இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு அதிகரிக்கும் ஆபத்து: கேள்விக்குறியாகும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள்
மகாராஷ்டிரா அரசு 2013-ஆம் ஆண்டு இயற்றிய மாந்திரீக தடுப்புச் சட்டத்தின் கீழ், உள்நோக்கத்தோடு தடை செய்யப்பட்ட கிறிஸ்தவப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘
மகாராஷ்டிரா பொது அறக்கட்டளைகள் சட்டம், 1950’-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ‘ஹோப் ஆஃப் குளோரி மினிஸ்ட்ரி டிரஸ்ட்’ (Hope of Glory Ministry Trust) சார்பில் மும்பை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மும்பை காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் சட்டவிரோ தமான முறையிலும், பொதுமக்களின் அடிப் படை உரிமைகளுக்கு எதிராகவும் செயல் பட்டுள்ளன என்பதை நீதிபதிகள் மாதவ் ஜே. ஜாம்தார், பிரவின் எஸ். பாட்டீல் ஆகியோர் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர். வழக்கின் பின்னணி என்ன? ‘ஹோப் ஆஃப் குளோரி மினிஸ்ட்ரி டிரஸ்ட்’ சார்பில் ‘மகாராஷ்டிரா பிரார்த்தனை விழா - 2026’ என்ற தலைப்பில் மார்ச் 13 முதல் 15 வரையில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரி எம்.ஐ.டி.சி-யிடம் (MIDC) விண்ணப்பித் துள்ளனர்.
அதற்காக இடப் பயன்பாட்டுக் கட்டணமாக ரூ.1,69,920, கூடுதலாக வைப்புத்தொகை ரூ. 1,44,000 ஆகிய தொகை களையும் அந்த அறக்கட்டளையின் தலைவர் திலீப் போரே செலுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்வை நடத்து வதற்கான அனுமதியை எம்.ஐ.டி.சி (மகா ராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) வழங்கி யிருந்தது. டாக்டர் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர் 3 நாள் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரு வாய்த்துறை, பஞ்சாயத்து நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத்துறை என அனைத்து இடங்களிலும் பெறப்பட்ட ஒப்புதலைத் தொ டர்ந்து 07-03-2026 அன்று நிகழ்ச்சி நடத்து வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
திடீர் ரத்துகளும் நிர்வாகத்தின் முரண்பாடுகளும் சாங்லி ஊரகக் காவல் நிலையம் சார்பில் வழங்கப்பட்ட ஒப்புதல் 09-03-2026 அன்று திடீர் என்று ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் அறக்கட்டளை சார்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி 12-03-2026 அன்று நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுமதியைப் பெறுகிறார்கள். திட்டமிட்டபடி, 13-03-2026 அன்று மகா ராஷ்டிரா பிரார்த்தனை விழா - 2026, சாங்லி - தாஸ்கான் சாலையில் உள்ள கவலாப்பூர் விமான நிலைய மைதானத்தில் நடைபெறு கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மக்கள் அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எந்தவிதமான சட்டம் - ஒழுங்கு பாதிப்போ, பிற மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையி லான பேச்சுக்களோ இல்லாத நிலையில், 14-03-2026 அன்று அதிகாலை 2 மணிக்கு நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை சாங்லி ஊரகக் காவல் நிலையம் மீண்டும் ரத்து செய்கிறது.
அதோடு நிற்கவில்லை. உள்ளூரில் உள்ள இந்துத்துவ அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் கருப்பு மந்திரச் சட்டத்தின் (Black Magic Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மனிதப் பலி மற்றும் பிற அமானுஷ்ய, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் கருப்பு மந்திரத் தடுப்பு மற்றும் ஒழிப்புச் சட்டம், 2013-இன் கீழ் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், முதல் தகவல் அறிக் கையை இன்னும் இணையதளத்தில் மும்பை காவல்துறை பதிவேற்றம் செய்யவில்லை. கிறிஸ்தவப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்திய தற்காக மகாராஷ்டிராவின் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும். கருப்பு மந்திரச் சட்டமும் நீதித்துறை விளக்கமும் இந்த நேரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ் மதுகர் மோடக் என்கிற சிவகிருபானந்த சுவாமி என்பவர் மீது கருப்பு மந்திரச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் (ரோகன் விஸ்வாஸ் குல்கர்னி எதிர் மகாராஷ்டிரா அரசு - கிரிமினல் ரிட் மனு எண். 2595/2023), மும்பை உயர்நீதிமன்றம் 02-04-2025 அன்று பிறப் பித்த உத்தரவில் என்ன கூறியுள்ளது என்பதை நினைவூட்டுவது அவசியம்.
அதில் மும்பை உயர்நீதிமன்றம் கீழ்க் கண்டவாறு கூறியுள்ளது: “கருப்பு மந்திரச் சட்டம் என்பது மனிதப் பலிகள், மோசடி சடங்குகள் மற்றும் உளவியல் ரீதியான சுரண்டல்கள் உள்ளிட்ட தனிநபர்களுக் கும் சமூகத்திற்கும் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் தீங்கு விளைவிக்கும் நடை முறைகளைக் கட்டுப்படுத்தவே இயற்றப்பட்டது; இது சட்டப்பூர்வமான மத நடைமுறைகள், பாரம்பரிய அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கலாச்சார அல்லது கலை வெளிப்பாடு களை வெளிப்படையாக விலக்குகிறது.” அதாவது, மகாராஷ்டிராவின் கருப்பு மந்தி ரச் சட்டம் சட்டப்பூர்வமான மத மரபுகளைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாகத் தீங்கு விளை விக்கும் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவ தற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இருந்தபோதும், உள் நோக்கத்துடன் மகாராஷ்டிரா அரசு மற்றும் காவல்துறை, அறக்கட்டளை சார்பில் பிரார்த் தனை நிகழ்ச்சி நடத்தியதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளது. அடிப்படை உரிமைகள் மீதான அப்பட்டமான மீறல் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை 14-03-2026 அன்று திடீரென்று நள்ளிரவில் ரத்து செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் மாதவ் ஜே. ஜாம்தார், பிரவின் எஸ். பாட்டீல் அமர்வு அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 13-ஆம் தேதி நடத்தப்பட்ட பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிற மதங்களையோ, பிற மதத்த வர்களின் வழிபாட்டுத் தலங்களையோ அல்லது அவர்களின் மத நம்பிக்கைகளையோ விமர்சிக் கும் வகையிலான கருத்துகள் முன்வைக்கப்பட வில்லை என்பதை நீதிபதிகள் உறுதிப்படுத்தி யுள்ளனர்.
“அத்தோடு, 2026 மார்ச் 7-ஆம் தேதி குறிப்பிட்ட நிகழ்விற்கு அனுமதி அளித்துவிட்டு, பின்னர் மார்ச் 9-ஆம் தேதி அந்த அனு மதியை ரத்து செய்து, மீண்டும் மார்ச் 12-ஆம் தேதி அனுமதி அளித்து, இறுதியாக நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, மார்ச் 14-ஆம் தேதி அதிகாலை 02:00 மணிக்கு மீண்டும் அந்த அனுமதியை ரத்து செய்திருப் பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோத மான முறையிலும், உள்நோக்கத்துடனும் செயல்படுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பிட்ட அந்த நிகழ்விற்காக அங்கு திரண்டிருந்த பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்பது மிகத் தெளிவாகிறது,” என்று நீதிபதி அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கிறிஸ்தவத் திருச்சபைகள், தேவாலயங்கள் மீது வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், கருப்பு மந்திரச் சட்டத்தில் வழக்கை பதிவு செய்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள் ளது மகாராஷ்டிரா அரசு. பாஜக ஆளும் மாநி லங்களில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள், அழுத்தங்கள் அதிகரித்து வரு வதை மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை மட்டும் நசுக்கும் வகையில் உள்நோக்கத்தோடு அரசும், காவல்துறையும் செயல்படுவது மத சுதந்திரத்திற்கு மட்டுமல்ல மனித வாழ்வுக்கே ஆபத்துதான்.
