articles

img

வெறுப்பின் கொற்றம் வீழ்க! அருணன் பேச்சு

வெறுப்பின் கொற்றம் வீழ்க!  அருணன் பேச்சு

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 16வது மாநில மாநாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் அருணன், 1975 ஆம் ஆண்டு நடந்த முதல் மாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார். 

மனுவாதப் பேராபத்து  1975-இல் மதுரையில் தமுஎச மாநாடு கூடியபோது, இன்றைய தினம் எழுந்துள்ள மனுவாத மதவெறிப் பேரபாயம் இல்லை என்று அவர்  குறிப்பிட்டார். மதவெறி, சாதிவெறி, இனவெறி கூடாது என்று பொதுவாகப் பேசியிருந்தாலும், மனுவாத மதவெறி சிவில் அமைப்பான ஆர்எஸ்எஸ், அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றி, தொடர்ந்து 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை என்றார்.  வரலாற்றில் விபத்துகள் நடப்பதுபோல, இன்றைக்கு இந்த பேராபத்து வந்திருக்கிறது. அதனால்தான், கருத்தரங்கின் தலைப்பு ‘வெறுப்பின் கொற்றம் வீழ்க’ என்று வைக்கப்பட்டுள்ளது. வெறுப்பு இன்றைக்கு ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறது. அது பாபர்மசூதி இடிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ராமர் கோவில் மீது காவிக் கொடியை ஏற்றி, அதைத் தர்மக் கொடி என்று பிரதமர் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. அவர்களுக்குத் தர்மம் என்றால் அது மனு அதர்மம்தான் என்றும் அவர் சாடினார்.  இந்து ராஷ்டிரம் எனும் மனுராஷ்டிரம்  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு விழாவில், “இந்தியாவும் இந்து மதமும் ஒன்றுதான்” என்று பேசியது குறித்து அருணன் விமர்சித்தார். “இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று தனியாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் நடப்பில் அவர்கள் இந்து ராஷ்டிரத்தை (மனு ராஷ்டிரத்தை) கொண்டு வந்துவிட்டார்கள்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் சுட்டிக்காட்டினார்.  மனுதர்மத்தைப் படித்தால் பிற மதத்தினர் மீதும், பிற வருணத்தினர் மீதும் எவ்வளவு வெறுப்பை அது ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பிற மதத்தினர், சிறுபான்மையினர் இந்தியர்கள் இல்லையா என்ற வேதனையையும் அவர் வெளிப்படுத்தினார். “இந்துக்கள் இல்லையெனில் உலகமே இல்லை” என்று மோகன் பகவத் கூறுவது, சங் பரிவாரக் கூட்டம் உலகத்திற்கே எதிரியாகிவிட்டதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.  தமிழ்ச் சங்கமங்கள் நடத்துவதுகூட, இந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழியிலிருந்து பிறந்தவைதான் என்ற சமஸ்கிருத மேலாதிக்கத்தை தமிழர்களின் நெஞ்சில் ஏற்றுவதற்காகவே என்று குற்றம் சாட்டினார். இத்தனை அக்கிரமங்களும் பிற மத வெறுப்பின் அடிப்படையிலேயே மண்டிக்கிடக்கின்றன. எழுத்தாளர்களும் கலைஞர்களும், இத்தகைய வெறுப்பு மண்டிக்கிடக்கும்போது, அன்பே அறம் என எழுத முன்வர வேண்டும். “அநீதியைச் செய்பவர்கள் மட்டுமல்ல, அதனைக் கண்டு அமைதி காப்பவர்களும் அநீதியாளர்களே” என்று கூறி உரையை முடித்தார்.