ஒளிரும் துளசி - புதுச்சேரி அன்பழகன்
துளசி ஐந்தாம் வகுப்பு மாணவி. அவளது அம்மா ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர். படிப்புதான் முதல் அடையாளம், வகுப்பில் முதல் ரேங்க் தான் முக்கியம்’ என்பது அம்மாவின் தீராத ஆசை. அன்று காலை, வீடே பரபரப்பாக இருந்தது. புத்தகங்களை அடுக்கிக்கொண்டே அம்மா கேட்டார், `துளசி, இன்று மாலை நூலகத்தில் இலக்கியக் கூட்டம் நடக்கிறது. வருகிறாயா? ‘என்றார். துளசிதயக்கத்துடன், `நான் வந்தால் உங்களுக்குச் சிரமமாக இருக்குமா அம்மா? ‘ எனக் கேட்டாள். `அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தால் சிரமம் ஏதுமில்லை’ என்றார் அம்மா சுருக்கமாக. மாலை ஐந்து மணி. நூலக மண்டபத்தில் மக்கள் கூடத் தொடங்கினர். ஒரு மூலையில் அமர்ந்திருந்த துளசிக்கு முதலில் சலிப்பாக இருந்தாலும், மெல்ல அவளது கண்கள் அங்குள்ள குறைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.. மேடையின் நீல நிற விரிப்பு ஒரு பக்கம் சுருண்டு கிடந்தது. வரவேற்பு அட்டையில் ஒரு பெயர் மங்கலாகத் தெரிந்தது. விருந்தினர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதில் சிறு குழப்பம் நிலவியது. `இதை இன்னும் நேர்த்தியாகச் செய்யலாமே..’ என்று அவளது பிஞ்சு மனம் யோசித்தது. அன்றைய கூட்டம் ஒருவழியாக முடிந்தது. அடுத்த மாதக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி அம்மா போனில் பேசிக் கொண்டிருந்தார். துளசி மெதுவாகச் சென்று, `அம்மா, இந்த முறை நானும் என் நண்பர்களும் வந்து உதவலாமா? ‘ எனக் கேட்டாள். அம்மா அவளை ஏறெடுத்துப் பார்த்து, `உன்னால் என்ன செய்ய முடியும் துளசி? பேசாமல் உன் பாடங்களைப் படி, அது போதும்’ என மறுத்துவிட்டார். ஆனால் துளசி விடுவதாக இல்லை. தன் நண்பர்களான ஹரிணி மற்றும் ரேவதியுடன் சேர்ந்து ஒரு ரகசியத் திட்டம் தீட்டினாள். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி அம்மாவிடம் அனுமதி பெற்றுவிட்டாள். கூட்ட நாள் வந்தது. ஆனால் தொடங்குவதற்கு முன்பே ஒரு பெரிய சிக்கல், ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை! ஏற்பாட்டாளர்கள் பதற்றமடைந்தனர். அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தன.துளசி சட்டென முன்வந்து சொன்னாள், `அம்மா, கவலைப்படாதீர்கள்! மைக் இல்லையென்றால் என்ன? நாம் அனைவரும் நாற்காலிகளை வட்டமாகப் போட்டு அமரலாம். அப்போதுதான் நெருக்கமாகவும் இருக்கும், பேசுவது எல்லோருக்கும் தெளிவாகக் கேட்கும்.’ அவளது யோசனை ஏற்கப்பட்டது. கூட்டம் மிகவும் நெருக்கமாகவும், கலகலப்பாகவும் தொடங்கியது. துளசியும் அவளது நண்பிகளும் கூட்டத்தை கவனமாக கேட்டனர். இறுதியில் கூட்டத்தின் முக்கிய கருத்துகளை ஒரு காகிதத்தில் குறித்தனர். ஆளுக்கு ஒரு கருத்தை டிஸ்பிளே செய்வது என முடிவு செய்தனர். இதை ஒரு புதிய முறையில் வெளிப்படுத்த முடிவு செய்தனர். கூட்டம் முடியும் தருவாயில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது! மண்டபம் முழுவதும் காரிருள். மக்கள் சலசலக்கத் தொடங்கினர். அப்போது இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் கேட்டது. `போர் வேண்டாம்... சமாதானம் வேண்டும்! ‘ - துளசியின் குரல் அது. ஒரு சிறிய மெழுகுவர்த்தி ஒளியை அவள் ஏற்றினாள். தொடர்ந்து ஹரிணி ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, `குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்! ‘ என்றாள். அடுத்து ரேவதி ஒளியை ஏற்றி, `குழந்தைகளின் யோசனைகளும் உலகிற்கு முக்கி யம்! ‘ என்றாள். ஒவ் வொரு குழந்தை யாக மெழுகுவர்த்தி களை ஏற்ற, இரு ளில் மூழ்கியிருந்த மண்டபம் மெல்ல மெல்ல ஒளியால் நிறைந்த நிலவறை போல மாறியது. அந்தத் தற்காலிக இருளைக் குழந் தைகள் ஒரு கலை நிகழ்ச்சியாகவே மாற்றிவிட்டனர். கூட்டத்தில் இருந் தவர்கள் நெகிழ்ந்து போய் கை தட்டினர். சிறப்பு விருந்தினர் எழுந்து, `இன்றைய கூட்டத்தின் நாயகி துளசிதான். அவளது சமயோசித புத்தியும், துணிச்சலும் தான் இந்த நிகழ்ச்சியை அழகாக் கியது’ எனப் பாராட்டினார். அம்மாவின் கண் களில் கண்ணீர் அரும்பியது. அது வருத்தத்தினால் அல்ல, பெருமையினால் வந்த கண்ணீர். வீட்டிற்கு வந்ததும் துளசியை இறுக அணைத்துக் கொண்டார் அம்மா. `மன்னித்துவிடு துளசி. மதிப்பெண் மட்டும்தான் வாழ்க்கை என்று நினைத்துவிட்டேன். உன் ஆளுமை, உன் தலைமைப் பண்பு, உன் தைரியம்... இதுதான் உன்னுடைய உண்மையான பலம்! ‘ என்றார். துளசியின் முகம் அந்த மெழுகுவர்த்தி ஒளியை விடப் பிரகாசமாக மின்னியது.
