“ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது, அது கம்யூனிசம் என்னும் பூதம்,” என்று மாமேதைகள் மார்க்ஸும், ஏங்கெல்சும் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின்’ தொடக்க வரிகளில் குறிப்பிடுவார்கள். இது 1848 ம் ஆண்டுகளில், ஐரோப்பிய முதலாளிகள் தங்களது கொள்ளை லாபத்திற்கு, கம்யூனிச கருத்துகளால் வரும் பேராபத்து கண்டு கிலி கொண்டிருந்ததை காட்டுகிறது. ஆனால், இப்போதும் கூட, இந்தியாவில் மோடிக்கு நெருக்கமான சாமியார், ஜக்கி வாசுதேவின் அலறல், கம்யூனிசம் குறித்த அவரது உளறல், கம்யூனிச பூதம், அவரையும், அவரை போன்றோரையும் பிடித்து ஆட்டுவதையே காட்டுகிறது.
எப்போதும், தனது பக்தசிகாமணிகளிடம் கதாகாலட்சேபம் நடத்திக்கொண்டிருக்கும் ஜக்கியிடம், ஒரு வாசகர் எளிய கேள்வி ஒன்றை கேட்கிறார். அது, “சத்குரு, தொழில் நிறுவனங்களின் கொள்ளை லாப பேராசை பற்றி உங்கள் கருத்து என்ன?” என்பதே. இன்றைய கொரோனா கொள்ளை நோய் காலத்திலும், ஒருசில பெருந்தொழில் நிறுவனங்கள் மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ள நிலையில், இந்த கேள்வி, எளிமையானதே, இயல்பானதே.
ஆனால், அதற்கு விளக்கம் சொல்கிறேன் பேர்வழிஎன்று, சாமியார் ஜக்கி பொங்கிய பொங்கல் லேசுப்பட்டதல்ல. தனது கார்ப்பரேட் நண்பர்களை காப்பாற்ற ஜக்கியின்சம்பந்தா சம்பந்தமற்ற உளறல், கொஞ்ச நஞ்சமல்ல. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா தன்னை ஒரு சோசலிச நாடாக அறிவித்துக்கொண்டதாம். அது வீரியம் குறைக்கப்பட்ட கம்யூனிசம் தானாம். அது தான் நம்நாட்டின் இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாம். அடேங்கப்பா, ஜெகஜாலக் கில்லாடிப்பா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வசனம் வரும், ‘ ஏம்ப்பா, இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதே! ’ என்ற கதையாகத்தான் இருக்கிறது, ஜக்கியின் கதை.
ஏனெனில், சுதந்திர இந்திய அரசு, சோஷலிச பொருளாதாரத்தையோ, முதலாளித்துவப் பொருளாதாரத்தையோ பின்பற்றாமல், தான் ஒரு கலப்பு பொருளாதார நாடு என்றே அறிவித்துக்கொண்டது. இதுவும் கூட அன்றைய சோவியத் யூனியன் உதவிகளையும், அமெரிக்க உதவிகளையும் ஒருசேர பெற்றுக்கொள்ளும் தந்திரமே அன்றி வேறில்லை. ஜக்கி சொல்லும், 25 ஆண்டுகளுக்கு முந்தைய சோஷலிச அறிவிப்பு என்பது, அரசியல் அமைப்புசட்டத்தின் முகவுரையில் செய்த திருத்தம் தான். அதுவும் கூட நோக்கம் குறித்த ஒரு அறிவிப்பு தானேயொழிய, உற்பத்தியிலோ அல்லது பகிர்விலோ செய்த மாற்றம் அல்ல என்பதை ஜக்கியும் அறிவார். ஆனால், ஜக்கியின் கார்ப்பரேட் பாசம், உண்மையை மறைத்துப் பேசத்தூண்டுகிறது.
போதாக்குறைக்கு, ஒட்டுமொத்தமாக, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசு பின்பற்றி வந்த முதலாளித்துவ ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளே இன்றைய பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்பதை மறைத்து, பேருக்கு முழங்கிய சோஷலிசமே அனைத்துக்கும் காரணம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். இதில் உச்சம் என்னவென்றால், காரல்மார்க்சுக்கு பொருளாதாரம் பற்றி வேண்டுமானால் நிறையத் தெரிந்திருக்கலாம், ஆனால், மனிதர்களை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. என்கிறார், இந்த ஜக்கி. “ அடேங்கப்பா, இது உலக மகா நடிப்புடா சாமி” என்ற கவுண்டமணியின் திரை வசனத்தையே நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒருவேளை காரல்மார்க்ஸ், மனிதர்களைப் பற்றி, தான் அறிந்தஅளவிற்கு நன்றாக, அறிந்திருப்பாரேயானால் தன்னைப் போலவே, ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் காட்டை ஆக்கிரமித்து, கார்ப்பரேட்டுகளுக்கு நெருக்கமான செல்வச்சீமானாக செழித்து இருப்பாரே என்று ஜக்கி நினைக்கிறார் போலும்.
மாமேதை மார்க்ஸ், “இறுதியாகப் பார்க்குமிடத்து, மனிதர்களின் சிந்தனையை தீர்மானிப்பது, அவன் வாழும் பொருளாதார சூழல்களே,” என்பதை தனது வாழ்நாள் ஆய்வுகளின் மூலம் நிரூபித்தவர். மனிதர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கே மூலதனத்தின் மூலாதாரத்தை ஆய்வு செய்யப் புகுந்தவர். பாவம் ஜக்கி, இவருக்கு இதெல்லாம் தெரிந்திருந்தால் தான், கோவையின் வனப்பகுதிக்கோ, நிலங்களுக்கோ, ஒரு சேதாரமும் வந்திருக்காதே!மனிதர்களைப் பற்றி தெரியாமல் தான் மார்க்ஸ், மக்கள் அனைவரும் செல்வங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள், அதன் பின் இந்த உலகம் பிரமாதமாக மாறிவிடும் என்றாராம். அது ஒரு அற்புதமான கனவாம், கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறதாம். பாவம் ஜக்கி, கம்யூனிசத்தை அறிய காரல்மார்க்ஸ் வரை கூட சென்று சிரமப்பட்டிருக்க வேண்டியது இல்லை. ஜக்கி வந்து குந்தியிருக்கும் இதே தமிழகத்தில் தெருவெல்லாம் முழங்கும், பட்டுக்கோட்டையாரின், “ வசதி படைத்தவன் தரமாட்டான்; வயிறு பசித்தவன் விடமாட்டான்,” என்ற பாலபாடத்தை கேட்டிருக்கலாம், ஜக்கிக்கு இத்தனை சிக்கல், சிரமம் வந்திருக்காது.
போகட்டும், அடுத்து ஜக்கி ஒரு கதை சொல்கிறார். மார்க் டிவைன் என்னும் அமெரிக்க எழுத்தாளர் சோவியத் சென்றாராம்; அங்கே ஒரு ருஷ்யர் இரு கோழிகளை கொண்டு சென்றாராம். அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராம். அவரிடம், 2 வீடுகள் இருந்தால், அதிலொன்றை மற்றொருவருக்கு கொடுப்பீரா என்றதும், “ கொடுப்பேன்” என்றாராம். உங்களிடம் இரண்டு வண்டிகள் இருந்தால், அதில் ஒன்றை மற்றொருவருக்கு கொடுப்பீரா என்றதும், நிச்சயமாக கொடுப்பேன், என்றாராம். சரி அப்படியானால், நீங்கள் வைத்திருக்கும் 2 கோழிகளில் ஒன்றை கொடுத்துவிடுங்கள் என்றாராம், மார்க் டிவைன். உடனே அந்த ரஷ்யர், நான் வைத்திருப்பதே 2 கோழிகள் தான், அதில் ஒன்றை கேட்கிறீர்களே என்று மறுத்து விட்டாராம்.கதைக்கு கால் இல்லை என்பதை நாம் அறிவோம். அதற்காக, மார்க் டிவைன் மூலம் ஒரு சம்பவத்தை சொல்லும் ஜக்கியிடம், ஒரு லாஜிக் கூடவா எதிர்பார்க்கக் கூடாது?; இதில் வேடிக்கையை பாருங்களேன், வீட்டை தரும் ஒருவர்; வண்டியை தரும் ஒருவர்; ஒரு கோழியை தரமாட்டாரா?; விசயம் என்னவென்றால், ஜக்கி தனது வாசகர்களையும் கூட, தனது பக்த கோடிகளைப் போன்றே அரை மயக்கத்தில் இருப்பதாகத்தான் கருதுகிறார் போலும்! மார்க் டிவைன் 1910 லேயே இறந்துவிட்டார். அவர் எப்படி சோவியத் ரஷ்யாவுக்கு போய் இருக்கமுடியும்.
இந்தியாவைச் சேர்ந்த தாகூர் முதல், நேரு, பெரியார் வரையிலும் ஏராளமானோர் அன்றைய சோசலிசசோவியத்திற்கு சென்று வந்ததையும், பொதுவுடைமையின் மகத்துவங்களை வியந்து பேசியதையும் ஜக்கி வாசுதேவ் அறிந்து கொண்டு பேசியிருக்கலாம். அதிலும், உண்மையான ஆன்மிக வாதியான, கீதாஞ்சலி படைத்த ரவீந்திரநாத் தாகூர், ரஷ்யா சென்றிருந்தபோது ஒரு சம்பவம் சொல்வார்கள். அங்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்ற தாகூர், அந்த மாணவர்களிடம், கணக்கு பாடம் குறித்து ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதில், ஒரு மூட்டை பார்லி தானியத்திற்கு, 100 ரூபிள் லாபம் என்றால், 10 மூட்டைக்கு என்ன கிடக்கும்என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரு மாணவன் எழுந்து, 6 மாதம் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று பதில் கூறியுள்ளான். அதிர்ந்துபோன தாகூருக்கு, பின்னர் தான் அங்கு, பொருட்களை லாபத்திற்கு விற்பது சோசலிச சோவியத்தில் தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரிய வந்ததாம், தாகூர் அதைக்கேட்டு வியந்ததாகவும் கூறுவார்கள். சாமியார் ஜக்கிவாசுதேவிற்கு இது கசக்கும்.இப்படி கம்யூனிசம் குறித்த பேய்க்கதைகளை, தனதுபதிலில் சம்பந்தா சம்பந்தமின்றி அடுக்குகிறார், இந்தகேள்வி பதிலில் ஜக்கி. அதில், 3 கோடிப் பேரை ஸ்டாலின் கொன்றார் என்பது போன்ற அமெரிக்க அவதூறுகளுக்கும் அளவில்லை; இந்தியாவின் நக்சலைட் பூச்சாண்டிகதைகளுக்கும் குறைவில்லை. இதில், உச்சம் என்னவென்றால், உலகில் கம்யூனிசத்தை ஏழைகள் தான் ஆதரிக்கிறார்களாம். அவர்கள் தான், உழைத்து சம்பாதிக்க முடியாமல், அடித்து பிடுங்க முனைந்தார்களாம். ஒரு வாதத்திற்காக, ஜக்கி சொன்ன இந்த விசயத்தை மட்டும்எடுத்துக்கொண்டால், அதாவது உலகில் உள்ள ஒட்டுமொத்த ஏழைகள், கம்யூனிசத்தை ஆதரித்திருந்தால், ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்களோ, அவருக்கு படியளக்கும் சீமான்களோ இருந்திருக்கப் போவதில்லை என்பதென்னவோ உண்மை தான்.
இதில், ஜக்கி தன் முகமூடியை காப்பாற்றிக்கொள்ள, இவ்வுலகில் ஏழைகளுக்கு பதில் செல்வந்தர்கள் தங்களதுசெல்வத்தை பகிர்ந்துகொள்ள முன்வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற சரடு வேறு விட்டிருக்கிறார். அதிலும், தொழில் நிறுவனங்களுக்கு 100 கோடி லாபம் வந்தால்,அதிலே 90 கோடியை வரியாகப் போட வேண்டுமாம். அதற்கு சட்டம் போட வேண்டுமாம். இந்தியாவில், நிலச்சீர்திருத்த சட்டம் இருக்கிறது; வன உரிமை சட்டம் இருக்கிறது; ஏன் வருமான வரிச்சட்டம் இருக்கிறது. இவை
யெல்லாம் எப்படி வளைக்கப்படுகிறது; சிதைக்கப்படுகிறது என்பதெல்லாம் ஒன்றும் அறியாத ருத்ராட்சப்பூனை போல ஜக்கி வாசுதேவ் நடிக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
தனது நண்பரான பெயரில்லா பேராசிரியர் ஒருவரைகாட்டி, தன் மகனுக்கு மட்டுமே நன்மை நினைக்கும் திருதராஷ்டிரனின் சுயநலத்தைப் போல என்று உதாரணம் பேசிப்போகிறார். ஜக்கி தான் ஒரு ஆன்மீக குரு என்று கூறுவதாலும், மகாபாரதத்தை உதாரணம் காட்டியதாலும், நாமும் அதே மகாபாரத கதை ஒன்றை சுட்டிக்காட்ட முனைகிறோம். ஒருமுறை குரு துரோணாச்சாரி, துரியோதனனையும், யுதிர்ஷ்டனையும், அழைத்தார். அஸ்தினாபுரம் நகருக்குள் சென்று வந்து நல்லவர்களை எனக்கு அடையாளம் காட்டுங்கள் என்று உத்தரவிட்டார். முதலில் வந்த துரியோதனன், நகரில் ஒருவர் கூட நல்லவர் இல்லை என்றானாம். ஆனால், அடுத்துவந்த யுதிர்ஷ்டன், நகரில் எல்லோருமே நல்லவர்கள் தான் என்றானாம்.
பின்னர், இருவரையும் அழைத்த துரோணர், உலகில் நல்லதும், கெட்டதும் நாம் பார்க்கும் பார்வையில் தான்இருக்கிறது, என்று நீதி உரைத்தாராம். இந்த மனுநீதிக் கதைகளை நாம் நம்புவதில்லை என்றாலும், ஜக்கியைபோன்றவர்கள் தாங்கள் நம்பும் நீதிக்காவது நேர்மையோடுஇருங்கள் என்கிறோம்.
இறுதியாக ஜக்கி, சந்தை பொருளாதாரத்தில், பேராசை,லாபம் என்றெல்லாம் பேசக்கூடாது என்று கேள்வி கேட்டவரை மிரட்டுகிறார். எல்லாவற்றுக்கும் தகுந்த சட்டங்களை போட்டால் சரியாகிவிடும் என்று கதைக்கிறார். “தொழில் நிறுவனங்களின் கொள்ளை லாப பேராசை பற்றி உங்கள் கருத்து என்ன?” என்ற எளிய கேள்விக்கு, ஜக்கி வாசுதேவ் கம்யூனிசத்தின் மீது பாய்ந்து பிராண்டுவதில் புரிகிறது, அவரது கார்ப்பரேட் பாசம்; முதலாளித்துவ வேசம். ஆனால், சரியான பதில் தரப்படாத கேள்விகள் சாகாவரம் பெற்றவை என்பதை, இந்த கார்ப்பரேட் சாமியார் அறிந்துகொள்வது நல்லது.
கட்டுரையாளர் : சூர்யா, கோவை