்போதாவது இந்த மாதிரி பிரச்சனை ஆகி, நீதிபதி கேட்டால் ‘சார் அது ஒரு மாசமாக வேலை செய்யவில்லை. சம்பவம் நடந்த அன்று தான் சார் ரிப்பேர் ஆச்சு, சர்வீஸுக்கு போயிருந்தது சார்’ என்று சாக்கு போக்கு சொல்லும் ஏற்பாடுதான் இருக்கிறது” என்று விமர்சித்தார். 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகள் காலமுறையில் வந்து  பரிசோதிக்க வேண்டும். கேமரா வேலை செய்யவில்லை என்றால் அதற்கு பொறுப் பான காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

3சாட்சிகளுக்கு பாதுகாப்பு  

அஜித்குமார் கொலை வழக்கில் அவரை கோயில் பின்புறம் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதை வீடியோ எடுத்தவர் மிக முக்கியமான சாட்சி. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலருக்கு பாதுகாப்பு தேவை.  “வழக்கு முடியும் வரை சாட்சிகளை பாதுகாப்பது மிகமுக்கியம். ஏனென்றால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல் துறையை சார்ந்தவர்கள். எஸ்பி, டிஎஸ்பி, காவலர்கள், இன்ஸ்பெக்டர் என  இன்னும் உயர் அதிகாரி வரை சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.  32 ஆண்டுகளுக்கு மேலாக வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை நடத்திய அனுபவத்தில், காவல் துறைக்கு எதிராக வழக்கு நடத்துவது எவ்வளவு கடி னம் என்பதை அறிவதாகவும், அவர்கள் சாம பேத தான தண்டம் என எல்லா வழி முறைகளையும் பயன்படுத்துவார்கள் என்றும் எச்சரித்தார்.  

4குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை  

வழக்கில் தீர்ப்பு வரும் வரை  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்களுடைய காவல் அதிகாரத்தை பயன்படுத்தி ஜாமீனிலோ வேறு வகையிலோ வெளியே வருவதை தமிழ்நாடு அரசாங்கம் அனு மதிக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் அவர்கள் வெளியில் வரக்கூடாது.  மேலிருந்து அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பது இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை. “யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி என்பதை டிஎஸ்பியின் போனையோ எஸ்பியின் போனையோ வாங்கி பார்த்தால் எல்லா தகவல்களும் கிடைக்கும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

 5பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதுமான இழப்பீடு

அஜித்குமாரின் தாயார் சிறு வயதில் கணவனை இழந்தவர்; இரண்டு குழந்தைகளையும் படிக்க வைப்ப தற்கும் வளர்ப்பதற்கும் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.  வீடு, வேலைவாய்ப்பு கொடுத்ததை வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று பாராட்டிய பெ.சண்முகம், “வழக்கு நடந்து கொண்டிருக்கட்டும். அஜித்குமார் கொலை செய்யப்பட்டு இறந்து போனது உண்மை. அதை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே இழப்பு இழப்புதான்” என்று குறிப்பிட்டு, அவரது தாயாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரினார்.  

6 சித்ரவதை  தடுப்பு சட்டம்  

இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்கிற முறையில், காவல் நிலையத்தில் நடக்கும் சித்ரவதைகளை தடுக்கக்கூடிய வகையில் ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். “சட்டமன்றத்தின் கூட்டத்தொடருக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்தி உடனடியாக இத்தகைய சித்ரவதை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.