கேரள தேர்தல் களத்தில் ‘டிஜிட்டல்’ புரட்சி!
“எல்லாம் சரியாகும்” முதல் “நவகேரள மிஷன்” வரை! 2016-இல் “எல்.டி.எப் வரும், எல்லாம் சரியாகும்” என்ற முழக்கத்துடன் ஆட்சியைப் பிடித்த இடதுசாரிகள், வெறும் வாக்குறுதிகளோடு நிற்கவில்லை. ‘ஆர்த்ரம்’ (சுகாதாரம்), ‘லைஃப்’ (வீட்டுவசதி), ‘ஹரிதகேரளம்’ (சுற்றுச்சூழல்) போன்ற திட்டங்கள் மூலம் அடிதட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றினர். அதன் விளைவாகவே, 2021-இல் கேரள வரலாற்றில் முதன்முறையாகத் தொடர் ஆட்சி மாற்றத்தை முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். தற்போது 2026-இல், “வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை” என்ற இலக்கோடு, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை (Knowledge Economy) நோக்கி கேரளம் நடைபோடுவதைச் சாதனை யாக பிரச்சாரத்தில் முன்னிறுத்துகின்றனர். இணையத்தை அதிரவைக்கும் ‘கலாமே’ ராப் இசை! இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் நவீன இசை ஆல்பங்களை எல்.டி.எப் களமிறக்கியுள்ளது. பிரபல ராப் பாடகர் வேடன் பாடியுள்ள “கலாமே” என்ற பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக ஊடகங்களில் ட்ரெண்டானது. கேரளத்தின் முன்னேற்றப் பாதையை நவீன இசையில் விளக்கும் இந்தப் பாடல், புதிய தலைமுறை வாக்காளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சித்தாரா கிருஷ்ணகுமார், முருகன் காட்டாக்கடா, கௌரி லட்சுமி போன்ற முன்னணிக் கலைஞர்களின் குரலில் ஒலிக்கும் பாடல்கள், முந்தைய ‘இருண்ட கால’ மின்தடைகளையும், கல்விச் சீரழிவையும் நினைவூட்டி, இன்றைய ஒளிரும் கேரளத்தை லாவகமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நடமாடும் டிஜிட்டல் திரைகள்: ஒரு புதுமை உத்தி! கேரளத்தின் மக்கள் கூடும் இடங்களில் இளைஞர்கள் சிலர் தங்கள் முதுகில் ‘கேரி பேக்’ போல டிஜிட்டல் திரைகளைத் தாங்கி நடக்கின்றனர். அந்தத் திரைகளில் வேட்பாளர்களின் உரைகள், அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் பாடல்கள் ஓடுகின்றன. இந்த ‘நடமாடும் டிஜிட்டல் விளம்பரம்’ வாக்காளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டுப் பாடி வாக்குக் கேட்கும் ‘ஸ்டார்’ வேட்பாளர்! எர்ணாகுளம் மாவட்டம் அரூர் தொகுதியின் எல்.டி.எப் வேட்பாளர் தலிமா ஜோஜோ ஒரு சிறந்த பாடகி. அவர் பிரச்சார மேடைகளில் ‘கிழக்கே சூரியன் உதிச்சல்லோ’ போன்ற பாடல்களைப் பாடி மக்களைக் கவர்கிறார். குறிப்பாக, வேம்பநாட்டு காயலில் ரூ. 100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரும்பளம் தீவு பாலத்தின் அவசியத்தையும், அதன் மூலம் மக்கள் அடைந்துள்ள நன்மைகளையும் பாடலாகவே விளக்கி வருகிறார். பல பத்தாண்டுக் காலத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இடதுசாரி அரசின் சாதனையை அவர் பாடும் விதம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதனை சொல்லும் சங்கீதம்! காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப் (UDF) மற்றும் பாஜக-வின் என்.டி.ஏ (NDA) ஆகிய கூட்டணிகள் எல்.டி.எப் அரசின் சாதனைகளைத் திசைதிருப்ப முயன்றாலும், மக்களின் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் திட்டங்களை யாராலும் மறைக்க முடியாது. “ஒன்றாகப் பயணிப்போம்... உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்வோம்” என்ற முழக்கம் கேரள மக்களின் மனநிலையாகவே மாறியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் கம்யூனிஸ்டுகளின் இந்த ‘ஹை-டெக்’ பிரச்சாரம், வெற்றிக் கனியை மீண்டும் எல்.டி.எப் வசமாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!